Published : 13 May 2020 12:57 PM
Last Updated : 13 May 2020 12:57 PM
கோவிட்-19-க்கு தடுப்பூசியோ சிகிச்சை மருந்தோ இல்லாத நிலையில் தனிமைப்படுத்துதல், தனிமைக் கண்காணிப்பு மட்டுமே இந்தப் பெருந்தொற்றுக்குத் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் முந்தைய நூற்றாண்டுகளில் அதிகம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தீர்வாகவே இது இருந்திருக்கிறது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கலை, இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் 17ஆம் நூற்றாண்டு. அப்போதுதான் கறுப்பு மரணம் எனும் பிளேக் நோய் பரவல், இத்தாலியில் அதிகரித்தது. உலக அளவில் கொள்ளைநோய்கள், பொது சுகாதாரப் பாதுகாப்பு என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பிளேக்தான். வரலாற்றில் பிளேக் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையே இதுவரை அதிகம். இந்தப் பின்னணியில் முதன்முறையாக ஒரு மருத்துவ நெருக்கடி நிலைக்கு ஊரடங்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஹெண்டர்சன், 'Florence under Siege, Surviving Plague in an Early modern city' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சிக் காலம், நவீன காலத்தின் தொடக்கத்தில்தான் பிளேக் நோயைக் கையாள்வதற்கான பல முக்கிய உத்திகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன, பிற்காலத்தில் அவை கொள்கைகளாகவும் வகுக்கப்பட்டன.
இந்த உத்திகளை வகுக்கும் நடைமுறையில் இத்தாலி முக்கிய மையமாக இருந்தது. பிளேக்கைக் கட்டுப்படுத்துவதில் பலன் அளித்த முதல் உத்திகளாக அவை பார்க்கப்படுகின்றன. சரி, ஊரடங்கு போன்ற முடிவுகள் எப்படி திடீரென்று முன்மொழிப்பட்டன? காரணம், அதற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே பிளேக் நோயால் இத்தாலி மிகப் பெரிய உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் சந்தித்திருந்தது. அந்தப் பின்னணியில் மீண்டும் பிளேக் நோய்க்கு தன் மக்களைப் பலிகொடுக்க அந்த நாடு விரும்பவில்லை. இதன் காரணமாகவே ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்த நடவடிக்கைகள் கோவிட்-19 நடைமுறைகளைப் போன்றே இருக்கின்றன.
நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
15, 16 ஆம் நூற்றாண்டுகளிலேயே பிளேக் கட்டுப்பாடு சார்ந்த செயல்பாடுகள் இத்தாலியில் உருவாகிவிட்டன. அந்நாட்டின் பிளாரன்ஸ், மிலன், வெரோனா, வெனிஸ் ஆகிய நகரங்களில் பிளேக் குறிப்பிட்ட இடைவெளியில் தொற்றிக்கொண்டிருந்தது. 1630-31ஆம் ஆண்டில் பிளேக் பரவியபோது, இந்த நடவடிக்கைகள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த நாட்டின் மறுமலர்ச்சிக் கால மையமாகத் திகழ்ந்துகொண்டிருந்தது பிளாரன்ஸ். அத்துடன் முக்கிய ஜவுளி மையமாகவும் அந்த ஊர் இருந்தது. அதனால் பலரும் வந்து செல்லும் மையமாக இருந்தது.
பிளாரன்ஸில் பிளேக் பரவியபோது, ஒரு நோயாளருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், அந்தத் தொடர்புகளில் முதல் நோயாளர் யார் என்பதைக் கண்டறிவதும் நடந்தது. பிறகு சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டார்கள். ஒரு ஊர் அல்லது மாகாணத்துக்கு பிளேக் நோயைக் கொண்டுவந்த முதல் நோயாளர் யார் என்பதுவரை தேடல் நீண்டது. இப்படிக் கண்டறியப்பட்ட நோயாளர்கள் அவர்களுடைய வீடுகளிலோ, நகர எல்லைக்கு வெளியே இருந்த மிகப் பெரிய தனிமைப்படுத்துதல் மையங்களிலோ 40 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
மக்கள், வர்த்தகக் கட்டுப்பாடுகள்
1631இல் பிளாரன்ஸ் நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோது, தங்கள் வீட்டு மாடங்கள் அல்லது கூரைகளில் இருந்தபடியே தேவாலய வழிபாடு, பாடுதல் அல்லது எதிர்வீடு-பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் மக்கள் பேசுவது போன்றவற்றுக்கு அனுமதிக்கப்பட்டது. இன்றைக்கு இத்தாலியிலும் ஸ்பெயினிலும் அதேபோன்ற நிலைமையை கோவிட்-19 தீவிரப் பரவலின்போதும் நிலவியது.
ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மக்கள் முறைப்படி பின்பற்றுகிறார்களா என்றும் மருத்துவ அதிகாரிகள் அன்றைக்குக் கண்காணித்திருக்கிறார்கள். மற்ற ஊர்களுடன் சுகாதார வாரியங்கள் தொடர்ந்து தகவல் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. ஒரு மாகாணம் அல்லது ஊரை பிளேக் நெருங்குவது தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட ஊர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். அத்துடன் ஒரு மாகாணத்தில் இருந்து வேறொரு மாகாணத்துக்கு மக்கள் பயணிப்பதைத் தடுக்கவும் மாகாண எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது. மற்ற நகரங்களுடன் வர்த்தகத் தொடர்பு நிறுத்தப்பட்டிருந்தது. சர்வதேச வர்த்தகத் தொடர்புகள் சார்ந்த பணிகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
வெற்றிகரமான நகரம்
பிளாரன்ஸில் ஓராண்டு முழுக்க பிளேக் தொற்று மட்டுப்படவில்லை. அந்த நகரின் பொருளாதாரம் வீழ்ந்தது. குறிப்பாக, ஜவுளித் தொழில் நலிவு இதில் பெரும் பங்காற்றியது. காற்றில் உள்ள பிளேக் கிருமிகள் மனிதர்களிடையே பரவும். துணிகளிலும் அந்தக் கிருமி ஒட்டியிருக்கும் என்று அப்போது நம்பப்பட்டது. இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட துணிகளை மீண்டும் விற்கும் நடவடிக்கை தடைசெய்யப்பட்டது.
அதேநேரம் பிளாரன்ஸ் நகரின் முதன்மைத் தொழிலாக இருந்த ஜவுளித் துறை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஜவுளி ஆலைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் வீடு திரும்புவது தடை செய்யப்பட்டது. அதேபோல் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்களும் பெரிதாக தண்டிக்கப்படவில்லை. ஒரு சில நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது சிறிய அபராதத் தொகை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.
இத்தனை கட்டுப்பாடுகளுக்குப் பிறகும் பிளாரன்ஸ் நகர மக்கள்தொகையில் 12 சதவீதம் பேர், அதாவது 75,000 பேர் பிளேக் நோய்க்குப் பலியானார்கள். சரி, இத்தாலி நாடு முழுக்க நோய்க் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பிளாரன்ஸ் மட்டும் அதில் தனித்துக் குறிப்பிடப்படுவது ஏன்? ஊரடங்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய முதல் ஊர் அது. அதற்குப் பலனாக இத்தாலி நகரங்களிலேயே மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையைக் கொண்டிருந்தது பிளாரன்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT