Published : 13 May 2020 01:04 PM
Last Updated : 13 May 2020 01:04 PM
தெலங்கானா மாநிலத்திலிருந்து சத்தீஸ்கருக்கு நடந்தே வந்து, தனது கிராமத்துக்குச் சில கிலோ மீட்டர் தூரத்தில் பசியாலும் நீர்ச்சத்துக் குறைவாலும் இறந்துபோன 12 வயது ஆதிவாசிச் சிறுமியான ஜம்லோ மக்தமின் சோகக் கதை, தேசிய ஊரடங்கு காலத்தில் ஆதிவாசி மக்கள் எதிர்கொண்டதைக் காட்டும் ஒரு உருவகம் ஆகும். கரோனா வைரஸ் மேல் மோடியின் அரசு தொடுத்த போர் ஆனது, குடிமக்களாக நடத்தப்படாமல் போன தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட போரானது. அவர்களில் நிறையபேர் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான பி.ஆர். நடராஜன் கேட்ட கேள்விக்கு அரசு கொடுத்த பதிலில் பத்து கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற குத்துமதிப்பான தகவலை அரசு அளித்தது. அதில் பெரும்பாலானவர்கள் ஆவணமோ, முறையான பதிவோ இல்லாத தொழிலாளர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டது. இதற்கு முன்பாக புலம்பெயர்வு சார்ந்து நடத்தப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் சார்ந்த கணக்கெடுப்பில் 1992 முதல் 2008 வரை, அட்டவணைப் பழங்குடிகள் தான் பிற சமூகத்தினரை விட அதிகமாக புலம்பெயர் தொழிலாளிகளில் இருக்கின்றனர்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்து பணியாற்றும் பெண்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசிகள். விவசாயத் தொழிலில் வேலை செய்பவர்களை ஒப்பிடும்போது கூலி வேலைகளை நம்பி அதிகமாக இருப்பவர்கள் ஆதிவாசிகளே என்பது தெரியவந்துள்ளது. கிராமப்புற ஆதிவாசி மக்களில் 45.5 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். வருடம் முழுவதும் பல்வேறு வேலைகளைப் பார்ப்பவர்கள். பயிர் வேலை, விவசாயமல்லாத வேலைகள், இன்னொரு ஊருக்குச் சென்று அங்குள்ள பணிகளில் ஈடுபடுதல் என்று இவர்கள் செய்யும் வேலைகள் பல. ஆதிவாசிகள் இருக்கும் நிலங்களை அரசு கையகப்படுத்துவதும், வனம் சார்ந்து அவர்கள் அனுபவித்து வந்த வளங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளும் சமீப ஆண்டுகளில் அதிகரித்த நிலையில், வாழ்வாதாரத்துக்காக அதிக எண்ணிக்கையில் அவர்கள் புலம்பெயர்வதற்குக் காரணமாக உள்ளது.
ஆதிவாசிகளின் புலம்பெயர்வு
மற்ற சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை விட ஆதிவாசிகளின் புலம்பெயர்வு என்பது வித்தியாசமானது. அவை கால அளவில் குறுகியவை. பருவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இயற்கையின் சுற்றுகளுக்கு ஏற்ப மாநிலத்துக்குள்ளேயே பெரும்பாலும் இந்தப் புலம்பெயர்வு நிகழ்கிறது. வேளாண்மைப் பருவங்களிலும் கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நகர்ப்புற கூலி வேலைகளுக்காக வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் மீன்பிடித் தொழிலுக்காக அதிகமான ஆதிவாசிகள் புலம்பெயர்கின்றனர். இளம் ஆதிவாசிப் பெண்கள் நகரத்தில் வீட்டு வேலைக்காக வருகின்றனர். கூலி ஒப்பந்ததாரர்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆதிவாசித் தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்கள் பணியிடத்துக்கு அழைத்துச் செல்லும் முறையில், தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஒப்பந்ததாரருக்கு அடிமையாக தொழிலாளி நடத்தப்படும் சூழல் உருவாகிவிடுகிறது.
தேசிய அளவில் ஊரடங்கு திடீரென்று பிறப்பிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்கெனவே தங்கள் ஊருக்குத் திரும்ப ஆயத்தமாகிவிட்டனர். வேலை நிறுத்தப்பட்டதாக அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் முதலாளிகள் விதித்த ஆணைக்குப் பயந்து ஓடிவிட, ஆதிவாசித் தொழிலாளர்கள் ஆங்காங்கே மாட்டிக் கொள்ள நேர்ந்தது. உள்ளூர் கலாசாரத்துக்கு அந்நியமாகவே பார்க்கப்படும் ஆதிவாசிகள், அரசு அமைப்புகளால் பாரபட்சமாகப் பார்க்கப்படும் ஏழைகளை விட மோசமான வகையில் நடத்தப்படத் தொடங்குகிறார்கள். குறிப்பாகக் காவல்துறையினரின் அத்துமீறல் ஆதிவாசி மக்களிடம் கூடுதல். ஊரடங்கின்போது, உதவிகள் இல்லாமல், நிம்மதியாக ஊருக்கும் பயணிக்க முடியாமல், ஆதிவாசி தொழிலாளர்கள் இந்தியா முழுக்க தங்களது நீண்ட, வலி மிகுந்த அணிவகுப்பை நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து பக்கவாட்டில் உள்ள பாதைகள் வழியாகவும் வனங்களின் வழியாகவும் போலீஸையும் தவிர்த்துத் தொடங்கினார்கள்.
போராடி வென்ற உரிமைகள்
மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் சட்டம், 1979 ஒன்று மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இந்தியாவில் இருக்கும் சட்டமாகும். அதையும் மோடி அரசு, தனது தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கை சம்பந்தமாக நீக்கும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் நெறிமுறையின் கீழ் அதைச் சேர்க்க இருக்கின்றனர். உழைக்கும் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற கருவி அது. 1979-ல் அமலாக்கப்பட்ட அந்தச் சட்டமானது, ஒப்பந்ததாரர் பணியமர்த்தும் புலம்பெயர் தொழிலாளர்களை மட்டும் உள்ளடக்கியதாகும். தாமே விரும்பி புலம்பெயரும் தனித் தொழிலாளர்கள் அந்தச் சட்டத்தின் பார்வையில் வரமாட்டார்கள். ஆனாலும், இந்தச் சட்டத்தின்படி, புலம்பெயர் தொழிலாளர்களை பாதியில் வேலையிலிருந்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்பினால், ஊர் திரும்பும் செலவை மத்திய அரசே ஏற்கவேண்டும். ஆனால், ஊரடங்கின்போது அந்தக் கடமையைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
முகம் மறைக்கப்பட்டவர்கள்
இரண்டு மாதங்கள் ஊரடங்கினால் வேலை இல்லாமல் சிரமங்களையும் பட்டு, ஆதிவாசி மக்கள் கையில் நயாபைசாவின்றி ஊர் திரும்புகிறார்கள். அரசு வெளியிட்ட உதவி நிதி எதிலும் அவர்களின் முகமே தெரியாமல் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளனர். மலைப் பகுதிகளிலும் குறிப்பாக ஆதிவாசி மக்கள் வாழிடங்களிலும் ரேஷன் கடைகள் போன்றவற்றின் செயல்பாடும் ஒழுங்குமுறை அற்றது. இந்தச் சூழலில் ஆதிவாசிப் பகுதிகளில் பசியும், வறுமையும் அவசர நெருக்கடிகளாக மாறியுள்ளன.
ஊரக வேலை உத்திரவாதத் திட்டத்தின் அடிப்படையிலான பணிகள் ஏப்ரல் 20-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டன. சத்தீஸ்கரின் சில பகுதிகளைத் தவிர ஆதிவாசிகள் வசிக்கும் பல பகுதிகளில் இன்னும் இத்திட்டம் தொடங்கியதற்கான அறிகுறிகளே இல்லை. நாதியற்ற நிலையிலிருந்து ஆதிவாசி சமூகங்கள் காக்கப்பட இதுபோன்ற திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். வேளாண்மை சார்ந்த வேலைகள் மட்டுமல்லாமல் வனம் சார்ந்த வளங்களைச் சேகரிக்கும் பணிகளும் அளிக்கப்படுவது அவசியம். விறகுகள், கனிகள் ஆகியவற்றைச் சேகரித்து விற்கும் ஆதிவாசிப் பெண்களுக்கு இது மானியமாக இருக்கும்.
கரோனா பெருந்தொற்று சார்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்தான் ஆதிவாசி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகள் பெரும்பாலானவற்றில் கரோனா வைரஸ் பரவல் இல்லை. ஆனால் ஊர் திரும்பும் ஆதிவாசித் தொழிலாளர்களுக்கு ஆரோக்கியக் கட்டமைப்பு முற்றிலும் இங்கே இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார நிலையங்கள் இல்லை. மருத்துவர்கள் மிகவும் குறைவு. தாதுவளம் அதிகம் கொண்ட இப்பகுதிகளில் மாவட்ட தாது நிதி என்பது சுரங்கத் தொழிலால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் நலனை மேம்படுத்தவே உருவாக்கப்பட்டது. அதில் 35 ஆயிரத்து 925 கோடி ரூபாய் நிதி உள்ளது. ஆனால் கடந்த ஜனவரி வரை அதில் 35 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையும் தனியார் சுரங்க நிறுவனங்களின் உள்கட்டுமானத்தை அதிகரிக்க அரசு கொடுத்திருக்கும் தொகையாகும். மோடி அரசு, இந்தத் தொகையிலிருந்து கோவிட் -19 கட்டுப்பாடுச் செலவுகளுக்காகவும் பணத்தை எடுத்துச் செலவழிப்பதற்கு சர்வாதிகாரமான முடிவை எடுத்துள்ளது. ஆனால் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆரோக்கியக் கட்டமைப்பை மேம்படுத்த ஒரு பைசா கூட இத்தொகையிலிருந்து செலவழிக்கப்படவேயில்லை.
உடன்பாடு என்று அர்த்தம் அல்ல
ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலைச் சமாளிக்காமல், மோடி அரசு, இந்த ஊரடங்கை பெருநிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆதிவாசி மக்களின் அரசியல் சாசன ரீதியான சட்ட ரீதியான உரிமைகளை அனைத்து வகையிலும் மறுக்கும் செயல்பாடுகள்தான் அவை. ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் ஐந்தாவது அட்டவணைப் பிராந்தியங்களில் பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் இட ஒதுக்கீட்டைக் கேள்வி கேட்கும் தீர்ப்பை இந்தச் சமயத்திலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது ஒரு உதாரணம். அரசியல் சாசன ரீதியாக ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளில் எதிர்மறையான பாதிப்பை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும்.
ஊரடங்கு காரணமாக எதிர்ப்புகள் இல்லாமல் இருப்பதாலேயே ஆதிவாசிகள் இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் அமைதியாக இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது.
தமிழில் : ஷங்கர்
தி இந்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT