Published : 21 May 2014 08:20 AM
Last Updated : 21 May 2014 08:20 AM
சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் அன்று தூங்க முடியாது என்றுதான் நினைத்திருக்க வேண்டும். 260 அல்லது 265 கிடைக்கும் என்று எனது நண்பர் வீடு ஒன்றில் குழுமியிருந்தவர்கள் சொன்னார்கள். ஒரு நண்பர் மட்டும் 313-க்குக் குறையாது என்றார். எனக்கும் பா.ஜ.க. கூட்டணிக்குப் பெரும்பான்மை இடங்கள் கிடைத்துவிடும் என்பது தெரிந்திருந்தது. இருந்தாலும், அவர்களை எரிச்சல்படுத்துவதற்காக 220 கிடைத்தால் அதிகம் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். சுற்றியிருந்தவர்களில் ஒருவர் எனக்கு ஆதரவாக இருந்தார். மற்றைய அனைவரும் மோடி பக்தர்கள். ஆனால், தமிழர்கள் என்பதால் விருந்தோம்பலில் நிகரில்லாதவர்கள். அறுசுவை உணவு. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு வகை உணவு. எனக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை. இரவு ஒன்பது மணிக்கே என்ன ஆகும் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. தூக்கத்தை இழக்கும் தேவை ஏற்படவே இல்லை.
ஒப்பாரியில் நம்பிக்கை இல்லை
மோடியின் வெற்றி பலவகை ஒப்பாரி வல்லுநர்களை உசுப்பிவிட்டிருக்கிறது. எனக்கு ஒப்பாரியில் நம்பிக்கை இல்லை. ஒப்பில்லாத இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது. மோடி வெற்றி பெற்றதால் நமது மதச்சார் பின்மையின் வலு குறைந்துவிடும் என்று நான் நினைக் கவில்லை. அவ்வாறு நினைப்பவர்கள் நமது நாட்டு மக்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதை அறிய, அங்கு வாழும் நண்பர்கள் பலரிடம் 10 கேள்விகள் கேட்டேன்…
1. மோடியின் ஆட்சியால் யார் பயன் பெறுவார்கள்?
பதில் அளித்தவர்கள் எல்லோரும் மத்திய வர்க்கத்தினர் பயன் பெறுவார்கள் என்றார்கள். ஏழை மக்கள் பயன் பெறுவது ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்ற அளவில்தான் இருக்கும் என்று கருதுகிறார்கள். மோடியின் தீவிர ஆதரவாளர்கள் அவருடைய ஆட்சியால் எல்லோரும் பயன் பெறுவார்கள், தலித்துகளுக்கும் பழங்குடியி னருக்கும் இருக்கும் திட்டங்களை ஒழுங்காகச் செயல்பட வைத்தாலே போதுமானது என்கிறார்கள். சிறுபான்மையினருக்குப் பல நலத் திட்டங்களை அவர் அறிவிக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
2. பெருமுதலாளிகள் பயன் பெறுவார்களா?
பதில் அளித்தவர்கள் எல்லோரும் பெருமுதலாளிகள் பயன் பெறுவார்கள், டாடா, அம்பானி, அதானி, லார்சன் டூப்ரோ போன்றவர்களுக்கும் பெரும் லாபம் கிட்டும் என்கிறார்கள். ஒருவர் குறிப்பாக, ராணுவத் தளவாட உற்பத்தியில் பெரு முதலீடு செய்யப்படும் என்கிறார்.
3. மோடியின் பாகிஸ்தான் கொள்கை எவ்வாறு இருக்கும்?
சிலர், இந்திய வெளியுறவுக் கொள்கையில் அதிக மாறு தல் ஏதும் இருக்காது என்கிறார்கள். சிலர் மோடி கறாராக நடந்துகொள்வார். பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டார் என்கிறார்கள். ஒருவர், தாவூத் இப்ராஹிமும் அவரது கூட்டாளி களும் தேடிப் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்கிறார்.
4. அவரது சீனக் கொள்கை எவ்வாறு இருக்கும்?
பதில் அளித்தவர்களில் அநேகமாக எல்லோரும் அவர் சீனாவுடன் நட்புறவையே விரும்புவார் என்று நினைக்கிறார்கள். பல தடவை சீனா சென்றுவந்தவர் அவர். அதனால், வர்த்த உறவுகள் வலுப்பெற வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் எல்லைப்புறப் பாதுகாப்பில் அவர் மெத்தனமாக இருக்க மாட்டார், பேச்சுவார்த்தைகள் தொடரவும் விரும்புவார் என்கிறார்கள்.
5. அவரது அமெரிக்கக் கொள்கை..?
அமெரிக்காவோடு நல்ல உறவு தொடர்ந்து இருக்கும் என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். ஆனால், சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளோடு இந்தியா வலுவான தொடர்புகள் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா இந்தியாவோடு மிகவும் கவனமாக நடந்துகொள்ளும். மன்மோகன் சிங் காலத்தில் இருந்ததுபோல நம்ம ஆள்தானே என்று இருக்க முடியாது.
6. தமிழகத்தை மோடி எவ்வாறு அணுகுவார்?
ரயில் போக்குவரத்து, தண்ணீர், மின்சாரம், துறைமுகங்கள், பெரும் சாலைகள் அமைத்தல் போன்ற பெரிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு மத்திய அரசோடு சேர்ந்து இயங்குவதைத் தவிர, வேறு வழி இல்லை. இந்தத் திட்டங்களுக்கு நிதி உடனடியாக வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகச் சில திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படலாம். தமிழக முதல்வர் மோடியுடன் செய்துகொள்ளவிருக்கும் சமரசத்தின் தன்மையைச் சார்ந்தும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் தரும் ஆதரவைப் பொறுத்தும் தமிழகத்தை அவர் அணுகுவது நிர்ணயிக்கப்படும்.
7. இந்தியாவின் கூட்டாட்சி முறை தொடர்ந்து இயங்க உறுதுணையாக இருப்பாரா மோடி?
பதில் அளித்தவர்களில் பலர், மத்திய - மாநில உறவுகள் சுமுகமாகவே இருக்கும் என்கிறார்கள். சிலர், பிரிவினை வாதிகளிடம் அவர் கடுமையாக நடந்துகொள்வார்கள் என்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். இதனால், இந்தியாவுக்கு எதிராக இயங்குபவர்கள் இனி, வெளிப்படையாக இயங்க முடியாது என்கிறார்கள் சிலர்.
8. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அவரது நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர் மிகக் கடுமையாகச் செயல்படுவார் என்று அநேகமாக எல்லோரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய காவல் நிறுவனங்கள் வலுப் படுத்தப்படும். மாவோயிஸ்ட்டுகள் உள்ளிருந்தே இயங்கும் எதிரிகளாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
9. அரசியல் சட்ட எண் 370 நீக்கப்படும் வகையில் அவர் இயங்குவாரா?
அரசியல் சட்டத் திருத்தங்களின் பக்கத்திலேயே இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வர மாட்டார் என்று பலர் கருது கிறார்கள். ஆனால், ஒரு சிலர் இதைப் பற்றிய விவாதம் துவங்கப்படும், மக்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்தால், அடுத்த தேர்தலுக்கு முன்னால் சட்ட எண் 370 நீக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.
10. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுமா?
இதற்காக மோடி தன்முனைப்பாக ஏதும் செய்ய மாட் டார் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காகச் சில கூச்சல்கள் போடப்படலாம். ஆனால், கோயில் கட்டுவதைக் கிடப்பில் போடுவதையே மோடி விரும்புவார் என்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கோயில் கட்டுவதற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், நிலைமை மாற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
இந்திய இளைஞர்கள்
இங்கு இருக்கும் இந்திய இளைஞர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்களில் மோடியை ஆதரிக்காத இளைஞர்கள் மிகச் சிலர். அவர்கள் அனைவரும் தமிழ் இளைஞர்கள். மற்றவர்கள் எல்லோரும் மோடிக்கு இந்தியா வாய்ப்பு அளித்திருப்பதை வரவேற்க வேண்டும் என்கிறார்கள்.
என்னிடம் பேசிக்கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர், இது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்று இருக்கிறது என்றார். எனக்கும் 1975-ம் ஆண்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அப்படித்தான் இருந்தது என்றேன். இந்தியா நெருக்கடிநிலையிலிருந்தே மீண்டு வந்துவிட்டது. மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.அவரிடம் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அதைச் செயல்படுத்துவார்கள் என்றேன்.
இளைஞர் மெலிதாகப் புன்னகைத்தார்.
பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம் - தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT