Published : 26 Sep 2015 10:07 AM
Last Updated : 26 Sep 2015 10:07 AM
தனக்கு குரு என்று ஒருவரில்லை; எல்லோருமே தனக்கு குருதான் என்ற இசை மேதை அவர்!
“ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் பாபநாசம் சிவன்” என்று வர்ணித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.
பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறு வயதில் சிரமங்கள் மிகுந்த வாழ்க்கை. இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால், சாரீர வளமை மிகுந்திருந்த சிவன், குரல் வளத்துடன் பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்துடன் கீர்த்தனைகளைத் தாமே இயற்றிப் பாடியிருக்கிறார். கடந்த நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் பாபநாசம் சிவன்.
சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்த தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், பூலோக கைலாசமான போலகம் என்னும் கிராமத்தில் 1890 செப்டம்பர் 26-ல், அதாவது புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று சதய நட்சத்திரத்தில் ராமாமிருதம்-யோகாம்பாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். குழந்தைக்குத் தொட்டிலிட்டு ராம சர்மா என்று பெயரிட்டார்கள். சுருக்கமாக ராமையா (மூத்த மகன் ராஜகோபாலன், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை துணைவி யான ஜானகியின் தந்தை).
அரங்கேற்றம்
1910-ம் ஆண்டு. திருவாரூர் தியாகேசன் சந்நிதியில் ‘குந்தலவராளி’ ராகத்தில் தம்முடைய முதல் பாடலை அரங்கேற்றினார் பாபநாசம் சிவன்.
‘உன்னைத் துதிக்கவருள் தா இன்னிசையுடன்
உன்னைத் துதிக்கவருள் தா'
அங்கு நின்றுகொண்டிருந்த மகாவித்வான் சிமிழி சுந்தரமய்யர் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டார். "தியாகராஜர், தமிழ்ல பாடல்கள் எழுதாம போய்விட்ட குறையைப் போக்கிக்கொள்ள, இப்ப சிவனா வந்து பிறந்திருப்பார்னு தோண்றது... இவர் தமிழ் தியாகய்யர்" என்று போற்றினார். இன்று வரை அந்தப் பட்டப் பெயர் சிவனுக்கு நிலைத்து நிற்கிறது,
திருமணம்
1917-ம் ஆண்டு. "வாழ்நாள் முழுவதும் ஈஸ்வர பஜனையை சிவன் விடாமல் நடத்திவர வேண்டுமானால் அவருக்கு தேக ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். சீக்கிரமே முகூர்த்தம் வைக்கணும். மற்றதெல்லாம் என் பொறுப்பு'' என்று திருவாரூர் கோயில் பங்குனி உத்திர உற்சவத்துக்குப் பொறுப்பேற்ற பிரபல வக்கீல் பழையவலம் சுப்பய்யர் சொல்ல, அம்மணி என்கிற லட்சுமியைக் கரம்பிடித்தார் சிவன். நான்கு நாள் கல்யாணம். இரட்டைக் குதிரை பீட்டனில் ஊர்வலம். திருமணத்துக்கு வசூலானதில் செலவு போக ரூ.2,000 மிஞ்சியது. அதை ஏனங்குடி நாயக்கர் என்பவரிடம் கொடுத்து, “சிவனுக்கு ஏதாவது பெரிய கஷ்டம் வந்தால் கொடுங்கள்” என்று அதை வைப்பு நிதி மாதிரி ஒப்படைத்துவிட்டார் சுப்பய்யர். தனது ஏழாவது வயதில் தந்தையை இழந்தார் சிவன். இழப்பின் துயரம் அவரை வாட்டியது. குடும்பம் போலகத்தை விட்டுப் புலம் பெயர்ந்துவிடத் தீர்மானிக்க, தாயுடனும் சகோதரருடனும் திருவனந்தபுரத்தை அடைந்தார்.
சொந்த ஊர் போலகம் என்றாலும், ராமய்யாவுக்கு பாபநாசம் சிவன் என்ற பெயர் வந்தது எப்படி?
பாடும் சிவன்
திருவனந்தபுரத்திலிருந்து தஞ்சாவூருக்குத் திரும்பிய சமயத்தில் நாடோடிபோல் திரிந்தார் அவர். ஒவ்வொரு கோயில் உற்சவமாகச் சென்று பாடிக்கொண்டிருந்த சமயம் அது. ஒருமுறை கணபதி அக்ரஹாரத்தில் நான்கு முழ வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சிவன் வருவதைப் பார்த்தார்கள் பக்தர்கள். நெற்றியிலும், தோள்பட்டையிலும், மார்பிலும் பட்டை பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராட்ச மாலை. ‘அரும் பொன்னே, மணியே’ என்ற தாயுமானவர் பாடலை பக்தி மணம் கமழ அவர் பாடிக்கொண்டிருக்க, அதில் லயித்துப் போனார்கள் பக்தகோடிகள்.
‘‘கைலாசத்திலிருந்து அந்தப் பரமசிவனே நேரடியாக வந்து தரிசனம் தந்ததுபோல் இருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டார் சாம்பசிவ ஐயர் என்கிற பக்தர்.
இப்படி சிவனாக மாறிய ராமையா, பாபநாசத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய தன் சகோதரருடன் சிறிது காலம் தங்கினார். அப்போதிலிருந்து பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டார். பஜனைப் பாடல்கள் மீது பாபநாசம் சிவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது திருவனந்தபுரத்தில். நீலகண்டதாசர் என்ற பரம சிவபக்தர், நூற்றுக்கணக்கான சிஷ்ய கோடிகளுடன் தினமும் உஞ்சவிருத்தி, சமாராதனை, சிவாலயங்களில் பஜனையெல்லாம் செய்துகொண்டிருந்தார். இந்த பஜனைக் குழுவில் சிவனும் கலந்துகொள்வார். அனைவருக்கும் இவர் ஏழையென்ற இரக்கமும் அபிமானமும் ஏற்பட்டது. அப்போது முதல் நீலகண்டதாசரின் கீர்த்தனைகள் பல சிவனுக்குப் பாடமாயின. தேவாரமும் திருவாசகமும் அவருக்குத் தெரியவந்தன. தாயுமானவரின் பாடல்களைப் பாடம் செய்துகொண்டார். திருப்புகழ் மனப்பாடமானது. நந்தன் சரித்திரம் தெரிந்துகொண்டார். பல உருக்கமான நாமாவளிகளை அவரல் பாட முடிந்தது.
‘‘எனக்கு குரு என்று ஒருவரில்லை. எல்லோருமே என்னுடைய குருநாதர்கள்தான்’’ என்று பெருமையுடன் குறிப்பிடுவார் சிவன்.
அன்னை தெய்வம்
தன்னுடைய தாயாரைத் தெய்வமாகப் போற்றியவர் பாபநாசம் சிவன். அட்சரம்கூட எழுதவோ படிக்கவோ தெரியாத தன் அன்னை, எப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைக் கற்றுக்கொண்டார் என்ற வியப்பு சிவனிடம் கடைசிவரை இருந்திருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் முந்நூறுவரை பாடமாகியிருந்தது அம்மாவுக்கு. க்ஷேத்ரக்ஞர் பதங்களும், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பக்த கவிகள் பலரின் பாடல்களும் அவருக்குத் தெரிந்திருந்தன. இவை தவிர, அந்தக் காலத்துப் பெண்களுக்கே உரித்தான கல்யாணப் பரிகாசப் பாடல்களும், நலங்கு, ஊஞ்சல், ஓடம், கும்மி, கோலாட்டம் போன்ற குதித்துப் பாடும் பாடல்களும் அவருக்கு அத்துப்படி!
தனக்கு வாய்த்த இசையறிவுக்கும், ஒருவகைக் குரல் இனிமைக்கும் காரணம், இத்தகைய தாயிடம் கர்ப்பவாசம் செய்யக் கிடைத்த பாக்கியமும் அவருடைய ஆசியும்தான் என்று பூரிப்புடன் கூறிக்கொள்வார் பாபநாசம் சிவன்.
திருவையாறு ஸப்த ஸ்தான விழாவில் 1912 முதல் 1957 வரையில் 45ஆண்டுகள் விடாமல் பஜனை நடத்தியிருக்கிறார் சிவன். 19 ஆண்டுகள் நாகையில் ஆடிப்பூர பஜனை நிகழ்த்தியிருக்கிறார்.
சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு தனது இறுதிக் காலம் வரையில் மயிலையில் மார்கழி மாதத்திலும், பங்குனி உத்திரத் திருவிழாவிலும், மகாசிவராத்திரியின் போதும், அறுபத்து மூவர் உற்சவத்திலும் சிவன் நடத்திவந்த பஜனையில் கலந்துகொண்டு மகிழாத வித்வான்களும், ரசிகப் பெருமக்களும் இல்லை.
‘‘இது எல்லாமே இந்த அடிமைக்கு ஆண்டவன் அளித்த திருவருள் அன்றி வேறில்லை’’ என்பார்.
மியூசிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி’ விருதுபெற்ற வருடம் நிகழ்த்திய தலைமை உரையின்போது இவ்வாறு குறிப்பிட்டார் பாபநாசம் சிவன்:
‘‘தற்கால சங்கீதம் தொழிலாகப் போய்விட்டது. குடும்ப சம்பாத்தியத்துக்கு ஒரு சாதனமாகிவிட்டது. ஈசுவரார்ப்பணம் என்பது மறைந்துவிட்டது. அதனால் குருபக்தி குறைந்துவிட்டது. முன்காலத்தில் நடைமுறையிலிருந்த குருகுல வாசம் தற்போது அரிதாகிவிட்டது. தக்க குருவும் இல்லை, சீடரும் இல்லை. ஒருவருக்கும் பொறுமையில்லை!”
- வீயெஸ்வி, தொடர்புக்கு: vsv1946@gmail.com
இன்று பாபநாசம் சிவனின் 125-வது பிறந்த நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT