Published : 06 Jul 2020 07:59 AM
Last Updated : 06 Jul 2020 07:59 AM

பொதுமுடக்கத்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது!- ஜெயப்பிரகாஷ் முளியில் பேட்டி

கரோனா தொற்று தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளதன் விளைவாக, நாட்டின் பத்து நோயாளிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? நோயைக் கையாள முடியாமல் அரசு திணறுகிறதா இல்லை அரசு கூறுவதுபோல், இவ்வளவு மோசமான தொற்றுப் பரவலுக்கு மக்கள்தான் காரணமா? நாட்டின் முன்னணி தொற்றுப்பரவலியல் அறிவியலாளர் (Epidemiologist) ஜெயப்பிரகாஷ் முளியில், இது சார்ந்த புரிதலை அதிகரிக்கிறார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர், தேசிய தொற்றுநோய்ப்பரவலியல் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவரான ஜெயப்பிரகாஷ் உடனான பேட்டி:

கரோனா தொற்றுப் பரவலில் புதிய பரிமாணம் உருவாகியிருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே...

கரோனா பரவும் முறையில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. சளி, எச்சில் துளிகள் மூலமாகவே இந்த நோய் பரவும். அதுவும் நம் கண், மூக்கு, வாய் வழியாகத்தான். எனவே, முகக்கவசம் அணிவதே இதைத் தடுப்பதற்கான முதன்மை வழி. வேறு வகைகளில் பரவவில்லை என்பதற்கு மருத்துவர்களே அத்தாட்சி. இல்லையென்றால், இந்நேரம் கரோனா சிகிச்சையில் ஈடுபட்ட எல்லா மருத்துவர்களும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மக்கள் அருகருகே நிற்பது, முகக்கவசம் அணியாமல் இருப்பதுதான் இந்த நோய் பரவுவதற்கான அடிப்படைக் காரணம். சோப்பு கொண்டு கை கழுவுவதும் நல்லது. அதேநேரம் காய்கறி, பால் பாக்கெட் என எல்லாவற்றையும் கழுவிக்கொண்டிருப்பது தேவையற்றது. இந்த நோய் பெரும்பாலும் மிதமான சளி, காய்ச்சலையே ஏற்படுத்தும். ஒரு முறை நோய் கண்டவருக்கு மறுமுறை இந்த நோய் தாக்காது; நம் உடல் அந்த நோய்க்குத் தடுப்பாற்றலைப் பெற்றுவிடும். அதே நேரம், நோய் அறிகுறியற்றவர்கள், மிதமான தொற்று பாதிப்பு இருப்பவர்கள் எல்லோரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை. 80-90% பேர் இப்படிப்பட்ட தொற்றைக் கொண்டவர்களே. கரோனா தாக்கியவர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்தும், தனித்தும் இருந்தால் மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தடுக்கலாம்.

தனிமைப்படுத்தப்படுபவர்களில் ஏற்படும் இறப்பு, இளம் வயதினர் இறப்பு போன்றவை புதிய சிக்கல்களா?

மருத்துவமனைப் படுக்கைகள் மதிப்பு மிக்கவை. தீவிரத் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பவர்களுக்குத்தான் அவை செல்ல வேண்டும். முதியவர்களுக்கும், துணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்கினால், பாதிப்பு மோசமாக இருக்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போதுகூட இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இளம் வயதினர் சிலர் இந்த நோய்க்குப் பலியாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது சாலை விபத்துகளில் ஏற்படும் மரண விகிதத்தைவிட மிகக் குறைவே.

கரோனா தடுப்புக்கு ஊரடங்கு உத்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வைரஸ் தொற்றுகள் தொடர் கதை. ஏற்கெனவே நிறைய வந்து சென்றுள்ளன. எதிர்காலத்திலும் வரும். இந்தப் பின்னணியில், பொதுமுடக்கம் போன்ற வழிமுறைகள் வெளிநாடுகளுக்கு, சிறிய நாடுகளுக்குப் பலனளிக்கலாம். நம் நாட்டில் மக்கள் வறுமை, பசியால் இறந்துபோவார்கள். பொதுமுடக்கம், தனிமைப்படுத்துதல், வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் இந்த நோயை இன்றைக்குள்ள நிலையில் முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியாது. ஏற்கெனவே, இந்த நோய் எல்லா இடத்துக்கும் பரவிவிட்டது. இந்த வைரஸால் எளிதில் பாதிக்கப்பட சாத்தியமுள்ளவர்களை எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள சவால். முதியவர்களையும் துணைநோய் உள்ளவர்களையும் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டுக்கு அதுவே அவசியம்.

இந்தியா முழுவதும் ஓர் உத்தியாகக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம், குறிப்பாக தமிழகத்தில் தீவிரமாக அது நீடிப்பது தவறு என்கிறீர்களா?

உண்மையில், பொதுமுடக்கம் என்பது ஒரு நோய்த்தொற்று பரவியிருக்கும் காலத்தை நீட்டிக்கவே செய்கிறது. இதனால், தீவிர நோய்த்தொற்று பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ வசதிகளை நாடுவதே பிரச்சினைக்குரியதாக ஆகிவிடுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அருகில் இருந்த சிறு தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன, போக்குவரத்து வசதிகளும் தடைசெய்யப்பட்டு எல்லாமே சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், எத்தனை பேர் அரசு மருத்துவ வசதிகளை உடனடியாக நாட முடியும்? இதனால், தீவிர நோய் பாதிப்பு கண்ட பலரும் வீட்டிலேயே இறந்துபோகிறார்கள். தற்போது நமக்குக் கிடைக்கும் இறப்பு குறித்த தகவல்கள் அரசு மருத்துவ அமைப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே. நோய்த்தொற்று பாதிப்பு குறைந்த பிறகு, ஐசிஎம்ஆர் அது குறித்து ஆய்வு நடத்தி எண்ணிக்கையை வெளியிடும். கரோனா ஏற்கெனவே பரவலாகிவிட்டது. எனவே, பொதுமுடக்கத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே என் கருத்து.

மாற்று வழிமுறைகள் என்ன? எப்போது இந்த நோய்த்தொற்று முடிவுக்கு வரும்?

இந்த நோய் கட்டுக்குள் வராமல் போய்விடும் என்று அஞ்சத் தேவையில்லை. இந்த நோய் கட்டுக்குள் வருவது ஒவ்வொரு பகுதியையும் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு பகுதியும் சமூக நோய்த் தடுப்பாற்றலைப் (Herd Immunity) பெறும் காலம் வேறுபடும். சென்னையையே எடுத்துக்கொள்வோம். அது ஒரு பெருநகரம் என்பதால் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. முன்பு நோய்த்தொற்று அதிகமாகப் பரவியிருந்த பகுதிகள் சிலவற்றில் தற்போது குறைந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படிச் சிறிது சிறிதாக ஒவ்வொரு பகுதியும் நோய்த்தொற்றின் தீவிர பாதிப்பிலிருந்து விடுபட்டுவிடும். நோய்த்தொற்றை எளிதில் பெறவும் பரப்புவதற்கும் சாத்தியம் இருப்பவர்கள், குறிப்பிட்ட பகுதியில் குறைந்துவிட்டதையே இது காட்டுகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியாக விடுபட்டு, ஒரு கட்டத்தில் தீவிர நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து சென்னை மீண்டுவிடும். அதன் பிறகு, ஒருசிலர் பாதிக்கப்படலாம் என்றாலும், தீவிரத்தன்மை குறைந்துவிடும். ஆனால், குறிப்பிட்ட ஒரு நாள், ஒரு வாரத்தில் நோய்த்தொற்று மட்டுப்பட்டுவிடும் என்பதையெல்லாம் கணிப்பது சாத்தியமில்லை.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x