Published : 30 Jun 2020 07:40 AM
Last Updated : 30 Jun 2020 07:40 AM
இந்தியாவை ஆண்ட பிரதமர்களிலேயே மிகவும் தனித்துவமானவர் பி.வி.நரசிம்ம ராவ். நேரு குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸின் முதல் பிரதமர் என்பதோடு, தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் அவர்தான். ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை வலுவை காங்கிரஸோ அல்லது அதன் கூட்டணியோ பெறாத நிலையில், நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராகக்கூட இல்லாத, கிட்டத்தட்ட அரசியல் சந்நியாசத்துக்குத் தயாராகிவிட்டிருந்த நரசிம்ம ராவ் பிரதமரானதும், ஐந்து ஆண்டுகள் அவர் ஆண்டு முடித்ததும் அல்ல அவருடைய சாதனை; எண்ணிக்கை அடிப்படையில் மிகப் பலவீனமான ஒரு அரசை வைத்துக்கொண்டு இந்தியாவைப் புதிய பொருளாதார யுகத்துக்கு அவர் கடத்தினார்.
ராவ் மாணவப் பருவத்திலிருந்தே அரசியல் உந்துதல் பெற்றவராக இருந்தார். வந்தே மாதரப் போராட்டம், சுதந்திரப் போராட்டம், ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான கிளர்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றார். தெலுங்கு, கன்னடம், தமிழ், மராட்டி, ஒடியா, இந்தி, உருது, வங்காளி, சம்ஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபி, பாரசீகம் ஆகிய அந்நிய மொழிகளிலும் சரளமாகப் பேச முடிந்த பன்மொழி அறிஞர் அவர். “17 மொழிகளில் பேச வல்லவர். ஆனால், எல்லா மொழிகளிலும் மெளனம் காக்கிறார்” என்ற விமர்சனம் அவருடைய ஆகிருதியையும் அணுகுமுறையையும் ஒருசேர வெளிப்படுத்த கூடியது. நிறைய வாசிப்பார். மராட்டி, தெலுங்கு, இந்தி நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
மாநிலத்திலிருந்து மத்திக்கு
1957 முதல் 1977 வரையில் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும், பத்து ஆண்டுகள் மாநில அமைச்சராகவும், சுமார் ஒன்றரை ஆண்டுகள் முதல்வராகவும் பதவி வகித்தவர். ஆந்திர முதல்வராக இருந்தபோது தெலங்கானா பகுதியில் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். மாநில காங்கிரஸ் தலைவர்களின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பதவி விலகினார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் வெளியுறவு, பாதுகாப்பு, உள்துறை அமைச்சராகச் செயல்பட்ட ராவ், நாடாளுமன்ற விவாதங்களில் நறுக்குத் தெறித்தாற்போலப் பேசுவார்.
நீரிழிவு நோயின் காரணமாக 1991 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார். அந்தத் தேர்தலின்போதுதான் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார். 244 தொகுதிகளில் வென்ற தனிக் கட்சி என்றாலும் பெரும்பான்மை வலுவும் இல்லாமல், நேரு குடும்பத்து நேரடி தலைமையும் இல்லாமல், கடுமையான கோஷ்டி பூசல்களோடு சிறுத்துப்போயிருந்தது காங்கிரஸ். கட்சியில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக சரத் பவார், பிரணாப் முகர்ஜி, மாதவராவ் சிந்தியா, அர்ஜுன் சிங் என்று பல பெயர்கள் அடிபட்டன. எல்லோருமே ஆளுக்கொரு கோஷ்டிகளைப் பராமரித்துவந்தவர்கள். அப்போது அரசியலுக்கு வெளியே இருந்தார் சோனியா. ஆயினும் காங்கிரஸ் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணத்தில் அவர் மீது திணிக்கப்பட்ட பொறுப்பை அவர் தவிர்க்கவில்லை. யாரும் எதிர்பாராத வகையில், நரசிம்ம ராவைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என்றார் சோனியா. பிரதமரான பிறகு நந்தியால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட நரசிம்ம ராவ் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
நிலைகுலைந்த பொருளாதாரம்
நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. உலக வங்கி, பன்னாட்டுப் பண நிதியம் போன்றவற்றிடம் வாங்கிய கடனுக்கு அடுத்த தவணை கட்டுவதற்குக்கூட பணமில்லை. உற்பத்தி குறைந்தது. விலைவாசி உயர்ந்தது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது. தங்கமும் பெட்ரோலியக் கச்சா எண்ணெயும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவையும் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டன. அதேசமயம், இந்தியாவின் ஏற்றுமதி படிப்படியாகக் குறைந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இதனால், அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்து பற்றாக்குறை ஏற்பட்டது. பொருளாதாரத் துறையில் மட்டும் சவால்கள் இல்லை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போனது. பஞ்சாபில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறையவில்லை. ஜம்மு-காஷ்மீர் வழக்கம்போலவே வன்முறைச் சம்பவங்களால் நிலைகுலைந்திருக்க வடகிழக்கு மாநிலங்களும் காஷ்மீர் போன்ற சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.
ராவுக்குப் பொருளாதாரமும் தெரியும் என்றாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்ததில்லை. பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் சரியாகத் திட்டமிட்டு வழிநடத்த ஒரு நிபுணர்தான் வேண்டும் என்று முடிவெடுத்தார். உலக வங்கியின் ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித் துறை செயலர், அரசின் பொருளாதார ஆலோசகர் என்று பல பதவிகளில் தன்னுடைய திறமையை நிரூபித்திருந்த – ஆனால் அரசியல் வெளியில் அறியப்படாதவரான - மன்மோகன் சிங்கை நிதியமைச்சர் ஆக்கினார். ராவ் எடுத்த மகத்தான முடிவு அது என்று சொல்லலாம். அதுதான் பின்னாளில் இந்தியாவின் மிகச் சிறந்த ஆட்சிக் காலத்தை அளித்த பிரதமர் என்ற இடத்தை நோக்கி மன்மோகன் சிங் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. சீர்திருத்தங்கள் முழு வீச்சில் நடக்க துணை நின்றார் ராவ். லைசென்ஸ் முறை ஒழிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்திய ஏற்றுமதி பெருக வரிச் சலுகை, கடனுதவி, முன்னுரிமை உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் வரம்புகளும் நீக்கப்பட்டன. இந்தியப் பங்குச் சந்தை நவீனமுறைப்படி மாற்றியமைக்கப்பட்டது. இந்திய முதலீட்டாளர்களும் வெளிநாட்டவர்களும் விரும்பிய வகையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சேவைத் துறையின் வளர்ச்சி
சட்டம் படித்தவர், பொருளாதாரம் அறிந்தவர், நிர்வாக நிபுணர் என்பதுடன் கணினித் துறையில் ‘புரோகிராமிங்’கிலும் வல்லவராக இருந்தார் ராவ். தகவல் தொழில்நுட்பத் துறை வளர்வதற்கு, அதுவும் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, புனே, நாக்பூர், டெல்லி ஆகிய நகரங்களில் பெருகுவதற்குத் தாராளமாக அனுமதித்தார். அந்தத் துறையில் ஏற்பட்ட எழுச்சியும் சேவைத் துறை அடைந்த விரிவாக்கமும் இந்தியப் பொருளாதாரத்தை வளப்படுத்தின. ராவ் ஆட்சியின்போது வரி விகிதங்கள் மிகவும் குறைவாக இருந்தன. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் ஊக்குவிப்புகள் தரப்பட்டன. மக்களுடைய வாங்கும் சக்தி பெருகியது. குறைந்த கண்காணிப்பு - நிறைந்த செயல்பாடு என்ற கொள்கையை பிரதமரின் அலுவலகம் கடைப்பிடித்தது.
சீனாவின் வல்லாதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய வெளியுறவுக் கொள்கையின் பார்வை கிழக்கு நோக்கி திருப்பிவிடப்பட்டது. கிழக்காசிய நாடுகள் கவனம் பெற்றன. ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன்கூட உறவை இதமாக்கினார் ராவ். அணு ஆயுதத் தயாரிப்பிலும் குறைவைக்கவில்லை. ஆனால், அணுகுண்டு சோதனை நடத்த முடியாமல் அமெரிக்கா கண்காணித்துவந்தது. அப்போதைய கவனம் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதில் இருந்ததால் தேவையில்லாமல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டாம் என்று சோதனையை ஒத்திவைத்தார். ஆனால், அடுத்த பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றபோது, “அணுகுண்டைத் தயாரித்து வைத்திருக்கிறேன், இனி உங்கள் சமர்த்து” என்று சொல்லிவிட்டார். வாஜ்பாயும், அவருக்குப் பிறகு பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகனும் ராவின் வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றினர்.
ராவ் ஆட்சியின் பெரும் களங்கம், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பானது அவரது ஆட்சிக் காலத்தில் நடந்தது என்பதாகும். மும்பை குண்டுவெடிப்பு பெரும் விமர்சனத்தை அவர் ஆட்சி எதிர்கொள்ள வழிவகுத்தது. பதவியைத் தக்கவைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட குற்றஞ்சாட்டும், ராவுக்காக சாமியார் சந்திராசாமியிடம் லஞ்சம் கொடுத்ததாக ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பாடக் கூறிய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ராவ் மீதான பெரும் குற்றச்சாட்டுகளாக அமைந்தன. சில பிரச்சினைகளின் உடனடியாக முடிவெடுக்காமல் ஒத்திப்போடுவதும் ஒரு வகை தீர்வு என்பது ராவின் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது. நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எண்ணிக்கை பலம் எவ்வளவு இருக்கிறது என்பது அல்ல; எவ்வளவு ஆக்கபூர்வக் காரியங்களைத் தன்னுடைய ஆட்சியில் நிறைவேற்ற முடிகிறது என்பதைக் கொண்டே ஒரு தேர்ந்த நிர்வாகியை வரலாறு மதிப்பிடுகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் ராவின் ஆட்சிக் காலம்!
- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com
ஜூன் 28: பி.வி.நரசிம்ம ராவ் நூற்றாண்டுத் தொடக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT