Published : 21 Jun 2020 07:10 AM
Last Updated : 21 Jun 2020 07:10 AM

மாநிலங்களவையின் முக்கியத்துவம்

வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை ஏப்ரல் 3, 1952 அன்று நடைமுறைக்கு வந்தது. அதன் முதல் கூட்டம், அதே ஆண்டு மே 13 அன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவை அமைக்கப்படுவது பற்றி அரசமைப்புச் சட்ட விவாத அவையில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மத்திய சட்டமியற்றும் மன்றத்தில் இரண்டு அவைகள் அமைவதைப் பற்றி மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆதரித்தும் எதிர்த்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்ட அவையின் முக்கிய உறுப்பினர்கள் எட்டு நாட்கள் தீவிரமாக விவாதித்த பிறகுதான் மாநிலங்களவையும் அதற்கான உத்தரவுகளும் பிறந்தன. 68 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்களவையின் தேவை குறித்து விவாதிக்கப்பட்ட விவரங்களையும் அதன் செயல்பாடுகளையும் திரும்பிப் பார்க்கலாம்.

மத்திய சட்டமன்றமானது இந்திய அரசாங்கச் சட்டம், 1919-ன் கீழ் நடைமுறைக்கு வந்தது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையையும், 145 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தையும் உள்ளடக்கிய இரண்டு அவைகளாக அது இருந்தது. நில உரிமையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் மட்டுமே மாநிலங்களவையில் உறுப்பினராவதற்கும் வாக்களிப்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவர்களில் சட்டமன்ற அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே மாநிலங்களவைக்குச் செல்ல முடிந்தது. பெண்களால் வாக்களிக்கவோ உறுப்பினராகவோ முடியவில்லை. விரிவுபடுத்தப்பட்டதும் மேம்படுத்தப்பட்டதுமான மாநிலங்களவையை இந்திய அரசாங்கச் சட்டம் 1935 முன்மொழிந்தது என்றாலும், அது நடக்காமலே போய்விட்டது. 1947-ல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட நிர்ணய அவைதான், அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 1952 வரையில் தற்காலிக நாடாளுமன்றமாக இயங்கிவந்தது.

ஈரவைக் கோட்பாடும் கூட்டாட்சியும்

சட்டங்களை இயற்றவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நாடாளுமன்றத்தில் இரண்டு வெவ்வேறு அவைகள் இருக்க வேண்டும் என்பது ‘பைகேமரலிசம்’ எனப்படும் ஈரவைக் கோட்பாடாகும். இந்தக் கோட்பாடானது 1787-ல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது, உலகின் 79 நாடாளுமன்றங்கள் இரண்டு அவைகளைக் கொண்டதாக இருக்கின்றன. மொத்த எண்ணிக்கையில் இது 41%.

சில மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து சட்டமியற்றும் உரிமையை மத்திய அதிகாரத்துக்கு அளிக்கத் தொடங்கிய பண்டைக் காலத்திலிருந்தே கூட்டாட்சி என்பது வழக்கமாக இருந்துவருகிறது. எனினும், நவீன கூட்டாட்சி என்பது முற்றிலும் வேறுபட்டது. புவியியல்ரீதியான, பிராந்திய, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளின் சிக்கல்களே கூட்டாட்சி அல்லது ஒன்றியத்தின் அமைப்புக் கூறுகளாக இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அத்தகைய வேறுபாடுகள் மிகவும் அதிகம். அமெரிக்காவைப் பொறுத்தவரை அது மாநிலங்களின் ஒன்றியமாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ ஒவ்வொரு மாநிலமும் தனிச்சிறப்பான தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.

‘தி பெடரலிஸ்ட்’ கட்டுரைத் தொகுப்பில் 1787-88 ஆண்டுகளில் ஜேம்ஸ் மாடிசன், அலெக்ஸாண்டர் ஹாமில்டன், ஜான் ஜேய் ஆகியோர் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை விவரித்து எழுதிய பிரபலமான கட்டுரைகள் வெளிவந்தன. பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளைப் பிரதிபலிப்பதோடு உடனடி மற்றும் வன்முறையான உணர்ச்சிநிலைகளில் எடுக்கப்படும் முடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ளவும் இரண்டாவது அவை அமைக்கப்பட்டதாக அந்தக் கட்டுரைகள் தெரிவித்தன. அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவவியலாளரான மாண்டெஸ்க்யுவின் கூற்றுகளால் கவரப்பட்டிருந்தார்கள். ‘சட்டம் இயற்றும் அமைப்பானது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் தங்களைச் சரிபார்த்துக்கொள்ளவும் பரஸ்பரம் நிராகரிக்கவுமாக சிறப்புரிமையைப் பெற்றிருக்க வேண்டும்’ என்றார் மாண்டெஸ்க்யு. உள்ளடங்கிப்போகும் அவையானது உண்மையிலேயே ஒரு புரட்சியைத் தடுக்க முடியாவிட்டாலும்கூட நாடாளுமன்றக் கொடுங்கோன்மையின் சிறு நிகழ்வுகளைத் தடுக்க முடியும் என்று பின்னாட்களில் வால்டர் பேஜ்யிட் குறிப்பிட்டார்.

அரசமைப்புச் சட்ட அவை விவாதங்கள்

கூட்டாட்சியும் ஈரவைக் கோட்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏனெனில், நாட்டின் கூட்டாட்சித் தன்மையானது அதன் ஒவ்வொரு அங்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதோடு இரண்டு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றத்தால் அது பாதுகாக்கப்படவும் வேண்டும். பிரிட்டிஷ் இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான வேறுபாடுகளும் சமத்துவமின்மைகளும் நிலவியபோதும்கூட, மாநிலங்களின் ஒன்றியமாக சுதந்திர இந்தியா உருவானபோது, அரசமைப்புச் சட்ட அவையில் இரண்டாவது அவையாக மாநிலங்களவையை முன்மொழிவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தீவிர விவாதத்துக்குரியதாக அது கருதப்பட்டு எப்படியோ தப்பிவிட்டது.

மேலவை என்பது அவசியமானது அல்ல என்பதோடு, அது ஏகாதிபத்தியத்தையும் உருவாக்கும் என்று அரசமைப்புச் சட்ட அவையின் உறுப்பினராக முகம்மது தாஹிர் வலியுறுத்தியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பேராசிரியர் ஷிப்பான் லால் சக்சேனா மேலும் ஒரு படி போய், அத்தகைய அவையானது நாட்டின் முன்னேற்றச் சக்கரத்தைப் பின்னோக்கித் திருப்புவதாய் அமையும் என்று எச்சரித்தார். உடனடியாகச் சட்டங்களை இயற்ற வேண்டியது அப்போதைய தேவையாக இருந்ததால், இரண்டாவது அவை அதற்குத் தடையாக இருக்கும் என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் அவையின் செயல்பாடுகளைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். முன்மொழியப்படும் செலவினங்கள் மீது வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதன் அதிகாரம் நீக்கப்பட்டதோடு, பொதுமக்கள் அவையால் நிறைவேற்றப்படும் சட்டங்களைத் தடுப்பதற்கான அதன் அதிகாரங்களும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறைக்கப்பட்டன. லோக்நாத் மிஸ்ரா, சட்டமியற்றுவதில் மேலவைக்குச் சம அதிகாரத்தை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தார்.

நஸிருதீன் அகமது போன்ற இரண்டாவது அவையின் ஆதரவாளர்கள், அந்த அவையானது நிதானமாக முடிவெடுக்கவும் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கவும் செய்வதோடு, சட்டம் இயற்றும் முறையில் அரசமைப்பின் அங்கங்கள் தங்களது குரலை ஒலிப்பதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்பினார்கள். இரண்டாவது அவையானது அறிவார்ந்த மக்கள் முழுவீச்சில் செயல்படவும், அவசரமாக இயற்றப்படும் சட்டங்களை அவர்கள் சரிபார்க்கவும் செய்யும் என்று எம்.அனந்தசயனம் அய்யங்கார் விவாதித்தார். என்.கோபாலசாமி அய்யங்கார் இரண்டாவது அவைக்காக மிகக் கடுமையாக வாதாடினார். தீர்மானத்தைப் பற்றிய விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசியபோது, ‘முக்கியமான விஷயங்களைப் பற்றிய கண்ணியமான விவாதங்களைக் கொண்டதாக இரண்டாவது அவை அமையும் என்றும், அவ்வப்போதைய உணர்ச்சிவேகத்தில் இயற்றப்படுகிற சட்டங்களை அந்த வேகம் தணிந்து, சட்டம் இயற்றுவதற்குத் தேவையான அனைத்து முடிவுகளும் அமைதியான முறையில் எட்டப்படும் வரை தாமதப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கிறோம்’ என்று குறிப்பிட்டார்.

1950-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, மாநிலங்களவையின் முதல் தலைவராக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இருந்தபோதும் இரண்டாவது அவையின் தேவை பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன. மாநிலங்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வாழ்த்துரைகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், நாடாளுமன்றம் என்பது சட்டம் இயற்றும் அமைப்பு மட்டுமல்ல; பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி உறுப்பினர்கள் பேசுவதற்குமானது என்று குறிப்பிட்டார். கூட்டாட்சிக் கட்டுரைகளின் ஆசிரியர்களில் ஒருவரான ஜேம்ஸ் மாடிசனின் 165 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுரையை அவர் எதிரொலித்தார்: மேலவையின் பணியானது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாக இருப்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் மனச்சார்பு மற்றும் உணர்ச்சி வேகத்தைச் சமநிலைப்படுத்துவதாகவும் இருக்கும்.

மேற்கண்ட விவாதங்களிலிருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையானது, அவ்வப்போதைய உணர்ச்சிகளுக்கு எளிதில் இடங்கொடுக்கக் கூடியதாகவும் தேர்தல் கணக்கீடுகளைக் கொண்டதாகவும் இருக்கும் என்பது புரிகிறது. சட்டம் இயற்றுவதில் அவர்களது முத்திரைகள் இரண்டாவது அவையால் சரிபார்க்கப்பட வேண்டும். இரண்டாவது அவையின் உறுப்பினர்கள் நிதானமானவர்களாகவும் விவேகமானவர்களாகவும் அறிவுமிக்கவர்களாகவும் கள யதார்த்தம் அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேவையை அரசமைப்புச் சட்ட விவாதங்களிலிருந்தும், மற்ற நாடாளுமன்றங்களின் அனுபவங்களிலிருந்தும் தொகுத்துக்கொள்ள முடியும். முன்னோக்கி ஓடும் சக்கரத்தைப் பின்னிழுக்கும் என்ற வாதத்தைப் பொய்யாக்கி, அது இயற்றப்படுகிற சட்டங்களைத் திருத்தவோ தாமதப்படுத்தவோ செய்கிறது. கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் நலன்களை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முக்கியமான விஷயங்களின் மீது மிகவும் உயர்ந்த தன்மையிலான விவாதங்களை நடத்தும் அமைப்பாக அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

1949-ன் இந்த ஆணைக்கு எதிராக, மாநிலங்களவையின் முதல் கூட்டம் நடந்த மே 13, 1952 அன்றிலிருந்தே அதன் செயல்பாடுகள் ஆராயப்பட்டுவருகின்றன. அந்தந்தக் காலகட்டங்களில் மாநிலங்களில் போதிய உறுப்பினர்களைக் கொண்டிராத ஆட்சிகளுக்குத் தடையாகவோ இடைஞ்சல் அளிப்பதாகவோ இருக்கிறதா என்றும் மதிப்பிடப்பட்டுவருகிறது. மாநிலங்களவையின் படிப்படியான மேம்பாடுகளும் ஆராயப்படுகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டம், மக்களவை, மாநிலங்களவை இரண்டுக்கும் இடையே சட்டப்படி அதிகாரச் சமநிலையை வழங்கியிருந்தாலும், சில விஷயங்களில் விதிவிலக்குகளையும் அளிக்கிறது. பண மசோதா அல்லது நிதி மசோதாக்கள் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே மானியக் கோரிக்கைகளுக்கும் மக்களவையே அனுமதியளிக்க வேண்டும். இன்னொரு பக்கம், மாநிலங்களவை சில சிறப்பு அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது. மாநிலப் பட்டியலில் அடங்கியுள்ள விஷயங்களின் மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கும், அனைத்திந்திய அரசுப் பணிகளை உருவாக்கவும் மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம். மேலும், மக்களவை கலைக்கப்பட்டிருக்கும்போது நெருக்கடிநிலையையும் குடியரசுத் தலைவரின் ஆட்சியையும் அறிவிப்பதற்கு மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் தத்துவவியலாளரும் அரசியல் பொருளாதார அறிஞருமான ஜான் ஸ்டூவர்ட் மில் 1861-ல் எழுதிய ‘பிரதிநிதித்துவ அரசாங்கம் குறித்த சிந்தனைகள்’ நூலிலேயே ‘சுதந்திரமான அமைப்புகளை நிர்வகிக்க சமரசம் தேவைப்படுகிறது; சமரசத்துக்கு அவை தயாராக இருக்க வேண்டும்; எதிர்த்தரப்பு கூறுவனவற்றில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளவும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப்போகவும் வேண்டும்’ என்று கூறினார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபுக்கள் சபையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக நடந்த ப்ரைஸ் மாநாட்டில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவை என்பது சட்டங்களை இயற்றுவதில் ஏகப்பட்ட குறுக்கீடுகளை மட்டுமே செய்வதாகவும், இயற்றப்படும் சட்டங்கள் குறித்து தேவையான கருத்துகள் போதுமான அளவில் கூறப்பட வேண்டும் என்றால், இரண்டாவது அவை தேவைப்படலாம் என்றும் அவதானித்தது. ‘இரண்டாவது அவையானது முதல் அவையிடமிருந்து கருத்துகளில் மாறுபட்டால் அது தொல்லையாக இருக்கலாம். ஒருவேளை அனைத்துக்கும் உடன்பட்டால் அது தேவையே இல்லை’ என்று மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார் பிரபல அரசமைப்புச் சட்டவியலாளரான அபே சியாஸ்.

சட்டம் இயற்றுவதைத் தாமதப்படுத்துகிறதா?

மக்களவை அந்தக் காலகட்டத்தின் உணர்வுகளை உள்ளடக்கியும், அவ்வப்போதைய அரசியல் கருத்துகளுக்குத் தக்கவாறும் செயல்படும்போது மாநிலங்களவை அவற்றிலிருந்து விலகியிருக்கிறதா? இயற்றப்படும் சட்டங்களைத் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறதா? இந்தக் கோணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், 1952 தொடங்கி இந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுவருவதைப் பற்றி ஆராய்ந்துபார்க்க வேண்டும்.

மக்களவைக்கான தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை கலைக்கப்படுவதற்கு முன்பே நடத்தப்படுகின்றன. மாநிலங்களவைக்கு அது நிலையான அவை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களவைத் தேர்தல்கள் மக்களின் சமீபத்திய விருப்பங்களைப் பிரதிபலிக்கும்போது, மாநிலங்களவையோ அவற்றின் தொடர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கட்ட வளர்ச்சிநிலைகளைத் தெரிவிப்பதாக அமைந்திருக்கிறது. அரசு நிர்வாகமானது மக்களவையின் பெரும்பான்மையை மட்டுமே சார்ந்திருந்தாலும் சட்டம் இயற்றுவதில் இரண்டு அவைகளுமே சம மதிப்பு கொண்டவை. இரண்டு அவைகளுக்கும் வெவ்வேறு முறையில் தேர்தல்கள் நடத்தப்படுவதும், இரண்டு அவைகளின் அமைப்புமுறைகளையும் இயன்ற அளவுக்கு வேறுபடுத்தியிருப்பதும் சட்டம் இயற்றும் தன்மையிலும் வேகத்திலும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறதா?

மக்களவையைப் போல இல்லை

1952-ல் முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டதிலிருந்து கடந்த 68 ஆண்டுகளில் 29 ஆண்டுகள் மட்டுமே அவ்வப்போதைய அரசாங்கம் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற்றிருந்தன; மீதி 39 ஆண்டுகள் சிறுபான்மையாகத்தான் இருந்தன. அதிலும், கடந்த 31 ஆண்டுகளில் ஆளும் அரசாங்கங்கள் மாநிலங்களவையில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சிறுபான்மையாகவே இருக்கின்றன என்பதைச் சமீபத்தில் மாநிலங்களவைச் செயலகத்தால் நடத்தப்பட்ட ஆய்வொன்று எடுத்துக்காட்டியிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உள்ள இந்தத் தெளிவான வேறுபாடானது மிகச் சில சந்தர்ப்பங்களைத் தவிர, சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் எதிராக அமைந்தது என்பதைச் சுட்டிக்காட்டவில்லை. 1952-லிருந்து இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரையிலும் மாநிலங்களவை 5,472 அமர்வுகளை நடத்தியுள்ளது; 3,857 மசோதாக்களையும் நிறைவேற்றியுள்ளது. சட்டம் இயற்றும் நீண்ட பயணத்தில் சில தடவை மட்டுமே முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஆனால், மாநிலங்களவை ஒருபோதும் ‘தாமதப்படுத்துபவராக’ அடையாளப்படுத்தப்படவில்லை.

இரண்டு அவைகளுக்கும் இடையே எழுந்த கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக இதுவரையில் நாடாளுமன்றத்தில் மூன்று முறைகள் மட்டுமே கூட்டு அமர்வுகள் கூட்டப்பட்டுள்ளன. முதலாவது கூட்டு அமர்வு, 1961-ல் நேரு தலைமையிலான அரசாங்கம் மாநிலங்களவையில் பெரும்பான்மையைப் பெற்றிருந்தபோது நடந்தது; ஆனால், வரதட்சணைத் தடுப்புச் சட்ட மசோதா-1959, தோல்வியடைய நேரிட்டது. 1978-ல் வங்கிப் பணிகள் ஆணையம் (நீக்கச்) சட்ட மசோதா-1977, மாநிலங்களவையால் நிராகரிக்கப்பட்டபோதும் 2002-ல் தீவிரவாத தடுப்புச் சட்ட மசோதா-2002-ஐ மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததாலும் கூட்டு அமர்வுகள் நடத்தப்பட்டன.

மன்னர் மானிய ஒழிப்புக்காக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் (24-வது திருத்த) மசோதாவை மாநிலங்களவை நிராகரித்தபோது அது பிற்போக்குத்தனம் கொண்டதென்று இகழ்ந்துரைக்கப்பட்டது. 1989-ல் அரசமைப்புச் சட்டத்தின் (24 மற்றும் 26-வது திருத்த) மசோதாக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க முன்வந்தபோது, அப்போதைய அரசாங்கத்துக்கு மாநிலங்களவையில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தாலும்கூட, தேவையான சிறப்புப் பெரும்பான்மையைப் பெறாமல் முடியாமல்போனது.

இரண்டு அவைகளுக்கிடையே தேவைப்படும் நல்லுறவும் சில சமயங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக, 1952-ல் பொதுக் கணக்குக் குழுவில் மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்க்கப்படாதபோது அவ்வாறு ஆனது. அதையடுத்து, வருமான வரி (திருத்தச்) சட்ட முன்வரைவு, 1953-ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது பண மசோதா என்று மக்களவைத் தலைவரால் சான்றளிக்கப்பட்டதைப் பற்றி சில உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். விவாதம் தடித்தபோது, பிரதமர் நேரு குறுக்கிட்டு, ‘தேசத்தைக் கட்டமைக்கும் மிகப் பெரும் சோதனையில் வெற்றிபெறுவதற்கு ஆர்வம்கொண்ட நாம் அதற்காக நீண்ட பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். அந்த முயற்சியில், இரண்டு அவைகளுக்கிடையே நெருங்கிய கூட்டுறவும் பரஸ்பர மதிப்பும் மிக முக்கியமான கடமை’ என்று வலியுறுத்தினார்.

