Published : 07 Aug 2015 10:25 AM
Last Updated : 07 Aug 2015 10:25 AM
ஐம்பூதங்களில் அடுத்ததாக ‘தீ’.
‘மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல’
என்று ஆரம்பிக்கும் புறநானூற்றுப் பாடல் ஐம்பூதங்களையும் தனித்தனியே பார்க்காமல் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவையாகவே பார்க்கிறது. பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவை என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக இந்தப் பாடல் இருக்கிறது. தீயைப் பற்றிச் சொல்லும்போது, காற்றுடன் அதற்கு இருக்கும் தொடர்பைச் சொல்லி நீருடன் தீ வேறுபடுகிறது என்பதையும் இந்தப் பாடல் பதிவுசெய்கிறது.
‘நெருப்பென்று சொன்னால் வாய் வெந்து விடாது’என்பது இன்றும் வழக்கில் இருக்கும் பழமொழி. ஆனால், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான லா.ச.ராமாமிர்தம் அப்படியே இந்தப் பழமொழிக்கு நேரெதிராகப் பேசுகிறார்: ‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்.’ பாரதியாரோ ‘தீக்குள் விரலை’ வைத்து நந்தலாலாவைத் ‘தீண்டுமின்பம்’ பெறுகிறார். ‘அக்னிக் குஞ்’சொன்றைக் கொண்டு ஒரு காட்டையே வெந்துபோக வைக்கிறார். ‘தீ தீ தித்திக்கும் தீ/ தீண்டத் தீண்டச் சிவக்கும்’ என்று திரைப்படத்தில் ஒரு காதலி தன் காதலின் நுனிநாக்கால் தீயை ருசிக்கிறாள்.
தீ சுடும், கொல்லும் என்றாலும் தீயின் மீது ஏன் இவ்வளவு காதல், தீ எப்படித் தித்திக்கும் என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. ஆதி மனிதர்கள் அதிகமாக அஞ்சிய இயற்கையின் கூறுகளில் தீ தலையாயது. ஆனால், அச்சுறுத்தும் அதே நேரத்தில் தீ நமக்கு உதவவும் செய்கிறது. அமானுஷ்யமும் அச்சமும் பக்தியும் சேர்ந்து இனம்புரியாத ஒரு ஈர்ப்பைத் தீயின் மேல் ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
நெருப்பின் பயன்பாடு என்பது பாதுகாப்பு, உணவு போன்ற காரணங்களில் ஆரம்பித்து இன்று ‘அக்னிச் சிறகு’களை (ஏவுகணைகள்) பறக்கவைப்பதுவரை நீண்டுகொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அக்னி எல்லாவற்றையும் எரித்துவிடும்; கூடவே, தீமை, மாசு, குற்றம் போன்றவற்றையும் எரிக்கும் என்ற நம்பிக்கையில் புராணங்களில் அக்னிப் பிரவேசம் நிகழ்த்தப்பட்டது. அதன் உருவக நீட்சியாக இன்றும் அக்னிப் பிரவேசம் என்ற சொல் நீடிக்கிறது. ஒருவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எதிர்கொள்ளும் உச்சமான சோதனைதான் அக்னிப் பிரவேசம். காலங்காலமாகப் பெண்களுக்கு மட்டும் அது நிகழ்த்தப்படுவதுதான் துயரம்! ஆங்கிலத்திலும் ‘Baptism by Fire’ என்ற தொடர் வழங்கப்படுவதை இங்கு நினைவுகூரலாம். நெருப்பு என்பது தூய்மைப்படுத்தும் சக்தி என்னும் பார்வை பரவலாக இருப்பதையே இது காட்டுகிறது.
தமிழில் உள்ள ‘தீயினால் சுட்ட’ சொற்கள், அதாவது தீயைக் குறிக்கும் சொற்கள் சிலவற்றின் பட்டியல் இது. வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொற்களும் இதில் அடக்கம்:
அக்னி, அங்காரகன், அங்காரம், அங்கி, அரி, அழல். அழலி, அனலம், அனலி, ஆரல், உக்கம், உதவகன், எரி, ஒளி, கச்சு, கச்சுரி, கருநெறி, கனல், கனலி, காட்டாக்கி, காலவம், கிச்சு, கொச்சி, கொள்ளி, சிகி, சித்திரபானு, சினம், சுசி, சுடர், சூரன், செழுமறை, சேர்ந்தார்க்கொல்லி, தணல், தழல், தீ, தீப்பி, தூபம், நீளெரி, நெகிழி, நெருப்பு, பாசனம், மயல், முளரி, வசார், வன்னி, விஷாக்கினி, ஜாதவேதா.
சொல்தேடல்:
‘ஸ்மார்ட்ஃபோன்’ என்ற சொல்லுக்குப் பெரும் பாலான வாசகர்களின் பரிந்துரை: ‘திறன்பேசி’. இந்தச் சொல், சுருக்கமாகவும் பொருத்தமாகவும் தோன்றுகிறது.
லாபி (lobby) என்றொரு சொல் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஒரு விவகாரம் தொடர்பாகத் தங்க ளுக்குச் சாதகமான விளைவை ஏற்படுத்துவ தற்காக ஒரு வட்டாரத்தில் செல்வாக்கு செலுத்தும் செயலையும், செல்வாக்கு செலுத்தும் குழுவையும் ‘லாபி’ என்ற சொல் குறிக்கும். அந்தச் சொல்லுக்கு வேறு பொருளும் இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப் பொருளில் அதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்பதுதான் இந்த வாரக் கேள்வி.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT