Published : 04 Aug 2015 09:31 AM
Last Updated : 04 Aug 2015 09:31 AM
சென்னையைச் சேர்ந்த அந்த 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டார். பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அவளைத் தேடி வந்தவர்களை விரட்டி அடித்ததற்காக 72 மணி நேரம் சோறு, தண்ணீர் இன்றி அடைத்துவைக்கப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பின், தன் மீது திணிக்கப்பட்ட பாலியல் தொழிலை வேறு வழி தெரியாமல் சகித்துக்கொண்டார். ஆறு மாதங்கள் கழித்து அங்கிருந்து தப்பினார். சென்னை திரும்பினார். மறுவாழ்வு இல்லம் ஒன்றில் தஞ்சமடைந்தார். கொஞ்ச காலம் போனது. அந்தச் சிறுமி உட்பட நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என அப்போது, இந்தியாவிலேயே முதல்முறையாக - அதாவது 1986-ல் ஹெச்.ஐ.வி. கண்டறியப்பட்ட ஆறு பேரில் அந்தச் சிறுமியும் ஒருவர். கண்டறிந்தவர் மருத்துவர் சுனிதி சாலமன்!
இந்தியாவை ஆழமாகச் சூறையாடிக்கொண்டிருந்த எய்ட்ஸுக்கு எதிரான பெரும் போரின் தொடக்கப் புள்ளி சுனிதி. ஆரம்பத்தில், பலரையும்போல ‘எய்ட்ஸ்’ என்ற சொல்லை ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தி, எய்ட்ஸ் நோயாளிகள் என்றால், ‘ஒழுக்கமற்றவர்கள்’ என்று நினைத்துக்கொண்டிருந்த சுனிதியின் வாழ்க்கையையே திருப்பிப்போட்டவர் அந்தச் சிறுமி; அவருடைய பரிதாபமான கதை! சென்னை மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியரான சுனிதி, அதன் பிறகு தன் வாழ்வையே முழுமையாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணித்தார்.
நடுக்கம் தந்த செய்தி
எய்ட்ஸ், 1980-களின் தொடக்கத்திலேயே உலகெங்கும் அடையாளம் காணப்பட்டுவிட்டாலும், அப்போது அது தன்பாலின ஆண்களை மட்டுமே தாக்கக் கூடியது என்று பரவலாக நம்பப்பட்டது. அதனாலேயே ஆண்கள் சார்ந்து, ‘கிரிட்’ (கே ரிலேடட் இம்யூன் டெஃபிஷியன்சி) என்றும்கூடப் பெயரிடப்பட்டது. ஒருகட்டத்தில் பெண்களிடமும் ஹெச்.ஐ.வி. கூறுகள் கண்டறியப்பட்ட பின்னர்தான், அதனால் ஏற்படும் நோய்க்கு எய்ட்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. அப்போதும் கூட, ஒழுக்கம் சார்ந்த நோயாக அது பார்க்கப்பட்டதால், எங்கோ, யாரையோ பாதிக்கக்கூடியது. குறிப்பாக, வெளிநாடுகளில் மட்டுமே அதன் பாதிப்பு இருக்கும் என்றே இந்திய மருத்துவத் துறையினரே நினைத்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவில் - அதிலும் தமிழகத்தில் ஹெச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டபோது, பலரும் அதை நம்பவில்லை. சுனிதியின் அறிவிப்பை யாரும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ரத்த மாதிரிகள் வேலூர் சிஎம்சி கல்லூரிக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டன. அங்கும் உறுதிசெய்யப்பட்டபோது நடுங்கிப்போனார்கள். 1986 மே மாதத்தில் தமிழக சட்ட மன்றத்தில் இந்த விஷயம் அறிவிக்கப்பட்டது.
இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் பாலியல் விழிப்புணர்வை வெளிப்படையாக ஏற்படுத்த முடியாத காலம் அது. அப்போதே பாதுகாப்பான பாலியல் குறித்துப் பொதுக்கூட்டங்களில் துணிச்சலாகப் பேசினார் சுனிதி. “இனி, ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அந்த நோயை எதிர்க்கப்போகிறேன் என்று வீட்டில் சொன்னபோது, என்னுடைய கணவர் ஆரம்பத்தில் கவலைப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும். பிறகு, ஒருபோதும் என்னைத் தடுக்க மாட்டீர்கள் என கணவரிடம் சொன்னேன்” என்று சுனிதி 2009-ல் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
முன்னோடி நிறுவனம்
ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கான முதல் தன்னார்வ ஆலோசனை மற்றும் சோதனை மையத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1993-ல் நிறுவினார். இருப்பினும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. மருத்துவர்கள்கூட எய்ட்ஸ் என்றால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தயங்கினர். ஒருகட்டத்தில் தன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி நவம்பர் 1993-ல் எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிக்கும் ‘ஒய்.ஆர்.ஜி. கேர்’ தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அப்போது அவருடன் நின்றவர்கள் மூன்று பேர் மட்டுமே. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்க எந்த மருத்துவமனையும் முன்வராத நிலையில், சென்னை பாண்டி பஜார் பகுதியில், தெருவோரத்தில் கூடாரம் அமைத்து மருத்துவச் சேவை அளிக்கத் தொடங்கினார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தை அரசு துவக்குவதற்கு முன்பே ஹெச்.ஐ.வி. தொற்றாளர்களை முதன் முதலில் கண்டறிந்து அவர்களுக்கு முழு நேர மருத்துவ சிகிச்சை அளிக்க தன்னார்வ சுகாதார சேவை (வி.ஹெச்.எஸ்) மையத்தை நிறுவினார். “அன்று அவர் அரும்பாடுபட்டு உருவாக்கிய அவருடைய நிறுவனத்தில் இன்று 500 ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள். 2014-ல் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி, 20 லட்சத்துக்கும் அதிகமான ஹெச்.ஐ.வி. தொற்றாளர்களைக் கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 30,000 பேருக்கு எங்கள் அமைப்பு சிகிச்சை அளித்துள்ளது” என்கிறார், கடந்த 15 ஆண்டுகளாக சுனிதியின் உதவியாளராகப் பணியாற்றிய ஆனி. எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் அளிக்கும் நிறுவனங்களின் முன்னோடி இது.
உயிர்காத்த தருணங்கள்
சிகிச்சை அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஹெச்.ஐ.வி. தொற்றாளர்களின் மறுவாழ்வுக்கும் உதவினார் சுனிதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த வாழ்க்கைத் துணையைக் கண்டறிந்து, அவர்களுக்குத் திருமணமும் செய்துவைத்தார். பலரும் அவர்களை ஒதுக்கிய நிலையில், அவர்களில் பலருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களிலும் உதவினார். “இந்தியாவின் ஹெச்.ஐ.வி. பாசிடிவ் சங்கத்தின் தலைவராக இருந்த அசோக் பிள்ளை, 2002-ல் நோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடினார். அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க அத்தனை மருத்துவமனைகளும் மறுத்துவிட்டன. அப்போது எங்கள் மையத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை. அப்படி ஒரு தீவிர சிகிச்சை அளிக்க அந்நாட்களில் ரூ. 17 லட்சம் தேவைப்பட்டது. ஆனால், சுனிதி சோர்ந்துபோகவில்லை. உடனடியாக எல்லா மட்டங்களிலும் இறங்கி நிதி திரட்டிச் சிறப்புச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்” என நினைவுகூர்கிறார் கடந்த 30 ஆண்டுகளாகச் சுனிதியின் திட்ட மேலாளராக இருந்துவரும் ஏ.கே.கணேசன். இதேபோல, ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட எத்தனையோ கர்ப்பிணிப் பெண்களுக்குத் துணிந்து சிகிச்சை அளித்துத் தாயும் சேயுமாகக் காப்பாற்றிய உன்னதத் தருணங்களை நினைவுகூர்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக எய்ட்ஸ் எனும் ஆட்கொல்லியைத் துணிந்து எதிர்த்து, அதனால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்தவர் சுனிதி. 2009-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘தேசியப் பெண்கள் உயிரி-விஞ்ஞானி விருது’, தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது’ இப்படிப் பல விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அவருடைய பணிகளுக்கு நம் சமூகம் கொடுத்த அங்கீகாரம் குறைவு என்கிறார்கள் அவரைத் தெரிந்தவர்கள். எய்ட்ஸை ஒழிக்க மாற்று மருந்து கண்டறிய வேண்டும் என்பது சுனிதியின் நெடுநாள் கனவாக இருந்திருக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் வாழ்நாள் முழுக்க ஓடியிருக்கிறார். இப்போது அவருடைய ஓட்டம் நின்றுவிட்ட நிலையில், அந்தக் கனவு நனவாக இன்னும் பல சுனிதிகள் தேவைப்படுகிறார்கள்!
- ம.சுசித்ரா,
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT