Published : 30 Apr 2020 08:36 AM
Last Updated : 30 Apr 2020 08:36 AM
கரோனா காலத்தில் முகக்கவசமானது அத்தியாவசியமாகியிருக்கிறது. கோவை, மதுரை, சென்னை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், விழுப்புரம் என தமிழக நகர சாலைகளில் மூலைக்கொருவர் முகக்கவசம் விற்பதைக் காண முடிகிறது. அவர்கள் பலரும் செருப்பு, பொம்மை, சோப்பு, சீப்பு, கண்ணாடி, சட்டை, பனியன் விற்ற பிளாட்பார வியாபாரிகள். ‘உங்களுக்கு இந்த முகக்கவசங்கள் எங்கிருந்து வருகின்றன?’ என்று கேட்டால், அவர்கள் சொல்லும் ஒற்றை வார்த்தை ‘திருப்பூர்’. ஆம், பனியன் தைத்து உலகுக்கே வழங்கிக்கொண்டிருந்த திருப்பூரின் சில கம்பெனிகள், தற்போது முகக்கவசத் தயாரிப்பில் இரவு பகலாக ஈடுபட்டுவருகின்றன. ஒரு நாளைக்குச் சுமார் 50 ஆயிரம் முகக்கவசங்கள் உற்பத்திசெய்துவரும் பனியன் கம்பெனி உரிமையாளர் கணேஷுடன் பேசினேன்.
முகக்கவசத் தயாரிப்பில் எப்போது இறங்கினீர்கள்?
எங்களோட வழக்கமான வேலையே பெரிய பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள்ல ஜாப் ஒர்க் எடுத்து வேலை செய்றதுதான். பத்து வருஷமா அதுதான் தொழில். ஏற்கெனவே, ஜிஎஸ்டி அமல்படுத்தினதுல எங்களுக்குப் பெரிய அடி. இப்பதான் மெல்ல மெல்ல எழுந்துவரும்போது, கரோனா வந்து முடக்கிடுச்சு. ஒரு வாரம் வேலையே இல்லாம சும்மாதான் இருந்தோம். எங்ககிட்ட எடுத்து வேலை செய்றவங்களும் சிக்கலான நிலைக்குப் போயிட்டாங்க. அந்த நேரத்துலதான் இங்கே கொஞ்சம் கம்பெனிங்க முகக்கவசம் தயாரிக்கிற வேலையில இறங்கினாங்க. அதைப் பாத்துட்டு நாங்களும் ஆரம்பிச்சிட்டோம். எங்களுக்கு இது ஒரு சின்ன ஆசுவாசம்.
உங்கள் வழக்கமான பணிகள் இப்போது எப்படி மாறியிருக்கின்றன?
எங்க கம்பெனியில 40 பேர் வேலைசெய்ய முடியும். ஆனா, இப்போ சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியிருக்குது. அதனால, 12 பேர்தான் வேலைசெய்ய முடியுது. அதுக்கு ஏத்த மாதிரி இங்க இருக்குறவங்களுக்கு வேலை கொடுக்குறோம். அதுபோக, பக்கத்துல தையல் மெஷின் வச்சிருக்கிறவங்க 20 பேருக்கு வேலை கொடுக்குறோம். ராத்திரி பகலா வேலை செஞ்சிட்டு இருக்கோம். ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முகக்கவசம் வந்துட்டிருந்தது. அதுவே இப்ப 50 ஆயிரமா மாறியிருக்குது.
வருமானம் எப்படி இருக்கிறது?
பனியன் உற்பத்தி வருமானத்தோட ஒப்பிட்டா, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். முகக்கவசம் தைச்சுக் கொடுக்குறவங்களுக்கு ஒரு பீஸுக்கு ஒரு ரூபா வரை கிடைக்கும். அதுல எங்களுக்கு 25 பைசா கிடைக்கும். அதுல ஏத்தி இறக்குற கூலி, போக்குவரத்து, பேக்கிங்னு இருக்கு. ரொம்ப பெரிய வேலை என்னன்னா, இதை எண்ணி வாங்குறது. ஒண்ணு ஏமாந்துட்டா 10 ரூபா நஷ்டமாயிடும். ஆனா ஒண்ணு, இதை எடுக்கலன்னா எங்க நிலைமை மோசமாயிருக்கும். எங்ககிட்ட வேலை பாக்குறவங்க எல்லாம் அடித்தட்டு மக்கள். வாரக்கூலி வாங்கிச் சாப்பிடறவங்க. அவங்களுக்கு வேலை கொடுத்திருக்க முடியாது. இதுல ஒரு நாளைக்கு அவங்க ரூ.600 - 1,000 வரை சம்பாதிக்குறாங்க. ஊரே வேலையில்லாம இருக்குறப்ப நமக்கு இந்த வேலையாவது கொடுக்கிறாங்களேன்னு அவங்க எங்களைத் தெய்வமாவே பாக்குறாங்க.
இனி வரும் நாட்களில் முகக்கவசம் அத்தியாவசியப் பொருளாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வேலை நிரந்தரமாக நடந்தால் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
இப்போதைய நெலமைல சும்மா இருக்கிறதுக்கு இது ஒரு வருமானம், அவ்வளவுதான். பனியன் தொழில் பழையபடி ஆரம்பிச்சுட்டா, இது செய்யறதுக்கு வாய்ப்பில்லைனுதான் தோணுது.
பனியன் தயாரிப்புக்கான துணியில்தான் இந்த முகக்கவசங்களையும் தயாரிக்கிறீர்களா? எவ்வளவு தேவை உருவாகியிருக்கிறது?
பனியன் துணி இதுக்குப் பயன்படாது. ‘நாமோ’ன்னு ஒரு வகைத் துணி. சீனாவுலருந்து இறக்குமதி ஆகுது. தமிழக அரசு சார்பா 2 கோடி முகக்கவசங்கள் ஆர்டர் போட்டிருக்காங்க. அதை திருப்பூர் கம்பெனிங்கதான் எடுத்திருக்கு. அது தவிர, தனிப்பட்ட முறையில மெடிக்கல் ஷாப், வெவ்வேறு கம்பெனிகள், கடைகளுக்கான தேவைகள்னு பார்த்தா, 20 கோடி முகக்கவசங்கள் தேவை இருக்குது.
- கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT