Last Updated : 16 Jul, 2020 04:31 PM

17  

Published : 16 Jul 2020 04:31 PM
Last Updated : 16 Jul 2020 04:31 PM

இளம் தலைவர்களுக்குப் பொறுமை இல்லையா?- காங்கிரஸில் விஸ்வரூபம் எடுக்கும் தலைமுறைப் பிரச்சினை

ராஜஸ்தான் அரசியல் நாடகத்தின் விளைவாகத் துணை முதல்வர் பதவியையும், மாநிலக் காங்கிரஸ் தலைவர் பதவியையும் இழந்து நிற்கிறார் சச்சின் பைலட். பாஜக துணையுடன் ஒரு நாடகத்தைத் தொடங்கிவைத்த சச்சின், எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்காததால் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர்கள், கட்சிக் கொள்கையைவிடவும் பெரும் பதவிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறார்களா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. மூத்த தலைவர்களைப் போல இளையவர்களுக்குப் பொறுமை இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ராஜஸ்தான் அரசியல் விவகாரம் வெளிவரத் தொடங்கியதும், “காங்கிரஸில் இளம் தலைவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்” என்று உமா பாரதி போன்ற பாஜக தலைவர்கள் விமர்சித்ததில் ஆச்சரியமில்லை. காங்கிரஸில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது பாஜகவின் அரசியல் தந்திரங்களில் ஒரு பகுதி என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், காங்கிரஸுக்குள்ளிருந்தே இதுபோன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதை நிச்சயம் புறந்தள்ள முடியாதது.

கண்டுகொள்ளப்படாத சமிக்ஞைகள்

ராகுலுக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தபோதே இளையவர்கள் Vs மூத்தவர்கள் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. “பலரது உழைப்புக்குக் கட்சியில் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. ஜோதிராதித்ய சிந்தியாவைத் தொடர்ந்து மேலும் பலர் கட்சியைவிட்டு வெளியேறக்கூடும்” என்று மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் நடிகையுமான நக்மா போன்றோர் அப்போதே எச்சரித்தனர்.

ஆனால், “இளையவர்களின் செயல்திறன், மூத்தவர்களின் அனுபவம், அறிவு ஆகியவற்றின் நியாயமான கலவை காங்கிரஸில் இருக்கிறது. இளையவர்களை வளர்த்தெடுக்கவில்லை என்றால், 135 ஆண்டுகளாகக் கட்சி நீடித்திருக்காது” என்று மூத்த தலைவரான ஆனந்த் ஷர்மா போன்றோர் வாதம் செய்தனர். அதேசமயம், கட்சித் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதால், இது தொடர்பான வெளிப்படையான எந்தக் கருத்தும் தலைமையிடமிருந்து வெளிவரவில்லை.

தற்போது ராஜஸ்தான் காங்கிரஸில் கலகத்தை ஏற்படுத்தியிருக்கும் சச்சின் பைலட், இதுவரை பாஜகவில் சேரவில்லை. தனிக்கட்சி தொடங்குவாரா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. எனினும், மூத்த தலைவரான அசோக் கெலாட் தனக்குப் பல்வேறு வகைகளில் குறுக்கீடுகளைச் செய்தார் எனும் புகாருடன் தனது ஆதரவாளர்களைச் சச்சின் அணி திரட்டியிருப்பது மீண்டும் இந்த விவாதத்தைப் பேசுபொருளாக்கியிருக்கிறது.

கருத்து மோதல்கள்

சச்சின் விவகாரம் பெரிதாக வெடித்ததும், ஹரியாணா எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய், முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஜிதின் பிரசாதா, முன்னாள் எம்.பி.யான பிரியா தத் போன்ற காங்கிரஸ் இளம் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், ‘இளம் வயதிலேயே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், பெரிய பொறுப்புகள் மீதே இப்போதைய இளம் தலைவர்கள் குறியாக இருக்கிறார்கள்’ என்று மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். “அரசியலில் பொறுமை அவசியம். அரசியல் என்பது ஃபாஸ்ட் ஃபுட் அல்ல” என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜாஜி, சந்திரசேகர், வி.பி.சிங் என்று பல முக்கியமான தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறியதற்குக் கொள்கை ரீதியிலான பல்வேறு முரண்பாடுகள்தான் பிரதான காரணம். ஆனால், இன்றைக்கு இளம் தலைவர்கள் தாங்கள் விரும்பும் பதவிகள் கிடைக்காத காரணத்தை முன்வைத்துக் கட்சியிலிருந்து விலகுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

பல்வேறு பதவிகளையும் வாய்ப்புகளையும் கட்சித் தலைமை வழங்கியதால்தான் இளம் தலைவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக, ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் போன்றோரைத்தான் ராகுல் தன் நெருங்கிய வட்டத்தில் வைத்திருந்தார். எந்த நேரத்திலும் தன் வீட்டுக்கு வரும் உரிமை ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உண்டு என்று ராகுலே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்கு முக்கியப் பதவிகளும் வழங்கப்பட்டன.

மறுபுறம் கட்சிக்குள் அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், நடைமுறை சார்ந்தே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 2018-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றதும், முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று நடந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ‘சச்சின்… சச்சின்’ என்று வெளியில் நின்ற அவரது ஆதரவாளர்கள் கோஷமிடவே செய்தார்கள். ஆனால், பெருவாரியான சட்டப்பேரவை உறுப்பினர்கள் அசோக் கெலாட்டைத்தான் முதல்வராகத் தேர்வு செய்தார்கள். அதேசமயம், சச்சின் போன்ற இளம் தலைவர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்று அவர்களைச் சமாதானப்படுத்தும் வேலைகளையும் கட்சித் தலைமை செய்தது. அதனால்தான், அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

கொள்கை உறுதி இல்லையா?
“நாங்களெல்லாம் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸில் நீடித்து வருகிறோம்; தொடர்ந்து கட்சிக்குச் சேவை செய்கிறோம். இளைய தலைவர்களிடம் அதுபோன்ற அர்ப்பணிப்பு இருக்கிறதா?” என்று அசோக் கெலாட் கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரிய பதவிகளுக்கு வருவதற்கு இளம் தலைவர்கள் காட்டும் வேகம் குறித்து திக் விஜய் சிங், மணிசங்கர் அய்யர் போன்ற மூத்த தலைவர்கள் முக்கியமான கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.

“மாதவராவ் சிந்தியாவுக்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் அவர் மகன் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் அவர் கட்சியை விட்டு வெளியேறினார். அதேபோல, ராஜேஷ் பைலட்டுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவரது மகன் சச்சின் பைலட்டுக்கும் அளிக்கப்பட்டது. சச்சின் பைலட்டின் வயது என்ன என்று பாருங்கள்” என்று கேட்கும் திக்விஜய் சிங், “இளம் தலைவர்களுக்குப் பொறுமை இல்லை” என்றும் விமர்சித்திருக்கிறார். அவரது கூற்றில் உண்மை இருப்பதையும் மறுக்க முடியாது.

தனது தந்தை ராஜேஷ் பைலட் சாலை விபத்தில் மரணமடைந்த பின்னர் கட்சியில் சேர்ந்தவர் சச்சின். அப்போது அவருக்கு 23 வயதுதான். 26 வயதிலேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார். 32 வயதில் மத்திய அமைச்சரானார். 36 வயதில் ராஜஸ்தான் மாநிலக் காங்கிரஸ் தலைவர்; 40 வயதில் துணை முதல்வர் என்று இளம் வயதில் அதிவேக வளர்ச்சி கண்டவர் சச்சின்.

இத்தனைக்குப் பிறகும், அவர் முதல்வர் பதவி மீது ஆசைப்பட்டது அதீதம் என்பதே மூத்த தலைவர்களின் கருத்து. எனவேதான், “கேப்டன் அமரீந்தர் சிங், கமல்நாத், பூபேஷ் சிங் பகேல் போன்றோர் அந்தந்த மாநிலக் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துகொண்டே முதல்வர் பதவிக்கு வந்திருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது?” என்று சச்சின் கேட்பதைப் பலரும் ஏற்க மறுக்கிறார்கள். பாஜகவில் இணையப்போவதில்லை என்று சச்சின் தொடர்ந்து மறுத்து வந்தாலும், “ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து சதிசெய்ததற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்று குற்றம்சாட்டும் அசோக் கெலாட், சச்சினின் கொள்கை உறுதியையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்.

உறுதியான தலைமை இல்லை

எல்லாவற்றையும் தாண்டி, தங்களைப் போன்ற ஒருவர் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்தால், தலைமுறை இடைவெளிச் சிக்கல்கள், மூத்தவர்களுடன் அதிகார மோதல் என்பன போன்ற பிரச்சினைகள் இல்லாமல் செயல்பட முடியும் என்று காங்கிரஸின் இளம் தலைவர்கள் கருதுகிறார்கள். கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களுக்குக் காது கொடுக்கும் பொறுமை ராகுலுக்கு உண்டு என்று மணிசங்கர் அய்யர் போன்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஏற்கெனவே, மிலிந்த் தேவ்ரா, ஜிதின் பிரசாதா போன்ற இளம் தலைவர்கள் பாஜக பக்கம் செல்லலாம் என்று பேசப்பட்டு வருகிறது. எனவே, உறுதியான தலைமை இல்லாவிட்டால் இதுபோன்ற அரசியல் புயல்கள் மீண்டும் மீண்டும் மையம் கொள்வதைக் காங்கிரஸால் தவிர்க்கவே முடியாது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x