Published : 13 Apr 2020 07:39 AM
Last Updated : 13 Apr 2020 07:39 AM
இந்தியாவில் கரோனாவைக் கையாள்வதில் கேரளம் முன்வரிசையில் நிற்கிறது. திட்டமிடல், புதுப்புது முன்னெடுப்புகள், அர்ப்பணிப்பு என்று கேரளத்தின் வியக்கவைக்கும் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்தான் செவிலியர் பாப்பா ஹென்றி. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமைச் செவிலியர் இவர். கோட்டயத்தில் கரோனா வார்டில் இருந்த அனைவரும் குணமடைந்துவிடவும், கேரளத்தின் எந்த மாவட்டத்தில் கரோனா பணிக்கு அழைத்தாலும் வரத் தயார் என்று இவர் சொல்லக் கேட்டு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ந்துபோனார். சமீபத்தில் அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவரான பாப்பா ஹென்றியிடம் பேசினேன்.
கரோனா பணிக்குள் எப்படி வந்தீர்கள்?
இந்தியா முழுவதும் கரோனா பேச்சாக ஆவதற்கு முன்பே அதை எதிர்கொண்ட மாநிலம் கேரளம். சீனாவில் மருத்துவம் படித்த கேரள மாணவர்களுக்குத் தொற்று இருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் பிப்ரவரி 3-ல் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். நானும் அப்போதே மருத்துவக் குழுவில் இணைக்கப்பட்டேன். தனிமைப்படுத்துதலுக்குப் பின் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து மார்ச் 8-ல், இத்தாலியிலிருந்து திரும்பிய வாலிபரால் அவரது சகோதரி, சகோதரியின் கணவர், அவரது தாத்தா, பாட்டி உட்பட 11 பேருக்கு கரோனா தொற்றுவந்தது. அதில் ஐந்து பேர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தனர். நான் இளம் தம்பதிக்கான மருத்துவக் குழுவில் இருந்தேன்.
உங்களோடு பணியில் இருந்த செவிலியர் ரேஷ்மாவுக்குத்தானே கரோனா தொற்றியது? அப்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
ஆமாம். ஆனால், ரேஷ்மா முதிய தம்பதிக்கான குழுவில் இருந்தார். எங்கள் மருத்துவமனையில் 52 செவிலியர்கள் கரோனா பிரிவில் பணியாற்றினோம். வெவ்வேறு குழுக்கள் என்றாலும், அனைவருமே ஒரே விடுதியில்தான் தங்கியிருந்தோம். ஒரே மெஸ்ஸில்தான் சாப்பிடுவோம். ரேஷ்மாவுக்கு மூக்கிலிருந்து நீர் கசியத் தொடங்கியதுமே பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதும் உடைந்து அழுதேன். என்றாலும், அவர் மீண்டுவிடுவார் என்ற நம்பிக்கை அவருக்கும் இருந்தது; எங்களுக்கும் இருந்தது.
அதைத் தொடர்ந்துதான் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டீர்களா?
எங்கள் விடுதியில் இருந்த 52 செவிலியர்களையுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தினார்கள். தொடக்க நிலையிலேயே ரேஷ்மாவுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக எங்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இது பிறகு உறுதியானது.
ஜாக்கிரதையாகத்தானே இருந்திருப்பீர்கள். பின்னர் எப்படி ரேஷ்மாவுக்குத் தொற்று ஏற்பட்டது?
கரோனா எளிய வாய்ப்பு கிடைத்தாலும் தொற்றிக்கொள்ளும் கிருமி. ரேஷ்மா ஊழியம் பார்த்த தம்பதிக்கு 93-88 வயது. கரோனாவின் வெறியாட்டத்தை அவர்களுக்குப் புரிய வைக்கவே பெரும் போராட்டமாக இருந்தது. வயோதிகத்தால் தனித்து இயங்க முடியாத அவர்களுக்கு டயப்பர் அணிவித்திருந்தோம். அதைக் கழற்றி மாற்றுவது, செவித்திறன் குறைந்த அவர்களிடம் காதோரம் நெருங்கிப் பேச வேண்டியிருந்தது; இப்படியான நெருக்கம்தான் ரேஷ்மாவுக்குத் தொற்று ஏற்படக் காரணமாகிவிட்டது.
கரோனா பிரிவில் பணியாற்றுவதை உங்கள் குடும்பத்தினர் எப்படிப் பார்த்தார்கள்?
என் கணவர் ஹென்றி ஒரு போலீஸ் அதிகாரி; அவரும் கரோனா பணியில் இருக்கிறார். என்றாலும், ஒரு கணவராக ஆரம்பத்தில் பயந்தார். ‘மருத்துவப் பணி கடவுளுக்கான பணி இல்லையா?’ என்று கேட்டபோது அவர் என்னைப் புரிந்துகொண்டார். குடும்பத்தினர் எல்லோரும் பக்கபலமாகவே இருந்தார்கள். குறிப்பாக, குழந்தைகள்.
வீட்டுக்கு 35 நாட்களுக்குப் பின் போனபோது எப்படி உணர்ந்தீர்கள்?
மூத்தவள் அனன்யா ஒன்பதாம் வகுப்பும், இளையவன் அனன் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். 35 நாட்களுக்குப் பிறகு ஆசையோடு வீட்டுக்குப் போனேன். உள்ளே போனதும் அவ்வளவு ஏக்கத்தையும் அடக்கிக்கொண்டு என் மகள், “அம்மா குளிச்சுட்டு வாங்கம்மா” என்றாள். தாயாக மட்டுமல்ல; செவிலியராகவும் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன். இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் இருந்துவிட்டால் கரோனாவை விரட்டியடித்துவிடலாம்.
- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT