Published : 12 Aug 2015 09:15 AM
Last Updated : 12 Aug 2015 09:15 AM
இரண்டாவது கட்டமாக 1980-களில் தாமிரபரணிக்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது. காடுகள் அழிக் கப்பட்டதால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பக்கிள் சொன்னதுபோல் ஒரு கட்டத்தில் தாமிரபரணி வறண்டே போய்விட்டது. ஆனால், அதன் பின்பு தமிழக வனத்துறை எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தாமிரபரணியை மீட்டிருக்கின்றன. இதுதொடர்பான தகவல்களைப் பகிர்ந்துக்கொண்டார் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் முன்னாள் துணை இயக்குநரும் தற் போதைய கொடைக்கானல் மாவட்ட வன அலுவலருமான டி. வெங்கடேஷ்.
வறண்டுபோன தாமிரபரணி
“1970-களுக்குப் பிறகு மீண்டும் காட்டை அழிக்கும் செயல்கள் தொடர்ந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால், வற்றாத ஜீவநதியாக ஓடிய தாமிரபரணி, 1980-களில் கோடையில் நான்கு மாதங்கள் வறண்டது. இந்த நிலையில் 1990-ல் இந்த பகுதி களக்காடு - முண்டந் துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப் பட்டது. 1995-ல் சூழல் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. 178 கிராமங் கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் மக்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. 64 வகையான மாற்று சிறு தொழில் பயிற்சிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. 2000-களில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, 243 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இதன் மூலம் 34,000 குடும்பங்கள் பலன் பெறுகின்றன.
ஊருக்குள் சொரிமுத்து அய்யனார்
2000-களின் தொடக்கத்தில் தமிழகத்தி லிருந்து பக்தர்கள் காரையாறு அணை - பாண தீர்த்தம் - பூங்குளம் வழியாக பொதிகை மலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டார்கள். ஆரம்பத்தில் சில நூறு பேர் மட்டுமே சென்ற நிலையில் இவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் அதிக ரித்தது. காடுகளுக்குள் பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்தன. நதி நீர் கடுமையாக மாசுப்பட்டது. காட்டை யும் நதியையும் காக்க காரையாறு அணையுடன் மக்கள் நுழைவதை தடை செய்தோம். மக்கள் கடவுளைக் காரணம் காட்டி சண்டையிட்டார்கள்.
இதை சமாளிக்க கிராமம் தோறும் சென்று சொரிமுத்து அய்யனார் நாடகம் நடத்தினோம். ‘என் இடம் அசுத்தமாகிவிட்டதால் நானே உங்கள் இடத்துக்கு வந்துவிட்டேன்’ என்று சாமியே நேரில் வந்து சொல்வது போல பிரச்சாரம் செய்தோம். மக்கள் மனம் மாறினார்கள்.
10,000 கனஅடி உயர்ந்த நீர்வரத்து
தொடர்ந்து 1946-ம் ஆண்டு தொடங்கி 2010 ஆண்டு வரையிலான 64 ஆண்டுகளின் காரையாறு அணையின் நீர்வரத்து குறித்து ஓர் ஆய்வு செய்தோம். அதில் 1990-கள் வரை காரை யாறு அணைக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்துக் கொண்டி ருந்தது. ஆனால், 1990 முதல் இன்று வரை அணைக்கு ஆண்டுக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. காடுகளை காப்பாற்றியதால் கூடுதலாக கிடைத்த தண்ணீர் இது. மக்கள் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட களக்காடு முண்டந் துறை புலிகள் காப்பகம், பல்லுயிர் செழிப்பில் இன்று நாட்டுக்கே முன்னு தாரணமாக திகழ்கிறது.” என்றார்.
இதேபோல பாபநாசத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு அடர்ந்த வனத்தின் வழியாக சாலைப் போக்கு வரத்து ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காட்டை காப்பாற்றியது தமிழக வனத் துறை. இப்படி கடந்த காலங்களில் அங்கே பணியாற்றிய தமிழக வனத் துறை அதிகாரிகள் பிரமோத்குமார், அண்ணாமலை, மல்கானி, பத்ரசாமி, மல்லேசப்பா, ராம்குமார், சஞ்சய்குமார், ஸ்ரீவத்சவா மற்றும் தற்போதைய கள இயக்குநர் அ.வெங்கடேஷ் ஆகியோரின் பங்கும் அளப்பறியது.
கொக்கரை என்ற இசைக்கருவியுடன் காணி இனமக்கள். | படம்:கா.அபிசு விக்னேசு.
காடுகள் பாதுகாப்பில் காணிகள்
தாமிரபரணி நதிக்கரையில் அடர்ந்த வனத்துக்குள் காலம் காலமாக வசிப்பவர்கள் காணி பழங்குடி இன மக்கள். காடுகளை பாதுகாப்பதில் இவர்களே முதன்மையானவர்கள். ஆற்றை தெய்வமாக வணங்குகிறார்கள். ஆற்றில் இறங்கி குளிப்பார்களே தவிர, காலை தேய்த்து கழுவ மாட்டார்கள். 1970-களில் வனத்துக்குள் சுமார் 16,000 காணிகள் இருந்தனர். படிப்படியாக அவர்களை இடப் பெயர்வு செய்தது அரசு. தற்போது வனத்துக்குள் இஞ்சிக் குழியில் மட்டும் சொற்ப குடும்பங்கள் வசிக்கின்றன.
மயிலாறு, காரையாறு, சேர்வலாறு, அகத்தியர் நகர் பகுதிகளில் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். காணிகள் சமூகத்தில் மூட்டில்லம், கையில்லம் என்று இரு பிரிவினர் இருக்கின்றனர். கொக்கரை என்கிற இசைக்கருவியை இசைத்து சாத்துப்பாட்டு, கும்மிப்பாட்டு பாடுகிறார்கள். காணிகளின் தலைவனை முட்டுக்காணி என்கிறார்கள்.
காணிகளின் ஆரம்ப காலத் தொழில் வேட்டை, தேன் சேகரிப்பது. தற்போது விவசாயம் செய்கிறார்கள். இவர்கள் சேகரிக்கும் தேன்களில் கொசுவந்தேன் எனப்படும் அரிய வகை தேன் லேசான புளிப்புத் தன்மைக் கொண்டது. மருத்துவ குணங்கள் நிறைந்தது. தவிர, மருத்துவ குணங்கள் நிரம்பிய மூங்கில் வாழை, கடநெல் பயிரிடுகிறார்கள். காணிகளின் மூலிகை அறிவு அபாரமானது. அதே போல் பொதிகையின் தெற்குப் பகுதிதான் மலைக்குறவர்களின் ஆதி நிலம். இவர்களை வைத்துதான் கூட ராசப்ப கவிராயர் ‘குற்றால குறவஞ்சி’ எழுதினார். ஆனால், இப்போது அவர் களும் அருகிவிட்டனர்.
அரிய வகை குரங்கினங்கள் வசிக்கும் ஒரே காப்பகம்
தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளின் முக்கிய நீர்ப் பிடிப்புப் பகுதி களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம். களக்காடு 251 சதுர கி.மீட்டரும், முண்டந்துறை 567 சதுர கி.மீட்டரும் பரப்பளவுக் கொண்டவை. தற்போது இங்கு சுமார் 20 புலிகள், 50 சிறுத்தைகள் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கரு மந்தி, சாம்பல் (அனுமன்) மந்தி, சிங்கவால் குரங்கு, வெள்ளை சுழித்தலைக் குரங்கு, தேவாங்கு என ஐந்து வகையான குரங்கு இனங்கள் வசிக்கின்றன. இவற்றில் ஐந்து வகை குரங்குகளும் வாழும் ஒரே இடம் இந்த புலிகள் காப்பகம் மட்டுமே. மக்களுடன் இணைந்து சிறந்த வன மேலாண்மை மேற்கொண்டதற்காக தேசிய புலிகள் காப்பகத்தின் விருது பெற்றது இந்த புலிகள் காப்பகம்.
(தவழ்வாள் தாமிரபரணி)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT