Last Updated : 21 May, 2020 06:43 AM

57  

Published : 21 May 2020 06:43 AM
Last Updated : 21 May 2020 06:43 AM

என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு

அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உலகம் முழுக்க இன்று உள்ளூர் அரசியலுணர்வு எழுச்சியடைகிறது. ஒரு திடீர் நெருக்கடி நம்முடைய சகல கற்பிதங்கள், போதாமைகளையும் அம்மணமாக்கி நிஜமான தேவைகளைச் சுட்டுகிறது. உலகெங்கிலும் மாநில அரசுகளாலும் உள்ளூர் அரசுகளாலும் வெகுமக்களாலும் தேசிய அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உலக நாடுகளின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குமோ தெரியாது; ஆனால், நிஜமான சுதந்திரம், நிஜமான இறையாண்மை எதில் உள்ளடங்கியிருக்கிறது என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; நிதியாள்கைதான் அது!

ஜனநாயகப் பகிர்வில் உலகின் மூத்த கூட்டாட்சியான அமெரிக்காவில் நிதிக்காக ஒன்றிய அரசை நோக்கி வெடிக்கும் குரல்கள் கண்டங்களைக் கடந்து பரவுகின்றன. உலகின் பல கூட்டாட்சி நாடுகளில் அமெரிக்காவைச் சுட்டிக்காட்டி அதிகாரப் பரவலை விஸ்தரிப்பதற்கான குரல்கள் எதிரொலிப்பது வழக்கம். அமெரிக்காவிலோ தமக்குப் பின் கூட்டாட்சியை உருவாக்கிய சுவிட்ஸர்லாந்துக்கு இணையாக அதிகாரப் பரவலை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற குரல்கள் வழக்கம். இப்போது மேலும் அது அதிகரிக்கிறது. ஏன் அப்படி? உலகக் கூட்டாட்சி நாடுகளில் அதிகமான அதிகாரப் பரவலையும், அரசியலதிகாரத்தில் அதிகபட்ச மக்கள் பங்கேற்பையும் சாத்தியமாக்கிய நாடு சுவிட்ஸர்லாந்து.

இந்தியாவுக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1848-ல் கூட்டாட்சியை நிறுவியபோதே, ‘அதிகாரத்தை மையப்படுத்தாமல் விஸ்தரிப்பது’ எனும் உயரிய நோக்கை தேசத்தின் ஆன்மாவில் ஊன்றியது சுவிஸ். இன்றைக்கும் ஒரு கோடியைத் தொட்டிடாத சின்ன மக்கள்தொகையைக் கொண்ட சுவிஸ்ஸின் கூட்டாட்சி தன் நாட்டின் பன்மைத்துவத்தை எப்படி அங்கீகரித்து, தன் மக்களுக்குச் சம வாய்ப்பையும் சம அதிகாரத்தையும் வழங்குகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் அதன் ஆட்சிமொழிக் கொள்கை. வேறுபட்ட வரலாற்றையும் கலாச்சாரங்களையும் கொண்ட தன் பூர்வகுடி மக்கள் பேசும் நான்கு மொழிகளையுமே அது ஆட்சிமொழிகளாகக் கொண்டிருக்கிறது சுவிஸ். இதில் பிரதான அம்சம், 65% மக்கள் பேசும் ஜெர்மானிய மொழியையும், 20% மக்கள் பேசும் பிரெஞ்சு மொழியையும், 10% மக்கள் பேசும் இத்தாலிய மொழியையும் எப்படி பாவிக்கிறதோ அப்படியே 1%-க்கும் குறைவான மக்கள் பேசும் ரோமன்ஷ் மொழியையும் அந்நாடு பாவிக்கிறது. பொதுவான மொழி, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் அல்லாமல் குடியுரிமை என்ற ஸ்தூலமற்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுவிஸ் அரசமைப்பானது, ‘மாநிலங்களாலும் அவற்றின் மக்களாலுமே சுவிஸ் கூட்டாட்சி உருவாகியிருக்கிறது’ என்று பிரகடனப்படுத்துவதோடு, ராணுவம், வெளியுறவு, சமூகப் பாதுகாப்பு போன்ற கூட்டுத் துறைகளைத் தவிர்த்து ஏனைய எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளோடும் அவற்றின் வழி உள்ளூர் அரசுகளோடும் பகிர்ந்துகொள்கிறது. சுவிஸ்ஸின் மாநிலங்கள் தனிக் கொடிகள், இலச்சினைகளை மட்டும் அல்ல; கூட்டாட்சி அரசின் மைய லட்சியங்களிலிருந்து விலகாத - அதே சமயம் தமக்கென்ற பிரத்யேகமான அரசமைப்புச் சட்டங்களையும் நாடாளுமன்றங்களையும் வரிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. முக்கியமாக, நிதிப் பகிர்வில் மாநில அரசுகள், உள்ளூர் அரசுகளின் கைகளே ஓங்கியிருக்கின்றன; ஒட்டுமொத்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே சுவிஸ் கூட்டாட்சி அரசு பெறுகிறது.

நாம் இந்தியக் கதைக்கு வருவோம். சுவிஸ்ஸின் சூழல் யாவும் கூட்டாட்சி விழுமியங்கள் என்றால், நேர் எதிரான இந்தியச் சூழலை என்ன பெயரிட்டு அழைப்பது? இந்தியாவில் கூட்டாட்சியை நாம் வலியுறுத்திப் பேசுவதானது நிர்வாக வசதிக்கான ஏற்பாடாகவோ, மேலை காலனியச் சிந்தனைகளின் எச்சமாகவோ அல்ல; அதுதான், இந்தியாவின் மலைக்க வைக்கும் பன்மைத்துவத்தையும் பரந்து விரிந்த மக்கள் கூட்டத்துக்கான சமூகநீதியையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே நியாயம். கிராமங்களின் குடியரசாக காந்தி இந்நாட்டைக் கற்பனைசெய்ததோ, பெரும் கூட்டரசாக அண்ணா முன்மொழிந்ததோ கூட்டாட்சியின் இந்திய வடிவங்கள் மட்டும் அல்ல; உள்ளூர் அரசியலுக்கு உச்சபட்ச சுயாட்சியை அளிப்பதற்கான நவீன சட்டகங்களும்கூட.

ஆச்சரியமூட்டும் ஒரு விஷயத்தை நம் வரலாற்றிலிருந்து நினைவுகூர்வோம். பிரிட்டிஷாரை வெளியேற்றும் போராட்டத்தில், ஏன் ‘சுதந்திரம்’ எனும் சொல்லைக் காட்டிலும், ‘சுயராஜ்ஜியம்’ எனும் சொல் நம் முன்னோரின் விருப்பத்துக்குரிய விடுதலை முழக்கமாக இருந்தது? பிரிட்டிஷார் நல்ல நிர்வாகத்தையே கொடுப்பதாகக் கொண்டாலும்கூட, ‘நல்ல நிர்வாகம் சுயராஜ்ஜியத்துக்கான மாற்றீடு அல்ல!’ என்ற வாதத்தை ஏன் நம் முன்னோர் முன்னெடுத்தனர்? ஏனென்றால், சுயராஜ்ஜியம்தான் உண்மையான சுதந்திரத்துக்கான வெளிப்பாடு. அந்தச் சுதந்திரத்துக்கான அர்த்தபூர்வ உறுதிப்பாடு நிதியாள்கையிலேயே இருக்கிறது.

வரியானது நாம் சமூகமாகத் திரள்வதற்கும் ஒன்றுபட்டு செயலாற்றுவதற்கும் அளிக்கும் பற்றுறுதிப் பங்கு; சமூகத்துக்கும் நமக்குமான பிணைப்பையும் உரிமையையும் சேர்த்தே வரி உத்தரவாதப்படுத்துகிறது. ஒரு ஊரைச் சேர்ந்த ஆயிரம் பேர் ஒரு சமூகமாக, நம் ஊரையும் சமூகத்தையும் மேம்படுத்துவதற்காக ஆளுக்கு நூறு ரூபாய் வரி அளிக்கிறோம், ஊர் சார்பில் வருஷத்துக்கு லட்ச ரூபாய் அரசுக்குச் செல்கிறது என்றால், எத்தனை ரூபாய் அரசிடமிருந்து ஊருக்குத் திரும்பி வருகிறது என்பது முக்கியம். ஊருக்கு வெளியில் செலவிடப்படும் தொகை எதற்காகச் செலவிடப்படுகிறது, யாரெல்லாம் பயனடைகிறார்கள், அவற்றுக்கான சமூக நியாயம் என்ன, அதில் வரிசெலுத்துநரின் அபிப்ராயங்களுக்கான இடம் என்ன என்பது முக்கியம். கணக்குக் கோளாறு என்றால், கோளாறு அமைப்புரீதியாகவே தொடரும் என்றால், நீங்கள் செலுத்துவது வரி அல்ல; கப்பம். நீங்கள் சுதந்திர நாட்டில் அல்ல; ஒரு ஏகாதிபத்தியத்தின் கீழ் காலனியாகவே இருக்கிறீர்கள்.

வெட்கப்படத்தக்க வகையில் சுதந்திர இந்தியா அநீதியான நிதிப் பகிர்வு அமைப்புடனேயே உருவானது. பெரும்பான்மை அதிகாரங்களோடு, பெரும்பான்மை வருவாய் வரியினங்களும் டெல்லியில் குவிக்கப்பட்டன. வரி வருவாயில் பாதிக்கும் குறைவாகவே மாநிலங்களுடன் இந்திய அரசு பகிர்ந்துகொள்கிறது; அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான பகிர்வில் உத்தரவாதமான பங்கு கிடையாது. நிதியோடு நிதியாள்கைக்கான அதிகாரத்தையும் திட்டக் குழு, நிதிக் குழு வழியே ஒன்றிய அரசு ஆக்கிரமித்துக்கொண்டது. நிதிப் பகிர்வில் காலப்போக்கில் உருவான சீர்திருத்தங்கள், உலகமயமாக்கல் கொண்டுவந்த சூழல் மாற்றங்கள் இணைந்து உருவாக்கிய சின்ன முன்னேற்றத்தையும் ‘ஜிஎஸ்டி’ (சரக்கு மற்றும் சேவை வரி) ஒட்டுமொத்தமாக நொறுக்கிவிட்டது. அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்ட ‘ஜிஎஸ்டி கவுன்சில்’ மூலம் மாநிலங்களின் பெரும்பான்மை வரிவிதிப்பு உரிமையை இந்திய அரசே மறைமுகமாகக் கைப்பற்றியதானது நிதி விவகாரங்களில் மாநிலங்களிடம் இருந்த சுயாட்சியைக் கிட்டத்தட்ட உருக்குலைத்துவிட்டது.

இன்று பல மாநில அரசுகள் தம் வளர்ச்சித் திட்டங்களை முடக்கிவிட்டு, ஊழியர்களின் சம்பளத்தை வெட்டிவிட்டு, வருமானத்துக்காக மதுக் கடைகளையும் லாட்டரி கடைகளையும் திறந்து காத்திருக்கும் இழிநிலைக்கு யார் பொறுப்பாளி? ஒரு கொள்ளைநோய்க் காலகட்டத்தில்கூட செலவுகளை எதிர்கொள்ள சிறப்பு வரிகளை விதிக்கவோ, பெரும்பான்மை வரி விகிதங்களை மாற்றி அமைக்கவோ பல கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் வல்லமையற்றவையாக முடக்கப்பட்டிருப்பது மாநிலங்களின் இறையாண்மை மீதான தாக்குதலே தவிர வேறு என்ன?

இந்தியாவில் ஒட்டுமொத்த ‘ஜிஎஸ்டி’ தொகையில் பாதிக்கும் மேலான தொகையை வெறும் ஐந்து மாநிலங்கள் தருகின்றன; தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் ஒட்டுமொத்த செலவில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கைத் தன் மாநிலத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே சமாளிக்கிறது. ஒன்றியத்துக்கு எவ்வளவு கொடுக்கிறோம், மாநிலத்துக்குத் திரும்ப எவ்வளவு கிடைக்கிறது என்று தமிழ்நாடு கேட்டால், அநீதியான பதிலே கிடைக்கும். இந்த அநீதிப் போக்கு இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்திட முடியும்? ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அரசுகளாலேயே சில மாதங்களுக்குக்கூட தாங்கி நிற்க முடியாத நிதியமைப்பை ‘இது சிறப்பானது’ என்று ஒரு நாடு இன்னும் எவ்வளவு காலத்துக்கு முட்டுக்கொடுக்க முடியும்?

பொருளாதாரச் சுதந்திரமானது கற்பனைச் சுதந்திரத்துக்கான ஊக்கசக்தி. அரசியல் சிந்தனைகளில் புதிய கற்பனைகள், ஆட்சி நிர்வாகத்தில் புதிய முன்னெடுப்புகள், வலுவான பேரங்கள் எல்லாவற்றுக்கும் உரமும் அதுதான். கரோனாவைச் சமாளிப்பதில் சின்ன மாநிலங்களில் கேரளமும், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னிற்கின்றன என்றால், கடந்த காலங்களில் ஒட்டுமொத்த தேசியப் போக்கிலிருந்தும் விடுபட்டு சமூக நலத் திட்டங்களில் அவை செய்த முதலீடும், அன்றைக்கிருந்த சொச்ச பொருளாதாரச் சுதந்திரமும் முக்கியமான காரணங்கள். விஸ்தரிக்க வேண்டிய அதிகாரங்களை முடக்கிக் குவிப்பது ஒட்டுமொத்த சமூகத்தையுமே முடமாக்கிவிடும். உத்வேகமான சமூகத்தையும் சமூகநீதியையும் நாம் உறுதிசெய்ய வேண்டுமானால், மாநில அரசுகளும் உள்ளூர் அரசுகளும் பெரும்பான்மைப் பங்கைப் பெறும் வகையில் நம் வரிப் பகிர்வு முறையை மறுவரையறுப்பது தவிர்க்கவே முடியாதது. ஒரு விரிந்த கூட்டாட்சிக்கான செயல்திட்டம் விசாலமான நிதிப் பகிர்வுத் திட்டத்திலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தில் தொடங்கட்டும்; ‘ஜிஎஸ்டி’யை முடிப்பது அதன் அஸ்திவார நடவடிக்கை ஆகட்டும்; உள்ளூர் அரசுகளுக்கும், மாநில அரசுகளுக்கும் போக எஞ்சிய நிதியை இந்திய அரசு கைக்கொள்ளும் பகிர்வுமுறையைச் சிந்திப்போம்!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x