Published : 27 May 2020 05:34 PM
Last Updated : 27 May 2020 05:34 PM
‘கோவிட்-19’ கட்டுப்பாடுகளைக் காலவரையின்றித் தொடர்வது சாத்தியமல்ல என்று கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா கூறியிருப்பது, பொது முடக்கத்தை விலக்கிக்கொள்ளக் கென்ய அரசு தயாராகிவருகிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக, தாங்க முடியாத வலியுடன் கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சமாளித்துக் களைப்புற்றிருக்கும் கென்யக் குடிமக்களுக்கு இது நம்பிக்கையை அளித்திருக்கிறது.
எனினும், இனி வரப்போகும் சவால் மிகப் பெரியது என்பதை நாம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தப் பெருந்தொற்று அத்தனை விரைவில் அகலப்போவதில்லை எனும் நிலையில், கட்டுப்பாடுகளை நீக்குவது என்பது ஆபத்துகள் நிறைந்த விஷயம்தான். உண்மையில், உலக சுகாதார நிறுவனமும் இதே கருத்தைத்தான் கூறியிருக்கிறது. மேலும், கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்திருக்கும் நாடுகள் அதுதொடர்பான வியூகங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. முறையாகத் திட்டமிடுவதும், தொற்றுக்குள்ளாகாமல் மக்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமை ஆகும்.
இந்த நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட வேண்டும். மேலும், தளர்வுகளின் காரணமாக மக்கள் தூண்டப்படும் சூழலைத் தவிர்க்க, தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இதற்குச் சமகால முன்னுதாரணங்களும் உண்டு.
பல்வேறு நாடுகள், தங்கள் குடிமக்கள் மீண்டெழுந்து வாழ்க்கையைத் தொடரும் வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை மீள் திறப்பு செய்திருக்கின்றன. ஜெர்மனியை உதாரணமாகச் சொல்லலாம். அந்நாடு கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பது மட்டுமல்லாமல், ‘பண்டெஸ்லிகா’ எனும் கால்பந்து லீக் போட்டிகளையும் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதேசமயம், அதற்குக் கடுமையான விதிமுறைகளையும் விதித்திருக்கிறது – மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது எனும் நிபந்தனை உட்பட!
இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்று கென்யாவும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளும்பட்சத்தில் உடனடியாகப் பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம். தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதார நெறிமுறைகளை மக்கள் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள் என்றும், வைரஸ் பரவல் அபாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணிகளைச் செய்யத் தொடங்குவார்கள்; பயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் வலுவான அச்சம் எழுந்திருக்கிறது. எனினும், இந்த விவாதத்தில் இது ஒரு தொடக்கப்புள்ளிதான்.
அரசு இறுதியாகக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும்போது, மக்கள் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விஷயம் - சுய கட்டுப்பாடு. ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் மிகத் தீவிரமான கவனத்துடன் நடந்துகொள்வது அவசியம். மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளில் மிக ஆழமான மாற்றத்தைக் கரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாற்றம் எதிர்காலத்திலும் நீடிக்கும் என்றே தெரிகிறது.
தூய்மையிலும் சுகாதாரத்திலும் மிகத் தீவிரமான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது என்பது, நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய, கற்றுக் கொள்ள வேண்டிய புதிய இயல்பாகியிருக்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது என்பது அரிதான விஷயமாக இருக்கும். மிக மிக அவசியமான தருணத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும்.
முன்பே சொன்னதுபோல, மூன்று மாதங்களாகத் தொடரும் பகுதியளவிலான பொது முடக்கம், மிகவும் துயரகரமானதாகவே இருக்கிறது. சமூக, பொருளாதார, சுகாதார ரீதியில் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் மிக அதிகம். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் சூழலில், என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பித் தவிக்கிறார்கள் மாணவர்கள். உலகளாவிய பெருந்தொற்றால் பேரழிவைச் சந்தித்திருக்கும் பிற நாடுகளைப் போலவே கென்யாவும் தனது பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது.
இதிலிருந்து மீண்டுவர, நன்கு சிந்தித்து ஆராயப்பட்ட ஒரு மீட்பு வியூகத்தை அரசு உருவாக்க வேண்டும். நாட்டின் வாழ்வாதாரமாக இருக்கும் பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டுவதுதான் பிரதானமான நோக்கமாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, ‘கோவிட்-19’ பெருந்தொற்றுக்குப் பிறகான புதிய இயல்பைப் புரிந்துகொள்ள மக்கள் முறையாக சமூக மயப்பட வேண்டும். உலகம் ஒரு புதிய இயல்பு முறைக்குள் நுழைகிறது. ஆம், பழைய இயல்பு மறைந்து, புதிய இயல்பு வந்துவிட்டது!
- கென்ய நாளிதழான ‘டெய்லி நேஷன்’ இதழில் வெளியான தலையங்கம்.
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT