Published : 12 Jul 2020 08:20 AM
Last Updated : 12 Jul 2020 08:20 AM
ஊரடங்கு நாட்களில் செய்த நற்செயல்களில் ஒன்றாக குருதத் இயக்கி நடித்த ‘ப்யாசா’ திரைப்படத்தைப் பார்த்ததைச் சொல்வேன். ‘ப்யாசா’ படத்தின் நாயகன் அன்றைய கல்கத்தாவில் வாழும் உருதுக் கவிஞன். அவன் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு, தங்கியிருக்கும் பூங்காவிலும் முன்னாள் காதலியின் வீட்டில் நடக்கும் விருந்திலும் அவன் தன் கவிதைகளைப் பாடும் கவிஞன். கவிதையின் ஆழ்ந்த அனுபவம், த்வனியைக் கொண்ட பாடல்களாக அவை திகழ்கின்றன.
உருதுக் கவிதைகளை மது விருந்துகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பாடும் மரபிலிருந்து கவிஞன் விஜய் என்னும் அந்தக் கதாபாத்திரத்தை இயல்பாகப் பார்வையாளர்களால் ஏற்க முடிகிறது. தமிழ் சினிமாவில் கவிஞன் பிரதானக் கதாபாத்திரத்தின் உருவத்தை எடுக்கும்போதெல்லாம் தோற்றுப்போவதற்கு அவனுக்கு ஏற்கப்பட்ட பொது அடையாளம் ஒன்று நம் சமூகத்தில் இல்லாததுதான் காரணம் என்று தோன்றுகிறது. தமிழில் புதுக்கவிதையானது ‘எழுத்து’, ‘வானம்பாடி’ என்று இரண்டு குணங்கள், இரண்டு உள்ளடக்கங்கள், இரண்டு நவீன வெளிப்பாடுகளாகத் தோற்றம் கொண்டு நிலைபெற்ற காலத்தில், ‘வானம்பாடி’ இயக்கத்தின் முத்திரைகளைக் கொண்டவர் கவிஞர் வைரமுத்து. இவர் பாடலாசிரியராக பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான ‘நிழல்கள்’ திரைப்படத்திலும் நாயகர்களில் ஒருவன் கவிஞனின் சாயலைக் கொண்டவன். தலையை உயர்த்தி வானத்தை உசாவும் நடிகர் ராஜசேகரின் ஏக்கம் மிகுந்த முகத்தில் தற்செயலாக கவிஞர் ஆத்மாநாமின் சாயலும் உண்டு. அவன் தோல்வியுற்றவன்; சினிமாவும் தோல்விதான். ஆனால், புதுக்கவிதை அடைந்த நவீனத்தைத் திரைப்படப் பாடலுக்குள் கொண்டுசெல்லும் முயற்சியில் இங்கிருந்துதான் வெற்றிபெறத் தொடங்குகிறார் வைரமுத்து.
காதல், தத்துவம், திருவிழாக் கோலம், பிரிவு, மொழி-இனப் பெருமிதம், தாலாட்டு, சகோதரப் பாசம் என்று இந்த நாற்பது ஆண்டுகளில் வைரமுத்து கையாண்ட உள்ளடக்க வகைமை விரிவானது. கற்பனையின் அகண்டம், வெவ்வேறு உள்ளடக்கங்களைக் கையாளும் மொழி, அனுபவச் செழுமை, புதுமை குறையாத பாடல்கள் அவருடையவை. சந்தத்துக்கு நிறைக்கும் வெறும் காற்று வார்த்தைகள் அவரிடம் குறைவு. கொசுவ மூலைகளிலும் அர்த்தம் கொண்ட வார்த்தைகளைக் கொடுப்பதில் சிரத்தை உள்ளவர். ‘பனி விழும் மலர் வனம்’ பாடலில் கண்ணதாசனின் தொடர்ச்சியாக மரபோடு சம்பிரதாயமான வெளிப்பாட்டோடு இழையும் வைரமுத்து அதே காலகட்டத்தில், ‘அந்திமழை பொழிகிறது’ பாடலுக்குள் அக்காலகட்டத்தின் ஒரு நிலவெளியையும் ஒளியையும் கடத்தத் துணிகிறார்.
காதலை வெளிப்படுத்துவதற்கே வாய்ப்பில்லாத ஒரு கட்டுப்பட்டிச் சூழலிலிருந்து, காலத்திலிருந்து, விரகத்தை நிறைவேறாமையைப் பாடித் தீர்த்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர் வைரமுத்து. கண்ணுக்குள் தைத்த முள்ளாக இருந்திருக்கிறது காதல் அப்போது. காதல் தனது சுதந்திர வெளிப்பாட்டை அனுதினமும் வரம்பற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்திலும் முன்னணி இடத்தில் நிற்கிறார். ‘உன் வாசலில் எனை கோலம் இடு, இல்லையென்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே’ என்று ஏக்கத்தில் தவித்த உள்ளடக்கம்தான், ‘ஃபனா ஃபனா ஃபனா யாக்கை திரி காதல் சுடர் அன்பே… தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம்’ என்று மாறிவிட்ட உறவுகளின் விதிகள், மாறிவிட்ட உலகத்தின் வீதியில் சுதந்திரத்தோடு, காதலின் வழியாக இறவாமையைக் கோரி அவரது வாகனத்தில் சீறிக்கொண்டிருக்கிறது. ‘நிழல்கள்’ திரைப்படம் வழியாக வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்த நவீனம் உச்சத்தை அடைந்த பாடல் என்று அவருடைய ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் வரும் ‘மழைக்குருவி’ பாடலைச் சொல்லலாம். தீராமல் சுழன்று, சுற்றிக்கொண்டேயிருக்கும் உணர்வைக் கொடுக்கும் பாடல் அது. உறவு, பிரிவு, தனிமை, விடுதலை என்று அந்த ஒரு பாடலுக்குள் வரும் இரண்டு பறவைகளின் கதையான அந்தப் பாடலில், வைரமுத்து மரபிலிருந்து பெற்ற அத்தனை மொழிச் செழுமையும் மாறாத புதுமையும் சேர்ந்திருக்கிறது.
திரைப்படப் பாடல் என்பது கவிதையின் சுதந்திரம், இயல்புத்தன்மையைக் கொண்டதல்ல. வார்த்தைகளின் கணிதம், செய்நேர்த்தித் திறனும், மிகைபாவமும் அங்கே அவசியம். செய்நேர்த்தியோ மிகுபாவனையோ துருத்திக்கொண்டு தெரியாமலும் இருக்க வேண்டும். தான் அழகென்று தெரியும்போது, அந்த அழகென்ற தன்னுணர்வையும் கைவிடுவதுதான் அழகு; அதுதான் கலையும்கூட. அந்தத் தன்னுணர்வைக் கைவிடும்போதுதான் ‘மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்’ போன்ற பாடல்கள் ஜெயப்ரதா என்ற அன்றைய அழகு இலக்கணத்தை நினைவில் நிறுத்திய சித்திரமாக மாற்றுகின்றன. அந்தச் செய்நேர்த்தி சற்றும் தெரியாத அழகுதான், அதன் ஆசிர்வாதம்தான், ‘வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி, ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி, குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி, ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி’ என்ற அபூர்வமான தாலாட்டாக மாறுகிறது.
ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலைகளுக்குள்ளான நினைவை மீட்டும் ‘தாய் தின்ற மண்’ பாடலை முழுக்க கவிதையாகவே அனுபவிக்க முடியும். ‘கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள், காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசி.’ நினைவில் புதைந்துள்ள ஒரு பேரரசு வார்த்தைகள் வழியாக எழ முயலும் தோற்றம் அந்தப் பாடலில் உள்ளது. வைரமுத்துவின் சிறப்புத் திணை என்று பிரிவுப் பாடல்களைச் சொல்வேன். தென் தமிழ்நாட்டின் வாழ்க்கை, புழங்குபொருட்கள், தாவரங்கள், உயிர்கள், வழக்காறு எல்லாம் தென்படும் படைப்புகள் அவை. ‘ராசாத்தி என்னுசிரு என்னுதில்ல’, ‘தென்கிழக்குச் சீமையிலே’ போன்ற பாடல்களை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். ‘காடு பொட்ட காடு’ பாடலில் வெங்கரிசல் நிலம் கவிதையாகவே ரூபம் கொள்கிறது. இத்தனை கிராமியத்தன்மையைக் கொண்ட பாடல்களிலிருந்து ‘கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு’ என்று இன்னொரு முனைக்கும் லாகவமாக வைரமுத்துவால் கடக்க முடிகிறது. ‘ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈஸி ஊர்வசி…’ என்று துள்ளும் படத்திலேயே, ‘காற்று குதிரையிலே எந்தன் கார்குழல் தூதுவிட்டேன்…’ என்று செவ்வியல் தன்மையுடனும் அவரால் கைகோக்க முடிகிறது.
ஒரு யுகச் சந்திப்பில் வைரமுத்து என்னும் நிகழ்வு உருவெடுக்கிறது. திரைப்பாடல் என்னும் ஊடகத்தில் அவர் சாத்தியப்படுத்தியிருக்கும் வகைமைகளை விரித்துப் பார்க்கையில், தனது கற்பனையால் அகண்டம் கொண்ட கலைஞர் என்று வைரமுத்துவுக்கு இணை சொல்ல அவர் காலத்தில் யாரும் இல்லை!
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT