Published : 21 Aug 2015 09:36 AM
Last Updated : 21 Aug 2015 09:36 AM
இப்படி யோசிப்போம்... தினசரி மது அருந்தும் ஒரு நபர், மாதத்துக்கு ரூ.10,000 அளவுக்கு மது அருந்திக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அந்த நபருக்கு மிச்சமாகும் 10,000 ரூபாயை என்ன செய்வார்? ஒன்று, சேமிப்பார். அது அவரது வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. இல்லை, செலவழிக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். என்ன செலவு செய்வார்? விதவிதமாக வாங்கிச் சாப்பிடுவார். தங்கம் வாங்குவார். வாகனம் வாங்குவார். வீடு வாங்குவார். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவார். இப்படி அவர் எதை வாங்கினாலும் அவர் வாங்கும் பொருட்களிலிருந்து அரசுக்கு விற்பனை வரி கிடைக்கும்தானே. தற்போது மது விற்பனையால் கிடைக்கும் 29,672 கோடியில் 10% மட்டும் இப்படி வந்தால், சுமார் 3,000 கோடி ரூபாய் கிடைக்கும் இல்லையா.
இந்த யோசனை ஒன்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. விற்பனை வரி கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே ராஜாஜி மனதில் உதித்த இந்த யோசனைதான். 1937-ம் ஆண்டு ராஜாஜி மதுவிலக்கை அமல்படுத்தியபோது, “மக்கள் இதுவரை சாராயத்துக்கு செலவழித்த பணத்தை உணவுப் பொருட்கள், துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்று வேறு ஏதேனும் வாங்குவதற்குச் செலவழிப்பர். அப்படிப் பொருட்கள் வாங்கும்போது அதிலிருந்து சிறு தொகையை விற்பனை வரியாகச் சேர்த்துவிட்டால் அரசுக்குக் கூடுதல் வருவாய் வரும்” என்றார். அதன் அடிப்படையில்தான் அவர் இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்ராஸ் மாகாணத்தில் 1937-ம் ஆண்டு விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு, நம் மாநிலத்தைப் பார்த்துதான் பம்பாய் மாகாணம் 1938-ல் விற்பனை வரியைக் கொண்டுவந்தது. ஒரு நபர் மது அருந்தி உடல், மன, குடும்ப, சமூக நலத்தைக் கெடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வரியைவிட, இப்படி ஆரோக்கியமான வழிகளில் கிடைக்கும் வரியைப் பெறுவதில் அரசுக்குச் சிக்கல் என்ன இருக்க முடியும்?
அப்படியானால், டாஸ்மாக்கை மூடிவிட வேண்டியதுதானா என்று கேள்வி எழலாம். தேவையில்லை. டாஸ்மாக்கின் விரிவாக்கம், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்’ என்பதுதான். வாணிபக் கழகம் என்றால், மதுவை மட்டும்தான் வணிகம் செய்ய வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. விற்பதற்கு எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன.
சமீப காலங்களில் தொடங்கப்பட்ட ‘அம்மா மருந்தகம்’, ‘அம்மா சிமெண்ட்’, ‘பண்ணை பசுமைக் காய்கறி அங்காடி’ஆகியவையே இதற்குச் சிறந்த உதாரணங்கள். மூன்றிலும் நல்ல லாபம் கிடைக்கிறது. அம்மா மருந்தகங்களில் கூட்டம் அள்ளுகிறது. அம்மா சிமெண்ட் ஒரு கோடி மூட்டைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. சென்னையில் அண்ணா நகரில் 5 மணி நேரத்தில் இரண்டு டன் உப்பு விற்பனையாகியிருக்கிறது. காய்கறி அங்காடிகளில் காய்கறிகள் வந்து இறங்கிய ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் பல்பொருள் அங்காடிகளில் மட்டுமே பார்க்க முடிந்த மேல்தட்டு மக்களை இந்தக் காய்கறிக் கடைகளிலும் பார்க்க முடிவது ஆச்சர்யமே.
சரி, இவை எல்லாம் உணர்த்தும் உண்மைகள் என்ன? தமிழக அரசின் கடை என்றவுடன் மக்கள் நம்பி வந்து வாங்குகிறார்கள். அரசு வணிக நிறுவனங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நல்லெண்ணம் (Good will) இது. அதைத் தக்க வைத்துக்கொள்வதுதான் ஓர் அரசின் சாமர்த்தியம். மருந்து, காய்கறி மட்டுமல்ல, அழியும் தறுவாயில் இருக்கும் கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்களான விவசாயம், நெசவு, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான தொழில்களுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டலாம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாடு தனியார்மயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தொழில் துறையில் அரசின் பங்களிப்பு அபாயகரமான அளவில் குறைந்துவருகிறது. மக்களின் அதிருப்தியும் அதிகரித்துவருகிறது. ஆனாலும்கூட, இன்னமும் நம் நாடு விவசாய நாடுதான். நமது பொருளாதார வளர்ச்சி அதைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். தமிழக அரசு இப்படியான தொழில்களைத் தொடங்குவதன் மூலம் சில முதலாளிகளிடம் மட்டுமே இருக்கும் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி தடுக்கப்பட்டு, பரவல் வளர்ச்சி மலரும். இதுவே காந்தியப் பொருளாதாரம். இதுவே ஆரோக்கியமான வளர்ச்சி. இப்படியாக, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கும் 6,813 மதுக் கடைகளை, மருந்துக் கடைகளாகவும் காய்கறிக் கடைகளாகவும் மாற்ற முடியாதா என்ன?
இப்படிச் செய்யும்போது டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். பெரும்பாலும் பட்டம் பெற்ற இளைஞர்கள் அவர்கள். மதுக் கடைகளில் பணிபுரிகிறார்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்களின் வாழ்க்கைச் சூழலே அவலமாகிவிட்டது. இவர்களுக்குப் பயிற்சி அளித்து, மேற்கண்ட அரசு வணிக நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தினால், அதைவிட அவர்களுக்கு மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
(தெளிவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT