Last Updated : 28 Apr, 2020 08:21 AM

6  

Published : 28 Apr 2020 08:21 AM
Last Updated : 28 Apr 2020 08:21 AM

என்ன பேச வேண்டும் என் பிரதமர்? - இந்திய அணுகுமுறையைக் கண்டறிவோம்!

அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஒரு மாதம் நமக்குப் பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. கிருமி எப்படியெல்லாம் பரவுகிறது, அறிகுறிகள் என்னவாகவெல்லாம் விரிவடைகின்றன, தொற்று எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது; இவை எல்லாமே ஒவ்வொரு நாளும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன அல்லது நாளாக நாளாகத்தான் நாம் இந்தக் கிருமியையும் அதன் மொத்த விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சீனா இந்தக் கிருமியை முதலில் எதிர்கொண்டது; ஆகையால், அடுத்ததாக ஐரோப்பா, அமெரிக்கா, தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகள் என்று எல்லோருமே மூடுண்ட சீன அணுகுமுறையையே பின்பற்றலானோம்; முழு ஊரடங்குக்கு மாறினோம். சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இதைக் கடந்துவிடலாம் என்று எண்ணினோம். வெளிநாடுகளிலிருந்து கிருமித் தொற்றோடு வந்திருப்பவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதன் வாயிலாகவும், அவர்கள் வழி தொற்றுக்குள்ளாவோரைத் தடுப்பதன் வாயிலாகவும் கிருமியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினோம். இது நம் கணக்குகளில் அடங்கிவிடும் விவகாரம் அல்ல என்பதையே மாறிவரும் சூழல் உணர்த்துகிறது. சில மாதங்கள் அல்ல; இந்தக் கிருமியிடமிருந்து முழுமையாக விடுபட சில ஆண்டுகள்கூட ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியென்றால், என்ன செய்வது? ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே இருப்பதா?

நாம் வியூகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. அதாவது, கிருமியிடமிருந்து வெற்றிகரமாகத் தப்பித்துக்கொள்வது எப்படி என்கிற வியூகத்திலிருந்து கிருமியை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்கிற வியூகத்துக்கு நாம் மாற வேண்டும். கிருமி நம்மைத் தொற்றினால், நம் குடும்பத்தினரைத் தொற்றினால் எப்படி அதை எதிர்கொண்டு கடந்து வருவது என்ற முன்னேற்பாட்டினூடாக புதியதோர் இயல்பு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஊரடங்கு என்பது போர் அறிவிப்பைப் போன்றதுதான்; போரே அதுவல்ல. அதாவது, சற்றும் எண்ணிப்பார்த்திடாத ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வதற்கு அரசும் சமூகமும் தயாராவதற்கான அவகாசமாகவே இந்த ஊரடங்கை நாம் கருதிட வேண்டும். இன்று நாம் எல்லோரும் ஊரடங்கையே போராகக் கருதிடத் தொடங்கிவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஊரடங்கு நமக்குப் போதுமான படிப்பினைகளைத் தந்திருக்கிறது. ‘அவசியத் தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது, அப்படிச் செல்கையில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தனிநபர் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும், வீடு திரும்பியதும் கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும், வீட்டிலும் பொதுவெளியிலும் மிகுந்த சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும், நம்முடைய உணவு ஊட்டச்சத்து மிக்கதானதாகவும் அதேசமயம் கட்டுப்பாடானதாகவும் இருக்க வேண்டும், செலவைச் சிக்கனமாக்கிக்கொள்ள வேண்டும்; ஆனால், எளியோருக்கான உதவிகளை அதிகமாக்கிட வேண்டும்; முன் எப்போதையும்விட ஒரு பிடிமானம் மிக்க இணக்கமான சமூகமாக நாம் உருவெடுக்க வேண்டும்; சக மனிதர் மீதான அச்சம், சந்தேகம், வெறுப்பு, அசூயைகளைக் களைந்து பரஸ்பர அன்பைப் பெருக்கிட வேண்டும்’ இப்படிப் பல உண்மைகளை இந்த ஊரடங்கு நமக்குச் சுட்டியிருக்கிறது. இந்த விழிப்புநிலைதான் கிருமியை எதிர்கொள்ள முக்கியமானது; அச்சமும், பீதியும் அல்ல.

நம்மில் பலர் அரசு அறிவித்துவிட்டால், பழைய இயல்புநிலைக்கு நாம் திரும்பிவிடலாம் என்று எண்ணத்தில் இருப்பதாக உணர்கிறேன். மன்னியுங்கள், அப்படியான மாற்றத்தைக் கொண்டுவரும் பொத்தான் எதுவும் அரசிடம் இல்லை. நாளையே நான் முழு ஊரடங்கையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவதாக அறிவிக்கலாம். காலையில் நீங்கள் பேருந்தில் ஏறச் செல்கிறீர்கள். அங்கே எல்லா இருக்கைகளிலும் தலா ஒருவர் அமர்ந்திருக்கிறார்; நீங்கள் ஏதோ ஒரு இருக்கையில் இன்னொருவருடன்தான் அமர வேண்டும்; அமருவீர்களா, நின்றுகொண்டே பயணிப்பீர்களா? ஒருவேளை நின்றபடி பயணிப்பது என்றால், அடுத்த நிறுத்தத்தில் இன்னும் பத்துப் பேர் ஏறுகிறார்கள்; அவர்களோடு நிற்பீர்களா, இறங்கிவிடுவீர்களா? பேருந்திலிருந்து இறங்கி வாடகை காரில் ஏறுகிறீர்கள்; அப்போதுதான் ஒரு முதியவரை மருத்துவமனையிலிருந்து வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வருவதாக ஓட்டுநர் கூறுகிறார்; அவர் சாதாரண நோயாளிதான்; நீங்கள் என்ன எண்ணத்துடன் பயணிப்பீர்கள்? ஒரு வாரம் ஆகிறது. நான்கு பேருந்து ஓட்டுநர்கள் கிருமித் தொற்றுக்கு ஆளாகிறார்கள். பேருந்துகள் தொடர்ந்து ஓடுமா, ஓடாதா? நாம் இன்றுள்ள மனநிலையில், வியூகத்தில் எல்லாமே கோளாறுதான். எதுவுமே யார் கையிலும் இல்லை. ஆக, பார்வையை மாற்றுவோம்.

புதிய இயல்புநிலை ஒன்றை நாம் உருவாக்கிட வேண்டும். அதற்கு கிருமியோடு வாழ்தல் எனும் நிலைக்கு நாம் துணிய வேண்டும். இல்லையென்றால், இந்த நாட்டைக் கீழ்நிலையிலிருந்து இயக்கிவரும் பல கோடி சகோதரர்களை அச்சத்தின் பெயரால் பசிக்கு இரையாக்குவோம்; அவர்களில் பலர் கிருமிக்கும் பலியாவார்கள். நீங்கள் அறிந்திருப்பீர்கள், வருஷத்துக்கு 8.8 லட்சம் சிசுக்களை நாம் பறிகொடுக்கிறோம் – அதாவது ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட 2,191 குழந்தைகள் சாகிறார்கள்; முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு, பசி, வறுமை. நல்ல நாட்களிலேயே நம் நாட்டில் இதுதான் நிலை. ஊர் முடங்கி, வேலைவாய்ப்புகள் குன்றி, பொருளாதாரம் சரியும் வரவிருக்கும் நாட்களில் அவர்கள் நிலை என்னவாகும்?

நாம் இன்று அவர்களுடைய துயரங்களைக் கண்களை மூடிக்கொண்டு கடந்துவிட முயற்சிக்கிறோம். நம்மில் பலர் வசதி இருப்பதால், எல்லோருமே வீட்டிலிருப்பதே சிறந்தது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. இந்த ஊரடங்கிலும் நீங்கள் வீட்டில் இருந்தாலும், நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசு அனுமதியின்படியே அரசுத் துறையினர் தொடங்கி சிறு வணிகர்கள் வரை சில கோடிப் பேர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வெளியே பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருமே வீட்டுக்குள் இருந்தால் நாம் யாருமே வாழ முடியாது.

ஒவ்வொரு குடிநபருக்கும் உயிர் வாழும் உரிமை சமமானது. கரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தியும் ஊட்டச்சத்துமிக்க உணவும் அந்த உரிமையின் ஒரு பகுதி என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாம் வழக்கமான ஏழ்மையை ஊரடங்கின் மூலம் மேலும் வலுவாக்கினால், நாம் அஞ்சும் கிருமி கீழ்த்தட்டு மக்களை நெருங்கும்போது மிக மோசமாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள். பசியா, கிருமியா என்றால், பசிதான் கொடியது; நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது ஒருவரை கரோனா மட்டும் அல்ல; எந்தக் கிருமியும் கொடுமையாகத் தாக்கக் கூடும்.

நோய்களும் கிருமிகளும் மிக முக்கியமாக மரணங்களும் மனித குலத்துக்குப் புதியன அல்ல. உலகெங்கும் உள்ள ஒரு கோடி காசநோயாளிகளில் 27 லட்சம் பேர் இந்தியர்கள். வருஷத்துக்குக் காசநோய் 4.4 லட்சம் பேரைக் கொல்கிறது, அதாவது ஒவ்வொரு நாளும் 1,205 பேர் சாகிறார்கள். கரோனாவும் கொண்டுவரும் இன்புளூயன்ஸா உலகெங்கும் ஏற்கெனவே வருஷத்துக்கு 6 லட்சம் பேரைக் கொல்கிறது. ஏன் இவ்வளவையும் கூறுகிறேன் என்றால், கரோனாவின் மரண விகிதம் அதிகம் என்றாலும், இவ்வளவுக்கும் மத்தியில்தான் மனித குலம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கைகளின் பின் நாம் ஓடத் தொடங்கினால், அச்சத்திலேயே நாம் மரணித்துப்போவோம்.

ஊரடங்கு அல்லது முழுவிலக்கு என்கிற இரட்டை அதீதப் போக்குகளுக்கு மத்தியில் ஒரு யதார்த்தமான அணுகுமுறையை நாம் கண்டறிய வேண்டும். விபத்துகளில் ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் உயிர்களை இழக்கிறோம். அதற்காக யாரும் வாகனம் வேண்டாம் என்று சொல்வதில்லை; மாறாக, முழுப் பாதுகாப்பாடும் முன்னெச்சரிக்கையோடும் வாகனங்களை இயக்க முற்படுகிறோம். அந்த அணுகுமுறைதான் இன்று வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான் நம் முன்னோர் மனித குல நாகரிகம் நெடுகிலும் கையாண்டும் இருக்கிறார்கள்.

இந்தியா தன் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவரட்டும். ஊரடங்கின் விழிப்பு நோக்கம் இனி மக்களின் அன்றாடக் கலாச்சாரத்தில் தொடரட்டும். இந்தியா ஒரு புதிய இயல்புநிலையை உருவாக்கட்டும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x