பெரிய துறைமுகங்களுக்கான அறக்கட்டளைச் சட்ட முன்வரைவு-1963-ஐ மாநிலங்களவை உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமலேயே மக்களவைத் தலைவர் தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபோது, மாநிலங்களவை உறுப்பினர்கள் அதைக் கண்டித்தனர். ஆனால், இந்தச் சட்டமுன்வரைவானது மீண்டும் மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்றம் இரண்டாவது அவையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட விவாத அவையில் தொடர்ந்து சில குரல்கள் ஒலித்தபோதும், மக்களவையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் 1954-ம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்து 1971, 1972, 1975 ஆண்டுகளிலும் மாநிலங்களவையைக் கலைக்க வேண்டும் என்று தீர்மானங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். எனினும், மிகுந்த விவேகத்துடன் அத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

அரசமைப்புச் சட்டக் கூறுகளின்படி, மாநிலங்களவை பண மசோதாவைத் திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்கள் இல்லாமலோ மக்களவையின் பார்வைக்குத் திரும்ப அனுப்புவதை 14 நாட்களுக்கு நிறுத்திவைக்க முடியும். திருவிதாங்கூர் கொச்சின் நிதி ஒதுக்கீடு (முந்தைய நிதிநிலை அறிக்கையின் தொடர்ச்சி) சட்ட முன்வரைவு-1956, மத்திய சுங்கத் தீர்வை (பகிர்வு) சட்ட முன்வரைவு, எஸ்டேட் வரி மற்றும் ரயில்வே பயணிகள் கட்டணத்துக்கான வரிகள் (பகிர்வு) சட்ட முன்வரைவு-1957, வருமான வரிச் சட்ட முன்வரைவு-1961 ஆகியவற்றில் மாநிலங்களவை பரிந்துரைத்த திருத்தங்களை மக்களவை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஆளுங்கட்சி மாநிலங்களவையிலும் பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில், மாநிலங்களவையால் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மக்களவை நிராகரித்ததும் உண்டு.

ஊழல் தடுப்புச் சட்ட முன்வரைவு-1987, துறைமுகப் பணியாளர்கள் (பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் நலம்) சட்ட முன்வரைவு-1986 உள்ளிட்ட சில சட்டங்கள் மக்களவையால் இயற்றப்பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதே மாநிலங்களவையில் ஆகஸ்ட் 25, 1994 அன்று ஒரே நாளில் ஐந்து அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதும் உண்டு. இத்தனைக்கும் அப்போதைய ஆளுங்கட்சிக்குத் தனிப்பெரும்பான்மையும் இல்லை. மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில சட்ட முன்வரைவுகளுக்கு மாநிலங்களவை திருத்தங்களைப் பரிந்துரைத்ததும், அத்திருத்தங்கள் சில நேரங்களில் மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நடந்திருக்கின்றன.

தற்போது மத்தியில் ஆளும் அரசும்கூட மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும் சரக்கு மற்றும் சேவை வரி, நொடிப்புநிலை மற்றும் திவால் சட்டம், முத்தலாக், சட்ட விரோத நடவடிக்கைகள், ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லை மறுசீரமைப்பு, குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான முக்கியச் சட்டங்களை இயற்றுவதற்கு மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவளித்தார்கள். சட்டம் இயற்றலைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாதது ஒரு பிரச்சினையாக இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் பெரிதும் மாறுபட்ட இந்த அணுகுமுறையே பின்பற்றப்படுகிறது.

அதிகரிக்கும் முட்டுக்கட்டைகள்

1997 வரையில் மாநிலங்களவையின் உற்பத்தித் திறன் 100%-ஆகவும் அதற்கு மேலாகவும்கூட இருந்தது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளில் சட்டம் இயற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதும் முட்டுக்கட்டைகள் போடுவதுமான போக்கு உருவாகியிருக்கிறது. விளைவாக, 1998-2004 ஆண்டுகளில் மாநிலங்களவையின் உற்பத்தித்திறன் 87%-ஆகவும், 2005-14 ஆண்டுகளில் 76%-ஆகவும், 2015-19 ஆண்டுகளில் 61%-ஆகவும் குறைந்துள்ளது என்று தலைமைச் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சட்டம் இயற்றும் நடவடிக்கைகளுக்காக மாநிலங்களவையில் செலவழிக்கப்பட்ட நேரம் 1978-ம் ஆண்டிலிருந்தே 29% ஆகவே இருந்துவரும் வேளையில், அவையில் ‘கவனம் ஈர்க்கும்’ நடவடிக்கைகள் அதிகரித்தபடி இருக்கின்றன. கேள்விகள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றின் வாயிலாக நிர்வாகத் துறையின் பொறுப்பை, சட்டம் இயற்றும் அவைகள் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூடுதல் பணிகள், மாநிலங்களவையின் மொத்தப் பணி நேரத்தில் 1978-2004 ஆண்டுகளில் 39.50% ஆக இருந்தது. இது 2005-14 ஆண்டுகளில் 21.99%-ஆகவும், 2015-ல் 12.34%-ஆகவும் குறைந்திருக்கிறது. இந்த நேரக் குறைவுக்கு முக்கியக் காரணம், கேள்வி நேரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று அடிக்கடி எழும் இடையூறுகளால்தான். இத்தகைய இடையூறுகள் சில நேரங்களில் சட்ட முன்வரைவுகளை விவாதிக்காமலேயே நிறைவேறச்செய்து சட்டம் இயற்றலின் தரத்தையும் குறைக்கின்றன.

எனினும், மாநிலங்களவை இந்தப் பணிக்கு ‘வேண்டுமென்றே’ அதிக நேரத்தை ஒதுக்கிவருகிறது என்பதைத் தொடர்ந்து மேலும் மேலும் நிரூபித்துவருகிறது. குறுகிய கால விவாதங்கள், பூஜ்ஜிய நேரம், சிறப்புக் கவன ஈர்ப்பு, நிதிநிலை அறிக்கை மற்றும் அமைச்சரவைகளின் பணிகள் பற்றிய விவாதங்கள், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளின் வழியாக ஒதுக்கப்படும் நேரம் 1978-2004 ஆண்டுகளில் 33.54%-ஆக இருந்தது. இது 2005-2014 ஆண்டுகளில் 41.42%-ஆகவும், 2015-19 ஆண்டுகளில் 46.59%-ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆரம்ப கால உரசல்களுக்குப் பிறகும், மாநிலங்களவையும் மக்களவையும் இந்நாட்டில் 1952-லிருந்து சமூக-பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவருவதிலும், முன்னோடிச் சட்டங்களை இணைந்து இயற்றுவதிலும் ஆக்கபூர்வமான கூட்டாளிகளாகத் தங்களை நிரூபித்திருக்கின்றன. இதுவரையிலான பயணத்தின் பெரும் பகுதி இரண்டு அவைகளுக்கிடையான முரண்பாடுகளாக இருந்தாலும், இந்தக் கூட்டாளித்துவம் அதற்கு அவசியமான கூட்டுணர்வாலும் நட்புறவாலுமே வழிநடத்தப்படுகிறது. இந்தக் கோணத்தின்படி பார்த்தால், மாநிலங்களவையைத் ‘தடை’ என்று சொல்ல முடியாது.

மாநிலங்களவை அதன் சுதந்திரத்தைத் திரும்பப் பெற வேண்டிய அதே நேரத்தில், கடந்த 20ஆண்டுகளைப் போல் அது ‘இடையூறாக’ பார்க்கப்படக் கூடாது என்பதே ஜனநாயகத்தின் அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட வேண்டியது. அத்தகைய இடையூறுகளுக்கு அரசியல் உணர்ச்சிகள் அடிப்படையாக இருக்கக் கூடாது. இடையூறு, தடை என்பவற்றுக்கு இடையிலான கோடு என்பது மெல்லியதுதான். அவற்றை எதிர்த்து நிற்பதில் நாம் உறுதிகாட்ட வேண்டும். மாநிலங்களவை உரிய முறையில் செயல்படுவதில் இரண்டு அவைகளுக்குமே பங்கு இருக்கிறது.

- எம்.வெங்கய்ய நாயுடு, மாநிலங்களவைத் தலைவர், இந்தியத் துணை ஜனாதிபதி.

© ‘தி இந்து’, தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x