Published : 18 Jun 2020 11:03 AM
Last Updated : 18 Jun 2020 11:03 AM
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) உத்தேச மதிப்பீட்டின்படி, உலகெங்கும் 152 மில்லியன் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 88 மில்லியன் ஆண் குழந்தைகளும் 64 மில்லியன் பெண் குழந்தைகளும் உள்ளனர். 48 சதவீத குழந்தைத் தொழிலாளர்கள், 5 -11 வயதுக்குட்பட்டவர்கள்; 28 சதவீதம் 12 -14 வயதுக்குட்பட்டவர்கள்; 24 சதவீதம் 15 -17 வயதுக்குட்பட்டவர்கள் . இவர்களில், 70.9 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த தொழில்களிலும், 11.9 சதவீதம் பேர் தொழிற்சாலைகளிலும், மீதியுள்ள 17.2 பேர் சதவீதம் பேர் சேவைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
12 வயதுக்குட்பட்ட 19 மில்லியன் குழந்தைகள் உட்பட 73 மில்லியன் குழந்தைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்நாட்டுப் போர் மற்றும் பேரிடர் போன்றவற்றிற்கும், குழந்தைத் தொழிலாளர் முறைக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. உள்நாட்டு போர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில், உலக சராசரியை விட கூடுதலாக 77% குழந்தைத் தொழிலாளர் முறை உள்ளது. அதேபோல் கூடுதலாக 50 சதவீதம் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவில், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 10.1 மில்லியன் குழந்தைகள் (5.6 மில்லியன் ஆண் குழந்தைகள் & 4.5 மில்லியன் பெண் குழந்தைகள்), குழந்தைத் தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்தக் குழந்தைகளில் 3.9 சதவீதமாகும். இதில், 5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 25 சதவீதம், 10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 75 சதவீதம். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 44 சதவீதமாக இருந்த பெண் குழந்தைத் தொழிலாளர்களின் சதவீதம், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 56 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காட்டுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 1.51 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில், 5-14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 81.3 சதவீதம் படித்தவர்கள். தமிழகத்தில் மொத்த பழங்குடியினக் குழந்தைகளில் 4.8 சதவீதம் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இது தேசிய மொத்த சராசரியைவிட அதிகம்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை விதி – 21, தீங்கு தரும் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுவதில் இருந்து பாதுகாக்கும் உரிமையை உத்தரவாதம் செய்கிறது. நீடித்த வளர்ச்சி இலக்கு 8.7 (Sustainable Developme Goal -8.7), 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் உறுதியுடன், ILO - உடன்படிக்கை எண்: 138 ஐ அங்கீகரித்த 170 வது ஐ.எல்.ஓ உறுப்பு நாடு ஆகும். இதன் கீழ், இலகுவான வேலை மற்றும் கலை நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு வேலையிலும் அல்லது வேலைக்கு அனுமதிக்க, குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், உடன்படிக்கை எண் :182 ஐ அங்கீகரித்த 181-வது உறுப்பு நாடு ஆகும். இதன் கீழ், அடிமைத்தனம், கட்டாய உழைப்பு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குழந்தைத் தொழிலாளர்களின் மோசமான வடிவங்கள்; ஆயுத மோதலில் குழந்தைகளின் பயன்பாடு; விபச்சாரம், ஆபாசப் படங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் (போதைப்பொருள் கடத்தல் போன்றவை) ஒரு குழந்தையைப் பயன்படுத்துதல்; மற்றும் அபாயகரமான வேலை போன்றவற்றைத் தடைசெய்து நீக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க விரிவான நடைமுறைக்கேற்ற செயல்திட்டங்கள் இல்லை.
குழந்தைத் தொழில் முறையை ஒழிக்க 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் “பனைமர நிழல் போல்” யாருக்கும் பலனின்றி உள்ளது. இந்தச் சட்டத்தில் 15 - 18 வயதுடைய குழந்தை ஆபத்தான வேலைகளில் பணிபுரிவது தடை செய்யப்பட்டிருந்தாலும், பணிபுரியும் குழந்தைகளில் 62.8 சதவீதம் குழந்தைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 10 சதவீதக் குழந்தைகள் குடும்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, கோவிட் - 19 தாக்கத்திற்கு முன்பே குழந்தைத் தொழில் முறையை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை.
தற்போது கோவிட் -19 ஏற்படுத்தியுள்ள தாக்கம் பரவலாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி இருந்தாலும் கூட, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை வேருடன் அசைத்து புரட்டிப் போட்டிருக்கிறது. ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டு, 386 மில்லியன் குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோவிட் - 19 ஏற்படுத்தியுள்ள உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்றும், இதன் காரணமாக மேலும், 42 - 66 மில்லியன் குழந்தைகள் தீவிரமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் ILO – ன் உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. இந்தியாவில், 90 சதவீதத்திற்கு மேல் முறைசாரா பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு, மிகப்பெரும் சவாலான சூழல் உருவாகியுள்ளது. பல நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலையில் தொடர்பவர்களுக்கும், ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாக வழங்கும் போக்கு தொடர்கிறது. முறைசாரா மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் 'யானைப் பசிக்கு சோளப் பொரி போல' அளவில் மிகக் குறைவாக உள்ளது. நோய்த்தொற்றின் தாக்கம் இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் சூழல் இருக்கிறது. இதனால் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சூழல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை உருவாகும். மேலும் பணத்தேவைக்காக முன்பணம் பெற்றுக்கொண்டு, குழந்தைகளை கொத்தடிமைகளாக வேலைக்கு அனுப்பும் சூழல் உருவாகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.
பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் ஊரடங்கு காலத்தில் தொடர்பு அதிகம் இல்லாதது, பெற்றோரின் வேலையிழப்பு, பிழைப்பாதாரங்கள் பாதிப்பது, குறைவான கூலிக்கு வேலை தர முன்வரும் நிறுவனங்கள், குடும்பத்தின் உடனடி பணத்தேவை, கல்விக் கட்டணப் பகல் கொள்ளை போன்ற காரணிகள் குழந்தைகளை மேலும் ஊறுபடத்தக்கவர்களாக மாற்றி, குழந்தைத் தொழில் முறையை ஊக்குவிக்கின்றன. அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் உள்ள பகுதிகளை ஏற்கெனவே அரசிடம் உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடியும். உதாரணமாக 2011 கணக்கெடுப்பின்படி சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெண் கல்வி, தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. இங்குள்ள பெண் குழந்தைகள் குழந்தைத் தொழில் முறைக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு அதிகம்.
தமிழகத்தில் 2017- ல் வெளியிடப்பட்ட மனித வளர்ச்சிக் குறியீட்டு (Human Development Index) அறிக்கையின்படி திருவாரூர், விழுப்புரம், தேனி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன. குழந்தை வளர்ச்சிக் குறியீட்டின் படி (Child Development Index), ராமநாதபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. பல்பரிமாண வறுமைக்கோட்டின்படி (Multi-Dimensional Poverty Index) அரியலூர், விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்கள் பின்தங்கி உள்ளன. உணவுப் பாதுகாப்புக் குறியீட்டின் படி (Food Security Index) விழுப்புரம், ராமநாதபுரம், விருதுநகர், பெரம்பலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ளன. கோவிட் - 19 அனைத்து மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், மேற்கண்ட குறியீடுகளின் அடிப்படையில் ஏற்கெனவே பின்தங்கியுள்ள மாவட்டங்கள், மேலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அரியலூர் போன்ற சில மாவட்டங்கள், அனைத்துக் குறியீட்டிலும் பின்தங்கி இருப்பது, அதிக பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப் பிராந்திய வேறுபாடுகளால், குழந்தைத் தொழிலாளர் முறையை, ஒழிக்க, ஒரே ஒரு வழிமுறையை மாநிலம் முழுவதும் செயல்படுத்துதல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு பொருந்தும் தீர்வுகள், மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்குப் பொருந்தாது என்பதை நினைவில் கொண்டு, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப மக்களிடம் கலந்தாய்வு செய்து, உள்ளூர் தீர்வுகளை முடிவு செய்ய வேண்டும். செயல்பாடுகளின் தீவிரத் தன்மையும் பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்க வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க, ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற அளவில் ஒரு விரிவான, பல்துறை சார்ந்த செயல்திட்டம் அவசியம். மேலும், பள்ளி, குடும்பங்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த செயல்பாடுகளை ஒருங்கிணைந்து செய்வதன் மூலமாக மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற முடியும். தமிழகத்தில் ஏற்கெனவே இதற்கான முயற்சிகளை பல தொண்டு நிறுவனங்கள், மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்தி, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத கிராமங்களை உருவாக்கியிருக்கிறார்கள் அந்தக் கற்றலை நினைவில் கொண்டு நமது செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.
முதலாவதாக பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மேம்படுத்தப்பட வேண்டும். ஊரடங்கு காலத்தில்கூட, கேரளா மற்றும் டெல்லியில், மதிய உணவுப் பொட்டலங்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திராவில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, தினசரி மதிய உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்வது, பள்ளியுடனான தொடர்பை வலுப்படுத்தும். மேலும் ஊரடங்கு காலத்தில், பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்துப் பேசி, ஊறுபடத்தக்க குழந்தைகளைக் கண்டறிந்து, தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன், குழந்தைகளின் இடை நிறுத்தத்தைக் கண்காணிக்க வேண்டும். இதற்கான உத்தரவை, அரசு பிறப்பித்து, ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் உள்ள நம் சமூகத்தில் இணையவழிக் கல்விக்கான தொழில்நுட்பங்களும், வசதிகளும், வாய்ப்புகளும் பெருவாரியான குழந்தைகளுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு மாற்று வழிகளை நிபுணர்கள் கொண்ட குழுக்களை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை குழந்தைகளின் கல்விச் செலவுக்காக செலவிடும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. விதிவிலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். மற்ற பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதலாக வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இல்லை என்றால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். சட்டப்படி அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்புவாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம் வெளிப்படையாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக இது எந்தப் பள்ளியிலும் ஒட்டப்படுவதில்லை. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடப்பதால் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இந்த அசாதாரண சூழ்நிலையிலும் தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணக் கொள்ளையைத் தொடர்வது அதிர்ச்சிக்குரிய விஷயம். டெல்லி அரசு மாதாந்திர டியூஷன் கட்டணம் மட்டும் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு, ஊரடங்கும் முடியும் வரை கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் ஊரடங்கு முடியும் வரை தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்குக் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது கல்விக் கட்டணம் கட்ட இயலாமல் இடைநிறுத்தம் ஆகும் குழந்தைகளைப் பாதுகாக்கப் பெருமளவில் உதவும் .
2019 - 2020 ஆம் கல்வியாண்டில், 4062 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இனம் காணப்பட்டு, அவர்களில், 3975 குழந்தைகள், வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கல்வி வழங்கப்பட்டது. இவர்களில் வெளி மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் எண்ணிக்கை 1714. இவர்களுக்கு அவர்களது தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க, 85 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.(Source: Policy Note 2020-2021, Dept of School Education). ஆனால் இது மிகவும் குறைவு. இன்னும் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள், கல்வி கற்க வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள் என்று பத்திரிகை செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன . அவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு, உள்ளூரில் பயிற்சி கொடுத்து, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்குச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றவர்களை உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் (சுய உதவி குழுக்கள், இளைஞர் அமைப்புகள் , ரசிகர் மன்றங்கள் போன்றவை) இணைந்து செயல்பட உத்தரவிட வேண்டும். ஊராட்சி ஒன்றிய பட்ஜெட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற நிதி ஒதுக்க வேண்டும்.
அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம், குறைந்தபட்சம் ரூபாய் 6000 வீதம் உதவித்தொகையாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு அல்லது ஊரடங்கு காலம் முடியும் வரை இதில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும். மத்திய அரசின் அறிக்கையின் படி, 2018-2019 ஆம் ஆண்டில், 51.7% கிராமப்புறத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சுயதொழில் என்பது முக்கிய பிழைப்பாதாரமாக இருக்கிறது. இது நகர்ப்புறத்தில் 31.8 சதவீதமாக உள்ளது. இந்த சுயவேலைவாய்ப்பு மூலம் வருவாய் ஈட்டும் குடும்பங்கள் அனைத்தும் தற்போது பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பிழைப்பாதாரத்தை மேம்படுத்த ஊராட்சி மன்ற அளவில் கணக்கெடுப்பு செய்து தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.
தற்போது வெளிமாநிலம் திரும்பிச் சென்ற தொழிலாளர்கள் 65% திரும்பி வர விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள். இந்தக் காலி இடங்களை உள்ளூரைச் சார்ந்தவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்து தகுதிவாய்ந்த நபர்களையும் விபத்துக் காப்பீடு (வருடத்திற்கு ரூபாய் 12) , இறப்புக் காப்பீடு – (வருடத்திற்கு ரூபாய் 330), மற்றும் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும். தமிழகத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. பெரும்பாலான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த வாரியங்களில் பதியவில்லை. உடனடியாக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை, கிராம நிர்வாக அலுவலர் மூலம் இனம்கண்டு வாரியத்தில் இணைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 105 ஊராட்சி ஒன்றியங்கள், பின்தங்கிய ஒன்றியங்களாக கண்டறியப்பட்டு சிறப்பு நிதி (State Balanced Growth Fund) வழங்கப்படுகிறது. இந்த நிதியை கூடுதலாக்கி மக்களின் பிழைப்பாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தில் உள்ள 100 நாள் வேலை என்பதை அடுத்த ஓராண்டிற்கு 200 நாட்களாக அதிகரிப்பது ஓரளவு கிராமப் பொருளாதாரத்தை சீர் செய்ய உதவும். இந்தச் செயல்பாடுகள் எல்லாம் குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தி குழந்தைகள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவிகரமாக இருக்கும்.
மேற்சொன்ன பரிந்துரைகளை, பள்ளி, கிராமம் மற்றும் குடும்ப அளவில், அனைத்துத் துறையினரின் ஈடுபாட்டோடு செயல்படுத்தினால் கோவிட்-19 தாக்கத்தினால் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதை பெருமளவில் தடுக்க முடியும். இதெல்லாம் உடனடித் தீர்வைக் கொடுத்தாலும் முழுமையான தீர்வாக அமையாது. ஆகவே 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதும், பள்ளிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டு அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தலும் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். ஆகவே மத்திய மாநில அரசுகள் கொள்கைரீதியாக முடிவெடுத்து, தற்போதுள்ள சட்டங்களை மாற்றி, அதற்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கி, குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முனைவர். ப. பாலமுருகன்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: balaviji2003@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT