Published : 31 Aug 2015 09:27 AM
Last Updated : 31 Aug 2015 09:27 AM

மெல்லத் தமிழன் இனி 2 - சொத்து வரி விதிப்பில் சீர்திருத்தம் வருமா?

இந்திய நகரங்களின் வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில் பிரமிக்க வைக்கிறது. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும்தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் வணிகத்தின் பங்களிப்பு மட்டும் 6%. இது அடுத்த 10 ஆண்டுகளில் 12%-ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் முதல் தர நகரங்களில் ரூ. 1,500- 3,000-க்கு இரு படுக்கை அறைகளுடன் கூடிய வீடுகள் வாடகைக்குக் கிடைத்தன. இன்று அந்த நகரங்களில் வாடகை ரூ.6,000 முதல் 25,000 வரை உயர்ந்துவிட்டது. சராசரியாக 11 மாதங்கள் தொடங்கி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 முதல் 20% வரை வாடகை உயர்த்தப்படுகிறது. ஒருபக்கம் சொத்து மதிப்பு, மறுபுறம் வாடகை இரண்டும் உயர்கின்றன. ஆனால், இந்த உயர்வுக்கு ஏற்ப சொத்து வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்படுகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை. கடந்த ஓரிரு மாதங்களாகத்தான் உள்ளாட்சி அமைப்புகளில் அதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. அதிலும் ஆயிரத்தெட்டு அரசியல் குறுக்கீடுகள்.

முன்பு தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்து வரியை நிர்ணயித்தன. 1998-ல் ‘தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி (விதிப்புக் கணக்கீடு மற்றும் வசூல்) விதிகள்’ என்று சொத்து வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி அடிப்படை வரி, கூடுதல் வரி என இரு வரிகள் விதிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் கட்டிடங்கள் இருப்பிடக் கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனக் கட்டிடங்கள் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி வரியை அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். தாமதமாகச் செலுத்தினால் அபராதம் செலுத்த வேண்டும். இந்தச் சொத்து வரிவிதிப்பை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? 1998-க்கு பிறகு கடந்த 16 ஆண்டுகளாகச் சொத்து வரி விதிப்பில் பெரும்பாலும் மாற்றம் செய்யப்படவில்லை. காரணம், உள்ளாட்சி அமைப்புகளைப் பின்னிப் பிணைந்திருக்கும் ஓட்டு அரசியல்.

சென்னையில் மட்டும் 11.70 லட்சம் வீடுகள், வணிக நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தும் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வரும் நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், வேலூர், சேலம், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்களில் மொத்தம் 70 லட்சம் வீடுகள், நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தும் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் சராசரியாக 40% (தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்) வரை சொத்து வரி நிலுவையில் இருக்கிறது. குறித்த காலத்துக்குள் வரியைச் செலுத்தினால் 5% தள்ளுபடி தருகின்றன உள்ளாட்சி அமைப்புகள். அப்படியும், 50%-க்கும் அதிகமான சொத்து வரி, முறைகேடுகளால் முடக்கப்பட்டிருக்கிறது. மாடிகள் கூரைகளாகவும் கூரைகள் ஒழுகும் குடிசைகளாகவும் பதிவேற்றப்படுகின்றன. வணிகக் கட்டிடங்கள் குடியிருப்புகளாகவும் குடியிருப்புகள் தொண்டு நிறுவனங்களாகவும் திருத்தப்படுகின்றன. சுமார் ஒரு லட்சம் வழக்குகள் வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.

இந்த முறைகேடுகளைக் களைந்து, சொத்துக்களுக்கு இன்றைய சந்தை மதிப்பில் வரியைத் திருத்தினால், ஆண்டுக்குக் குறைந்தது ரூ.50,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இது ஓர் ஆண்டில் மது விற்பனையில் கிடைக்கும் வருவாயைவிட இரு மடங்கு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x