Published : 15 May 2020 07:37 AM
Last Updated : 15 May 2020 07:37 AM

சுதந்திரத்துக்கு முன்பிருந்த சூழலுக்குள் ஊரடங்கு கூட்டிப்போய்விட்டது!- எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி

‘நினைவில் கொள்ளுங்கள். நாம் நோயுடன் போராட வேண்டும்; நோயாளியுடன் அல்ல!’ என்ற அறிவுறுத்தலுக்குப் பின்பே செல்பேசியில்கூட அழைப்பு செல்கிறது. ஆனால், கரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் பகுதிவாசிகளோ அவர்களின் சராசரி வாழ்வுக்கே ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் வசிக்கும் மணிகட்டிப்பொட்டல் கிராமமும் மூடப்பட்டுள்ளது. அவருடைய ஊரடங்கு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கரோனா நோயாளிகள் இருப்பதால் மூடப்பட்டிருக்கும் உங்கள் கிராமத்தின் இப்போதைய நிலை என்ன?

நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டாலும் சுய தனிமைப்படுத்துதல் 14 நாட்கள் இருப்பதால், அந்த நாட்களில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் எப்படியாவது சமாளித்துக்கொள்கிறார்கள். நானெல்லாம் ஆட்டோவிலும் பேருந்திலுமாக ஊரைக் கடப்பவன். மேலும், எங்கள் கிராமத்தில் மொத்தம் 500 வீடுகள் இருந்தாலும், ஒரே ஒரு கடைதான் இருக்கிறது. அதுவும் இப்போது பூட்டிக்கிடக்கிறது. சின்னச் சின்னத் தேவைகளுக்காகவும் ரொம்பவே கஷ்டப்படும் சூழல்தான். ஊர் அடங்கியிருப்பதையும், காவல் துறையின் ரோந்துகளையும் பார்க்கும்போது சுதந்திரத்துக்கு முன்பிருந்த சூழலுக்குள் எங்கள் கிராமம் போய்விட்டதாகக்கூடத் தோன்றுகிறது.

ஒரு முதியவராக நீங்கள் எப்படியான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?

நான் 80 வயதைக் கடந்தவன். வயதாகிவிட்டதால் தினமும் சுடுதண்ணீரில் குளிப்பது வழக்கம். ஊரடங்குக்கு இரண்டு நாளைக்கு முன்னால் ஹீட்டர் பழுதாகிவிட்டது. அதைச் சரியாக்குவதற்கு இன்று வரை வழியில்லை. எனது தம்பி ஜவஹர், “அண்ணாச்சி ஏதாச்சும் வாங்கணுமா?” என்று கேட்பார். காய்கறிகள் கேட்பேன். அந்தத் தம்பியையும் ஊருக்குள் விட மாட்டார்கள். நான் ஊர் எல்லையில் இருக்கும் வாய்க்கால்கரை வரை நடந்தே போய் வாங்கிவருவேன். நடந்தே எல்லை வரை போய்த் திரும்புவது என்னைப் போல் முதியவர்கள் எத்தனை பேருக்குச் சாத்தியம்? வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டது. அதை விநியோகிப்பவர் ஊர் எல்லையில் வைத்துவிட்டு எடுத்துப்போகச் சொன்னார். இதற்காக இன்னொருவரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது போன்ற விஷயங்களெல்லாம் மனவுளைச்சலைத் தரக்கூடியவை. கரோனா ஆபத்தானதுதான். ஆனால், அதைவிடவும் ஆபத்தான ஒரு விஷயம், எங்களைப் போன்ற மூத்தோரின் நம்பிக்கை இழப்பு! மூடப்படும் பகுதிகளில் இதையெல்லாம் அரசு கவனிக்க வேண்டும்.

தொற்று உறுதிசெய்யப்பட்ட கிராமங்களில் அரசு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

நோயின் தொடக்கத்தில் காவல் துறையின் கட்டுப்பாட்டில் ஊர் வந்தது. நோயாளி மீண்டுவந்த 14 நாட்களுக்கும் இந்த நிலை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துப்போய்விடுகிறது. தேசம் முழுவதும் 40 நாட்களுக்கும் அதிகமாக மக்கள் ஊரடங்கில் இருந்தார்கள். கரோனா நோயாளிகளைக் கொண்ட கிராமங்கள் இன்னும் கூடுதலாகத் தியாகம் செய்து முன்வரிசையில் நின்றன. காக்கிகளின் கட்டுப்பாட்டில் ஊர் இருப்பதையும் ரோந்துவருவதையும் பார்ப்பது அபத்தமாகத் தெரிகிறது. மூடப்பட்ட பகுதிகளில் காவல் துறையின் தலையீடு முற்றாகத் தளர்த்தப்பட்டு, சுகாதாரத் துறையின் தலையீடு மட்டுமே இருக்க வேண்டும். ஒருவேளை காவல் துறையைப் பயன்படுத்த நினைத்தால் அது மக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். அண்டை மாநிலம் கேரளத்திலிருந்தே நாம் எவ்வளவோ கற்றுக்கொள்ளலாம்.

நோய் தொற்றி மீண்டவர்கள் மீதான பார்வை உங்கள் பகுதிவாசிகளிடம் எப்படி இருக்கிறது?

அவர்களை விரோத மனப்பாங்கோடு பார்க்கும் சூழல் இல்லை. ஆனால், மக்களிடம் அச்ச உணர்வு இருக்கிறது. அதை அச்சம் என்று சொல்வதைவிட விழிப்புணர்வு என்று சொல்லலாம். மக்களிடம் எது பரவ வேண்டுமோ அது பரவிவிட்டதால் இனி கரோனாவை எதிர்கொள்வது எளிதானதுதான். மக்கள் அரசின் பக்கம் நிற்கத் தயாராக இருக்கிறார்கள். அரசும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். அவ்வளவுதான்.

ஊரடங்கு காலத்தில் எழுதினீர்களா?

என் குடும்பக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் மனைவியைப் பற்றிய கதை அது. நான் என்ன எழுதினாலும் என் மூத்த மகளுக்கு வாசிக்க அனுப்புவேன். அவளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் போட்ட தபால் இன்னும் கிடைக்கவில்லை. வாங்கி வைத்திருந்த ஆறு பால்பாயின்ட் பேனாக்களும் தீர்ந்துவிட்டன. பேனா வாங்க கடை இல்லை. எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன்.

- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x