Published : 03 Jun 2020 11:17 AM
Last Updated : 03 Jun 2020 11:17 AM
விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்தில் ஒரு காட்சி. தங்கச்சியை கட்டிக்கொடுக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டு நாட்களாய் வீட்டுக்கு வராத மச்சினனைத் தேடச் சொல்லும் பசுபதி ‘பம்ப்செட்டுல எங்கயாவது இருக்கப்போறான்’என்பார். பம்ப்செட்டில்தான் இருப்பான், போய்த் தேடு என்று சொல்வதற்குப் பெரிய விஷயஞானமெல்லாம் தேவையில்லை. அவன் அங்குதான் இருப்பான். பெரும்பாலான கிராமத்து இளைஞர்களுக்கு வீட்டில் தனியறை வசதிகள் இல்லை, எனவே பம்ப்செட் கொட்டகைகள் அவர்களது சொர்க்கமாகிவிடுகிறது என்பது மட்டும் காரணமில்லை. வாரத்தில் எத்தனை நாட்கள், எவ்வளவு மணி நேரம் பம்ப்செட் மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்கும் என்று தெரியாது. அந்தக் கொட்டகையிலேயே ஒரு கயிற்றுக்கட்டிலைப் போட்டு உறங்கி, மின்விளக்கு எரிந்தால் அலறியெழுந்து தண்ணீர் பாய்ச்சி, நள்ளிரவுக்குப் பிறகு வயற்காட்டிலேயே தூங்க வேண்டும் என்பது அவர்களுக்கு சபிக்கப்பட்ட வாழ்வு.
‘கருப்பன்’ மட்டுமில்லை, கிராமியப் பின்னணியில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவருகின்றன. கிராமம் என்கிறபோது தவிர்க்கவியலாமல் விவசாயமும் வந்துவிடுகிறது. ஆழ்துளைக் கிணறுகள் இல்லாமல் இன்றைக்கு விவசாயமே சாத்தியமில்லை. குலசாமிக் கோயில், பஞ்சாயத்து ஆலமரம் போல பம்ப்செட் கொட்டகைகளும் கிராமத்து வாழ்வின் முக்கியமான களம். எனவே, சினிமாக்களிலும் அது ஒரு தவிர்க்க முடியாத லொக்கேஷன் ஆகிவிட்டது.
‘களவாணி’யில் விமலும் ஓவியாவும் பம்ப்செட் கொட்டகையில் அமர்ந்து சீட்டுவிளையாடுகிறார்கள் என்றால் ‘சண்டிவீர’னில் அதர்வாவும் ஆனந்தியும் ‘ஷாக் அடித்து’ (?) விளையாடுகிறார்கள். கிராமத்து காதலர்களுக்கு இயற்கை கட்டிய திரைகளில் பம்ப்செட் கொட்டகைகளும் ஒன்றாகிவிட்டது. ஆனால், முன்னது டீசல் மோட்டார். இரண்டாவது, மின்சார மோட்டார். இன்றைக்கும்கூட இலவச மின்சாரம் கிடைக்காமல் டீசல் மோட்டார்கள் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ‘கரகாட்டக்காரன்’ காலத்திலிருந்து இன்னும் இந்தக் காட்சி மாறவில்லை. ‘உனக்கு ஏரிக்கரை நிலம், எனக்கு காமாட்சி’ என்று சந்தானபாரதி சந்திரசேகரிடம் ஆசைகாட்டும் காட்சி ஞாபகமிருக்கிறதா? பின்னணியில், கட்டுக்கேணியிலிருந்து டீசல் மோட்டாரில் தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும்.
டீசல் மோட்டாருக்கு முன்னால், மாடுகளை நுகத்தடியில் பூட்டி கிணற்றிலிருந்து ஏற்றம் இறைக்க வேண்டும். ‘கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்’ பாடலில், கிணற்றுக்குள்ளிருந்து சுகன்யா வருவாரே, அதுபோல. தண்ணீரை கிணற்றிலிருந்து இழுத்து வெளியே கொண்டுவரும் மாடுகள், வாளி மீண்டும் கிணற்றுக்குள் இறங்கும்போது கால்கள் பின்னியபடி பின்னால் நகர்வதைப் பார்க்கையில் வேதனையாக இருக்கும்.
‘சின்னத்தம்பி’யின் ‘போவோமா ஊர்கோலம்’ தொடங்கி ‘றெக்கை’யின் ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’ வரை கிராமத்துக் காட்சிகளில் எப்போதுமே பம்ப்செட் கொட்டகைகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. கிராமத்திலிருப்பவர்களுக்கு அதைத் தனித்துப்பார்க்க முடியாது. நகரத்திலிருப்பவர்களுக்கு அதன் அத்தியாவசியம் தெரியாது. பாசனத்துக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும்கூட கிராமங்கள் இன்று ஆழ்துளைக் கிணறுகளைத்தான் நம்பியிருக்கின்றன. நாயகி தன்னுடைய தோழிகளோடு குடிதண்ணீர் எடுக்க குடத்தோடு செல்லும் காட்சிகளையெல்லாம் தமிழ் சினிமாவும் மறந்துவிட்டது. ஆறு, குளங்களில் குளிப்பதெல்லாமும் ஆண்டுக்கு ஒன்றிரண்டு மாதங்களே. எப்போதாவது வாய்க்கும் பம்ப்செட் சிற்றருவிக் குளியலில்தான் உடலும் மனமும் இப்போது இளைப்பாறிக்கொள்ள வேண்டும்.
இலவச மின்சாரம் கூடாது என்று கூறுபவர்கள் அது ஏதோ சலுகைபோலவும் 24 மணி நேரமும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருப்பதுபோலவும் நினைக்கலாம். உண்மைநிலை அப்படியில்லை. தங்கர்பச்சானின் ‘அழகி’ படத்தில் ஒரு காட்சி. நகரத்தில் கால்நடை மருத்துவராக இருக்கும் நண்பனின் வீட்டுக்கு வரும் கிராமத்தவர்களில் ஒருவன் அங்குள்ள குளிர்சாதனப்பெட்டியைப் பார்த்தும் நகரங்களில் இரவுபகலாக மின்சாரம் கிடைப்பதைப் பற்றியும் மனம்வெதும்பி புலம்புவான்.
‘நம்மளுக்கு என்னடாண்ணா விவசாயம் பண்ண வெறும் ஆறு மணி நேரம் கரண்ட் கொடுக்குறது. அதுவும் ராத்திரியில. அவன் அவன் பாம்பு கடிச்சு சாகுறான். ஓஹோ... இங்க இந்த மாதிரி அட்டகாசம்தான் நடக்குதோ...’
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT