Last Updated : 17 Apr, 2020 07:20 AM

2  

Published : 17 Apr 2020 07:20 AM
Last Updated : 17 Apr 2020 07:20 AM

கரோனா: ஏனைய ஆசிய சமூகங்களை நாம் கவனிப்பது முக்கியம்

கரோனா புறப்பட்ட நாடு சீனா. தனது தீர்மானகரமான நடவடிக்கைகளால் கரோனாவை வெற்றிகரமாக சீனா எதிர்கொண்டாலும், ‘சீன வழிமுறைகள் ஜனநாயக நாடுகளுக்குப் பொருந்தாது’ என்று பலரும் சொல்கின்றனர். எனில், கீழை நாடுகளில் கரோனாவைத் திறம்படக் கையாண்டுவரும் தென் கொரியா, ஜப்பான், தைவான் அனுபவங்களை நாம் கவனிக்கலாம்தானே! முழு ஜனநாயகங்கள் என்று சொல்லிட முடியாவிட்டாலும், கொஞ்சம் நெகிழ்வான நிர்வாக அமைப்பைக் கொண்ட சிங்கப்பூர், வளமற்ற நாடான வியத்நாம் இங்கெல்லாமும் என்ன நடக்கிறது என்பதையும் நாம் கவனிக்கலாம். ஏனெனில், மேலை நாடுகளைவிடவும், கீழை நாடுகளின் வழிமுறைகள் நமக்குக் கூடுதல் நெருக்கமாக இருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட கீழை நாடுகளிடையே பல வேறுபாடுகள் உண்டு. ஆனால், இந்த நாடுகள் ஒன்றுபடுகிற புள்ளி ஒன்று உண்டு; அதன் பெயர் ‘சார்ஸ்’. 2003-ல் கீழை நாடுகளில் வலம்வந்த இந்தத் தொற்றுநோயும் சீனாவில்தான் தொடங்கியது. கரோனாவைப் போலவே சுவாசத் துளிகளில் பயணித்தது. அண்மையாலும் தொடுகையாலும் பரவியது. சமூக இடைவெளியும் தனிமைப்படுத்தலும் அப்போதே இவர்களுக்கு அறிமுகமாயின. அந்த அனுபவங்களிலிருந்து கற்ற பாடத்தையே இப்போது அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

தைவான்: தைவான். 2.38 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு). சீனாவோடு பல அரசியல் முரண்பாடுகள் உள்ளன. என்றாலும், வணிக உறவுகள் தொடர்கின்றன. லட்சக்கணக்கான தைவானியர்கள் சீனாவில் பணியாற்றுகிறார்கள், நாள்தோறும் பயணிக்கிறார்கள். 2019-ன் கடைசி நாளன்று இந்த வைரஸ் வூகான் நகரில் உலவுவதை சீனா உலகுக்குத் தெரிவித்தது. அன்றைய தினமே தைவான் தயாராகிவிட்டது. பயணிகள் பரிசோதிக்கப்பட்டார்கள், தனிமைப்படுத்தப்பட்டார்கள். முகக்கவசங்களின் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டது; மக்களுக்குப் பங்கீட்டு முறையில் அவை வழங்கப்பட்டன. தற்காப்பு உடைகளின் தயாரிப்பில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் வருகிறார்கள். சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள் அனைவரும் முதலில் சோதிக்கப்பட்டார்கள். இதுவரை தைவானில் பாதிக்கப்பட்டோர் 393 பேர்தான். மரணமடைந்தோர் 6 பேர்.

சிங்கப்பூர்: சிங்கப்பூர். 56.4 லட்சம் மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையில் பன்னிரண்டில் ஒரு பங்கு). தமிழர்களுக்கு நெருக்கமான நாடு. சிங்கப்பூரில்தான் பரிசோதனை விகிதம் உலகிலேயே அதிகம். பயணக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல், கூட்டங்களைத் தவிர்த்தல், அங்காடிகளையும் அலுவலகங்களையும் மூடுதல் என்று எல்லா வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. பிப்ரவரி 18-க்குப் பிறகு இதுவரை மூன்று தவணைகளிலாக ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது. இதுவரை 3,252 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மரணக் கணக்கு 9-க்கு மேல் செல்லவில்லை.

தென் கொரியா: தென் கொரியா. 5.16 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையில் முக்கால் பங்கு). ஜனவரி கடைசியில் நோய் தலைகாட்டியதிலிருந்து அரசுக்குக் கண்துஞ்ச நேரமில்லை. ஒருகட்டத்தில், சீனாவுக்கு அடுத்தபடியான பாதிப்பைப் பெற்றிருந்தது. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியது. எனினும், மற்ற நாடுகளைப் போல் ஊரடங்கை அறிவிக்கவில்லை கொரியா. ஆனால், கேளிக்கை விடுதிகளை மூடியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தபோதே பரிசோதனைப் பெட்டிகளை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டது. இன்று உள்நாட்டிலேயே இந்தப் பெட்டிகள் உற்பத்தியாகின்றன. உலகிலேயே அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்ட நாடு இது. பரிசோதனைக்காக மட்டுமே நாடெங்கிலும் 600 மையங்கள் நிறுவப்பட்டன. நோயுற்றவர்களின் தொடர்புச் சங்கிலியைக் கண்டறிவதிலும் கொரியா முன்னுதாரணம் படைத்திருக்கிறது. தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 10,537; மரணமடைந்தவர்கள் 217.

ஜப்பான்: ஜப்பான். 12.65 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையைப் போல ஒன்றரை மடங்கு). சீனாவுக்கு அடுத்தபடியாக ஜனவரியிலேயே கரோனா படமெடுத்த நாடு. ஆனால், இன்றளவும் பாதிக்கப்பட்டோர் 7,404 பேர்; மரணமடைந்தோர் 137 பேர். எப்படி இது சாத்தியம்? ஆரம்பக்கட்டத்தில், அரசு துலக்கமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் - பள்ளிகளை மூடியதும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணியரைக் கட்டுப்படுத்தியதும்தான். ஜப்பான் 47 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் டோக்கியோ உட்பட ஏழு மாவட்டங்களில் அவசரநிலை அறிவித்தது. இதன் மூலம் கேளிக்கை விடுதிகளையும் பேரங்காடிகளையும் அலுவலகங்களையும் மூட முடிந்தது. பல நாடுகள் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இவை சிறு துரும்புதான். பின் எப்படி நோய் கட்டுக்குள் இருக்கிறது? அதிர்ஷ்டம் என்று எழுதியது ‘தி நியூயார்க் டைம்ஸ்’. ஆனால், வல்லுநர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இயல்பாகவே தூய்மையைக் கடைப்பிடிக்கும் ஜப்பானியர்கள் இப்போது கூடுதல் சுகாதாரம் பேணுகிறார்கள். அரசின் மருத்துவ ஆவணங்களில் கண்ட நாள்பட்ட நோயாளிகளும் முதியவர்களும் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்கள் - இப்படியான வெளித்தெரியாத காரணிகளால்தான் நோய் கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

வியத்நாம்: வியத்நாம். 9.55 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (தமிழக மக்கள்தொகையைப் போல ஒன்றேகால் மடங்கு). தென் கொரியாவைப் போலவோ சிங்கப்பூரைப் போலவோ அபரிமிதமான பரிசோதனைகள் நடத்தவில்லையெனினும், இதுகாறும் 1,21,000 சோதனைகள் நடத்தியிருக்கிறது. சில நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்தது. பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகளை மூடியது. அடுத்த இரண்டு வாரங்களில் 21 நாள் ஊரடங்கை அறிவித்தது. பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. சுமார் 30,000 மக்கள் ராணுவத்தின் மேற்பார்வையில் தனிமையில் இருக்கிறார்கள். 40,000 மக்கள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவின் அண்டை நாடாக இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265-தான். மரணக்கணக்கின் பேரேட்டைத் திறக்காமலேயே மூடிவிடலாம் என்று எதிர்பார்க்கிறது அரசு.

மேற்கண்டவை ஒவ்வொன்றிலிருந்தும் நாம் கவனிக்கப் பல விஷயங்கள் இருக்கின்றன; தமிழக அரசு கவனிக்கட்டும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x