Published : 17 Jun 2020 06:29 AM
Last Updated : 17 Jun 2020 06:29 AM
உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இத்தகு உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
பொதுவாக, நகரங்களை நவீனத்துடனும், கிராமங்களைப் புராதனத்துடனும் பொருத்திப் பார்க்கும் மனோபாவம் உலகம் முழுக்க நிலவுகிறது. உண்மை அப்படி இல்லை என்றாலும்கூட. அழிவில் புதையுண்டுபோன சிந்து சமவெளி, கீழடி தொடங்கி தம்மை மீட்டுருவாக்கியபடியே வந்திருக்கும் ஏதென்ஸ், ரோம், லண்டன் வரை நமக்குச் சொல்வது, நகரங்களின் புராதனத்தையும்தான். தீவிரமான விமர்சனங்களை நகரங்கள் மீது கொண்டிருந்தாலும் ஏன் மனித குலம் இடையறாது நகரங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது? ஏனென்றால், வாழ்க்கையை நேற்றைய புதுமையும்கூட மூடிடாத வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கும் பண்பை நகரங்கள் பெற்றிருக்கின்றன. அப்படியென்றால், கிராமங்கள் எப்படி நீடிக்கின்றன? அவை இன்றைய புதுமையையும் வாழ்க்கையின் நெடிய பழமையோடு இணைக்க முற்படுகின்றன. ஆக, மனித குலத்தின் புராதன புதுப்பிப்பு சக்தி நகரங்கள் என்றால், புராதனத்தைத் தக்கவைக்கும் சக்தி கிராமங்கள். இரண்டுக்கும் இடையிலான சமநிலை முக்கியம்.
இந்தியாவைப் பொறுத்த அளவில் சுதந்திர இந்தியாவைத் தீர்மானிப்பதிலேயே இந்த விவாதம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. உலகப் போக்கிலிருந்து விலகி தேசப் பிதா காந்தி இந்தியாவுக்குக் கிராமத்தன்மை கொடுக்க முற்பட்டார். காந்திக்கு மாற்றுச் சிந்தனையாளர்களான பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா என ஏனைய பலரும் தம்முடைய தாயகத்துக்கு நகரத்தன்மையைக் கொடுக்க முற்பட்டனர். கிராமங்களையும் சிறிய அளவிலான நகரங்களாக இவர்கள் பார்க்க ஆசைப்பட்டபோது நகரங்களையும் பெரிய அளவிலான கிராமங்களாகப் பார்க்க காந்தி ஆசைப்பட்டார்.
நினைக்கும்போதே ஆலைகளின் இடையறாத பெரும் சப்தமும், நெரிசலான போக்குவரத்தும், வளங்களைச் சுரண்டும் பேராசையும் மிகுந்த நகரங்களைக் காட்டிலும், காந்தியின் அமைதியான உன்னத கிராமம் எளிதாக எல்லோரையும் ஈர்ப்பது. ஆனால், காந்தியின் உன்னத கிராமத்தை நோக்கி நடப்பவர்கள் வழியில் குண்டாந்தடியுடன் நிற்கும் நகரங்களின் தீவிர ஆதரவாளரான அம்பேத்கரை எதிர்கொள்ள வேண்டும். அவரிடமிருந்து தப்பித்தல் கஷ்டம். ஏனெனில், அவர் கையில் வைத்திருக்கும் குண்டாந்தடியின் பெயர் சத்தியம்.இந்தியக் கிராமங்களின் சீழ்பிடித்த சாதிய நிதர்சனத்தை அவர் தோலுரித்து நம் முன் வீசுகிறார். உணவு, உடை, உறையுள் ஆகியவற்றைப் போலவே சுயமரியாதையும் கண்ணியமும் நிறைந்த ஜனநாயக வாழ்க்கைச் சூழல் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், கிராமங்கள் எவ்வளவு ஒடுக்குமுறைத்தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதையும் நமக்கு அவர் உணர்த்துகிறார்.
அதே சமயம், அம்பேத்கர் நம்பிக்கையோடு பார்த்த நகரங்களும் இந்தியாவில் சகலருக்குமான சமூக விடுதலைக்கு வழி வகுக்கவில்லை. தலித்துகளோடு அதே வாழ்க்கைப்பாட்டிலுள்ள ஏனைய சாதி மக்களையும் நகர்ப்புறச் சேரிகள் உள்ளடக்கியதுதான் இந்திய நகரங்களின் உச்சபட்ச சாதனை. ஒப்பீட்டளவில், கிராமங்களைக் காட்டிலும் பல மடங்கு தாராள சுதந்திர வெளியாக நகரங்கள் திகழ்கின்றன என்றாலும், குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்புகூட இல்லாமல் கூட்டம் கூட்டமாக அகதிகளைப் போல இன்று நகரங்களிலிருந்து சொந்த கிராமங்களை நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறும்போது அம்பேத்கரின் நகரம் தொடர்பிலான நம்பிக்கையும், காந்தியின் கிராமம் தொடர்பிலான கனவுபோலவே உருக்குலைந்து வழிந்தோடுகிறது.
எப்படியாயினும் நாம் தோற்றுவிட்டோம். நம்மால் கிராமங்களையும் ஜனநாயகப்படுத்திச் செழுமைப்படுத்த முடியவில்லை; நகரங்களையும் பசுமைத்தன்மையோடு எல்லோருக்குமானதாக வளர்த்தெடுக்க முடியவில்லை. நகரம் - கிராமம் இரு அமைப்புகளையுமே நம்முடைய இன்றைய பார்வையும் கொள்கைகளும் வெவ்வேறு வகைகளில் சுரண்டுகின்றன. இரண்டையுமே நாம் பயன்படுத்திக்கொண்டாலும், இரண்டின் மீதுமே நமக்கு வரலாற்று வெறுப்பு இருக்கிறது. நம்முடைய முன்னோடிகளும் இதற்கு விதிவிலக்குகளாக இல்லை. காந்தியினுடையது நகர வெறுப்பு என்றால், அம்பேத்கருடையது கிராம வெறுப்பு. கிராமங்களையும் நகரங்களையும் எதிர் எதிரே நிறுத்துவதற்கு மாறாக இந்த முரணியக்கத்தைச் சமநிலையில் பராமரிப்பது தொடர்பில் நாம் யோசிப்பதே இன்றைய தேவை என்று தோன்றுகிறது.
கிராமங்கள் – நகரங்கள் இடையிலான சமநிலைக் குலைவுக்கான முக்கியமான காரணம், ‘உற்பத்தி – சந்தை முறை’யில் நேரிட்ட சமநிலைக் குலைவு. சுற்றிலும் உள்ள கிராமங்களில் உற்பத்தி, அவற்றின் மையத்தில் உள்ள நகரத்தில் சந்தை என்று ஒன்றையொன்று நேரடியாகச் சார்ந்து இயங்குவதாக இந்த அமைப்பு நீடித்தவரை கிராமங்கள் – நகரங்கள் சமநிலையில் குலைவு இல்லை. தொழில்மயமாக்கலின் விளைவாக நகரங்கள் பெரும் ஆலைகளோடு உற்பத்திக் கேந்திரங்களாகவும் உருவெடுத்த பிறகு, புதிய ஜனநாயக மாற்றங்களும் சேர்ந்து, நகரமையச் சிந்தனையை அரசுகள் சுவீகரித்துக்கொள்ள நகரங்களின் கை ஓங்கியது. இப்போது மீண்டும் உற்பத்தியை நகரங்களுக்கு வெளியே கொண்டுசெல்வதை நாம் யோசிக்க வேண்டும்.
சுயசார்பு தொடர்பில் நாம் நிறையப் பேசுகிறோம். எந்த ஒரு ஊரும் உணவுக்கு எப்படி முழுமையாக வெளிப் பிராந்தியத்தைச் சார்ந்திருக்க முடியாதோ அதேபோல, தொழில் வாய்ப்புகளுக்கும் முழுமையாக வெளிப் பிராந்தியத்தைச் சார்ந்திருக்க முடியாது. உணவு, தொழில் வாய்ப்புகள்போல, பசுமையான சூழலையும், ஜனநாயகச் சமநிலையையும் உள்ளடக்கியதுதான் சுயசார்பு. இவற்றை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அது வெறுமனே உபதேசங்களை வாரி வழங்கிவிட்டு சுயசார்பை முற்றிலுமாகத் தனிமனிதர்களின் பொறுப்பாக்கிவிட முடியாது.
சுயசார்பானது கூட்டுப்பொறுப்பு. ஊர்களுக்கான திட்டமிடல் இதில் முக்கியமான அம்சம்; அது ஒரு தொடர் பயணம். ஒவ்வொரு முடிவும் முக்கியமானது. பிரிட்டிஷார் 1853 ஏப்ரல் 16 அன்று 14 பெட்டிகளில் 400 பயணிகளோடு தொடங்கிய முதல் ரயில் சேவைக்கு அன்றைய பம்பாய்க்கு மாற்றாக வேறு ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்றைய மும்பை எப்படியானதாக இருந்திருக்கும்? 1911-ல் அன்றைய கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றாவிடில் இன்றைய கொல்கத்தா என்னவாக இருந்திருக்கும்? சுதந்திர இந்தியாவின் ஊர் கட்டுமானத் தோல்விகள் தலைநகர் டெல்லியின் விரிவாக்கத்திலேயே தொடங்கிவிட்டன. இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதற்கும், குடியரசாக அறிவிக்கப்பட்டதற்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் (1947-1951) மட்டும் 10 லட்சம் பேர் புதிதாக டெல்லிக்குள் வந்திருந்தனர்; அதாவது, மக்கள்தொகை இரட்டிப்பானது.
பிரிவினைக் கலவரங்கள் உண்டாக்கிய புலம்பெயர்வே இதற்கான முக்கியமான காரணம் என்றாலும், அகதிகளின் நிரந்தரக் குடியேற்றத்துக்கான விரிவான ஏற்பாடுகளை இந்திய அரசு சிந்திக்கவில்லை. விளைவாக, டெல்லியைச் சுற்றியிருந்த கிராமங்களை விழுங்கியே அகதிகளின் குடியேற்றமும், அதன் வழியிலான நகர விரிவாக்கமும் நடந்தன. 1951-ல் 198 சதுர கி.மீ. பரப்பில் இருந்த டெல்லியின் நகர்ப்புற பகுதி, 1961-ல் 323 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்தது. “இது தவிர்க்க முடியாத தற்காலிக ஏற்பாடாகிவிட்டது; நகரங்கள் சிறப்பாகத் திட்டமிடப்பட வேண்டும்” என்று அரசின் தோல்வியை ஒப்புக்கொண்டு பேசினார் முதல் பிரதமர் நேரு. ஆயினும், இந்தியா அதற்குப் பின்னரும் முறையாக நகரங்கள் - கிராமங்களைத் திட்டமிடவில்லை. நகரங்கள் - கிராமங்களின் உள்ளடகத்தில் உள்ள குறைகள் சீரமைக்கப்படவில்லை.
பரவலான வளர்ச்சியை நீண்ட காலமாகப் பேசுகிறோம். ஆயினும், பெருநகரங்கள் சார்ந்தே வளர்ச்சி குவிகிறது. ஏன்? அங்குள்ள வாய்ப்புகள்தான் முக்கியமான காரணம். இயல்பாகவே வெவ்வேறு துறைசார் ஆளுமைகள் ஒரே ஊரில் திரளும்போது - கல்வி, வர்த்தகம், கலை, அறிவியல், அரசியல் அதிகாரத்தின் கூட்டு சக்தி ஒரே இடத்தில் வெளிப்படும்போது, அந்தக் கூட்டு சக்தியின் விளைவு நம்முடைய கற்பனைகளையும் கட்டுப்பாடுகளையும் விஞ்சிவிடுகிறது. அரசும் தன்னுடைய எல்லாத் துறைகளையும் ஒரே இடத்தில் குவிக்கும்போது பெருநகரங்கள் வீங்கிவிடுகின்றன.
இந்தியாவிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்டதும் – பிரேசிலுக்கு சமமானதுமான – உத்தர பிரதேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புக்கு இணையான உற்பத்தி மதிப்பை மும்பை நகரம் மட்டுமே கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கை சென்னை மட்டுமே கொண்டிருக்கிறது. இப்படி வளரும்போது நகரத்துக்குக் காய்கனி வழங்கிய படப்பைப் பகுதியையும் தொழிற்பேட்டையாக அது விழுங்கிவிடுகிறது. அதாவது, எல்லா நகரங்களையும்கூட அல்ல; சில பெருநகரங்களை மட்டுமே நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். கூடவே நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் சமநிலையையும் குலைத்துவிடுகிறோம். ஒரு நகரத்தின் மையத்தில் இருப்பவர் அதே நகரத்தின் விளிம்பில் இருப்பவரைக் காட்டிலும், அவர் விரும்பும் வேலைக்குக் குறைந்தது மூன்று மடங்கு அருகில் இருக்கிறார் என்றால், கிராமங்களில் வசிப்பவர்களின் வாய்ப்புக்கான தொலைவை எப்படி விவரிப்பது?
அதிகாரத்தை எப்படிப் பகிரவில்லையோ அப்படியே வாய்ப்புகளையும் நாம் பகிரத் தவறிவிட்டோம். அதுதான் நம்முடைய தவறுகளிலேயே பிரதானமானது. இப்போது இணை உருவாக்கம் தேவைப்படுகிறது. நாம் நீண்ட காலமாகக் கிராமங்களுக்கு நகரத்தன்மை அளிப்பதைப் பற்றிப் பேசிவந்திருக்கிறோம்; இனி நகரங்களுக்கும் கிராமத்தன்மை அளிப்பதைப் பற்றிப் பேச வேண்டும். பெருநகரங்களுக்கு ஒத்திசைவாக சிறுநகரங்கள், கிராமங்களையும் கிராமங்கள், சிறுநகரங்களுக்கு ஒத்திசைவாகப் பெருநகரங்களையும் கற்பனைசெய்ய வேண்டும். முக்கியமாக, எல்லாத் துறைகளும் ஓரிடத்தில் குவிவதை உடைக்க வேண்டும். இந்திய நகரங்களையும் கிராமங்களையும் மறுவரையறுப்பதற்கு இது மிக முக்கியமான தருணம். நம்மை நாம் புதுப்பித்துக்கொள்வோம்!
- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT