Published : 08 May 2020 08:09 AM
Last Updated : 08 May 2020 08:09 AM
உலகப் போர்களை அடுத்து உருவான அரசியல் மாற்றங்களாலும் பஞ்சங்களாலும் வெளிநாடுகளில் வசித்த இந்தியர்கள் பலரும் வெறுங்கையோடு அகதிகளைப் போல நாடு திரும்பினார்கள். காலச்சக்கரம் சுழன்று, மீண்டும் அதே அச்சுக்கு வந்துநிற்கிறது. வேலைவாய்ப்புகளைத் தேடி உலகெங்கும் வாழும் இந்தியர்கள் கரோனாவின் காரணமாக மீண்டும் இப்போது அதே நிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை துயரத்திலும் துயரம்.
சென்ற ஐம்பது ஆண்டுகளில் சவுதி அரேபியா, துபாய், கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் வேலைக்குச் செல்லத் தொடங்குவது வழக்கமானது. கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரபு நாடுகளை நோக்கிப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் கிளம்பினார்கள். கட்டுமான வேலைகள் தொடங்கி கழிப்பறைகளைச் சுத்தம்செய்வது வரை கிடைக்கிற எந்த வேலையையும் செய்தார்கள். பெரும்பாலானோர் கச்சா எண்ணெய் உற்பத்திசெய்யும் நிறுவனங்களில் பணியாற்றினர். உள்ளூரில் தங்களுடைய குடும்பச் சூழலை மேம்படுத்திக்கொண்டார்கள் என்பதோடு, இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கவும் அவர்கள் ஒரு காரணம் ஆயினர். அது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்த உதவியது.
எண்ணெய் நிறுவனங்களின் வீழ்ச்சி
இந்தியர்களோடு போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்னும் மலிவான கூலிக்கு வேலைக்கு வரலானபோது, வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் குறைவானது. ஆயினும், உள்ளூரைக் காட்டிலும் கூடுதல் வருவாய் என்பதால் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்திடவில்லை. இன்றைக்குக் கிட்டத்தட்ட 88 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் தங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு புலம்பெயர்வுக் கணக்கெடுப்பு-2015-ன்படி சென்னையிலிருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 38% வளைகுடா நாடுகளில்தான் வசிக்கிறார்கள். மதுரையில் இந்த எண்ணிக்கை 62%, ஈரோட்டில் 49%, கோவையில் 27% என்று தமிழ்நாடு முழுக்க விரிகிறது.
தற்போது, உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், பெட்ரோல்-டீசலின் பயன்பாடு முழுவதுமாகக் குறைந்துவிட்டது. அதனால், எண்ணெய் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் குறைக்க வேண்டியதாகிவிட்டது. உற்பத்தியாகும் குறைந்த அளவிலான எண்ணெயையும் வாங்க ஆளில்லை. பெட்ரோல்-டீசல் ஏற்றிச்சென்ற எண்ணெய்க் கப்பல்கள் பல நாடுகளில் இறக்க வழியில்லாமல், துறைமுகங்களின் அருகே கடலிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. சர்வதேச பெட்ரோலியச் சந்தை கடும் சரிவைச் சந்தித்திருக்கும் நிலையில், எண்ணெய்ப் பொருளாதாரத்துக்குப் பேர்போன வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. இந்தியர்கள் பல லட்சம் பேர் தங்களது வேலைகளை இழந்து நிற்கிறார்கள். அவர்களில் கேரளம், தமிழகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையினர்.
முகாம் துயரங்கள்
வெளிநாட்டு ஊழியர்களைச் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகச் சொல்லி, இப்போது வளைகுடா நாடுகள் வலியுறுத்துகின்றன. கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்லி, தங்கள் நாட்டு மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்லியிருக்கும் அவை, வேலையாட்களை முகாம்களில் தங்க வைத்திருக்கின்றன. மிக நெருக்கடி மிக்க சிறுசிறு இடங்களில் இவர்கள் நூறு சதுர அடி பரப்பளவில் எட்டு பேர், பத்து பேர் என்று அடுக்குக் கட்டில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இப்படி முகாம்களில் குவிக்கப்பட்டிருப்பதால் குளியலறை, கழிப்பறை வசதிகளுக்கு அல்லாடும் நிலை உருவாகியிருக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தங்கியிருக்கும் முகாம்களின் நிலை இன்னும் மோசமானதாக இருக்கிறது என்கிறார்கள். மேலதிகம், விசா காலம் முடிந்தும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது வீதிகளிலேயே தங்கியிருக்கின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டுக்கு வேலைக்கு வந்த பணியாளர்களை அவர்களின் நாடுகள் உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கின்றன. உடனே, திரும்ப அழைக்காத நாடுகளிலிருந்து எதிர்காலத்தில் தொழிலாளர்கள் பணி நியமிக்கப்படும்போது, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன. இது தொடர்பாகக் கையெழுத்தாகியிருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என்ற அளவுக்கு இந்த எச்சரிக்கை நீள்கிறது.
பயமுறுத்தும் பயணக் கட்டணம்
வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்வதற்கான அறிவிப்பை இந்தியா வெளியிட்டிருக்கிறது. இதன்படி வளைகுடா நாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவருவதற்கான விமான சேவைகளை ‘ஏர் இந்தியா நிறுவனம்’ தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. வளைகுடா, தெற்காசிய நாடுகளிலிருந்து முதற்கட்டமாக இந்தியா திரும்புவோருக்கான விமானக் கட்டணம் ரூ.1 லட்சம். இது வணிகக் கட்டணத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய இது அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவோருக்கான கட்டணத்துக்கு இணையாக இருக்கிறது. வழக்கமான நாட்களில் துபாயிலிருந்து இந்தியா வர ரூ.13,000; அபுதாபியிலிருந்து இந்தியா வர ரூ.15,000 என்றுதான் கட்டணங்கள் அமையும்.
இப்போதைய கட்டணம் பல தொழிலாளர்களை மிரள வைத்திருக்கிறது. ஏனென்றால், அந்தந்த மாத வருமானத்தை அந்தந்த மாதத்தில் வீட்டுக்கு அனுப்பிவிடும் நிலையில் இருப்பவர்களே அதிகம். மேலும், வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வருமானம் குறைவு. ஒரு நாளைக்கு மூன்று தினார்கள் முதல் ஆறு தினார்கள் வரையிலான வருமானத்தில் வேலை பார்ப்பவர்களே அதிகம். அதாவது, இந்திய மதிப்பில் இது மாதம் ரூ.20,000-40,000 கணக்கு. அதிலும் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் தொழிலாளர்கள் புலம்புகிறார்கள். இந்தப் பயணக் கட்டணம் குறைக்கப்படல் அவசியம்; எவ்வளவு சீக்கிரம் வளைகுடா நாடுகளில் உள்ள தொழிலாளர்களைத் திரும்ப அழைக்க முடியுமோ அவ்வளவு வேகத்தை அதில் காட்டுவது அதனினும் முக்கியம்!
- புதுமடம் ஜாபர்அலி,
தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT