Published : 07 Apr 2020 07:23 AM
Last Updated : 07 Apr 2020 07:23 AM
கரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநில எல்லைகளும் அதையடுத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. ஆனால், யாரும் எந்த அறிவிப்பும் கொடுக்காமலேயே இந்தியாவில் பல கிராமங்கள் தங்களது எல்லைகளை மூட ஆரம்பித்திருக்கின்றன. வட்டம், வருவாய்க் கோட்டம், மாவட்டம் என்று வருவாய்த் துறை எல்லைகளைப் பிரித்துவைத்திருந்தாலும் கிராமங்கள் தன்னாட்சியும் தன்னிறைவும் கொண்ட பிரதேசங்களாகவே இன்னும் நீடிக்கின்றன என்பதற்கு இது ஒரு நிகழ்கால உதாரணம். ஊரடங்கைப் பின்பற்றுவதைத் தாண்டி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும்கூட கிராமங்களின் கூட்டுப்பொறுப்புணர்வு வெளிப்படுகிறது.
மஹாராஷ்டிரத்தின் சில கிராமங்களில் மும்பை, புனே நகரங்களிலிருந்து ஊருக்குத் திரும்பியவர்களை அனுமதிக்கவில்லை. மருத்துவப் பரிசோதனைகள் செய்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே உள்ளே நுழைய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹொள்ளகள்ளி கிராமத்தினர், ஊர் எல்லைகளில் தடுப்புகளை வைத்திருப்பதோடு அதைச் சுழற்சி முறையில் கண்காணிக்க நூறு இளைஞர்களைக் கொண்ட தன்னார்வக் குழு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவு தங்களிடம் இருப்பதாகவும் நிலைமை சீரடைந்த பிறகுதான் வெளியாரை உள்ளே அனுமதிப்போம் என்றும் கூறுகிறார்கள் இந்தக் கிராமத்து மக்கள். கொப்பால் அருகிலுள்ள கசனகண்டி கிராமத்தில் சாலையின் குழிகளை வெட்டித் தடுப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கெல்லூர் கிராமத்தில் கரோனா தாக்கம் நிற்பதுவரைக்கும் ஊரிலிருந்து வெளியே செல்வதற்கும், வெளியே இருப்பவர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மிஸோரம் மாநிலத்தின் கிராமங்களில் காரணமின்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் பெயர்கள் ஒலிபெருக்கிகளில் தெரியப்படுத்தப்படுகிறது. சில கிராமங்களில் உள்ளூர்ப் பிரமுகர்களைக் கொண்ட தன்னார்வலர்க் குழுக்கள் உணவு, மருத்துவம் என்று யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உதவுவதற்குத் தயார்நிலையில் இருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் விதிமுறைகளை மீறுகிறார்களா என்று கண்காணிக்கவும் செய்கின்றன. நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் கிராம எல்லைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இத்தகையை தடைகளை மீறி அடிப்படை உணவுப் பொருட்களைக் கிராமங்களுக்குள் கொண்டுசெல்ல இந்திய உணவுக்கழகம் காவல் துறையின் உதவியை நாடும் அளவுக்குச் சென்றுவிட்டது. திரிபுராவின் சில கிராமங்களில் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது என்ற எச்சரிக்கைப் பலகைகள் இருப்பதோடு, எல்லையில் நீர் வாளிகளும் சோப்பும் வைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை வரையில் நீளும் சோழர் காலத்து வளநாடுகளில் முதலில் அமைந்திருப்பது காசாவளநாடு கிராமம். அதன் நான்கு நுழைவாயில்களிலும் தடுப்புகளை அமைத்து இரண்டு இளைஞர்கள் சுழற்சி முறையில் கண்காணித்துவருகிறார்கள். ஊருக்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்த தண்ணீரில் கைகளைச் சுத்தம் செய்துகொண்டால்தான் ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஊர்க்கட்டுப்பாடு என்பது தன்னாட்சியின் காலச்சுவடுகள் மட்டுமில்லை; தன்னிறைவின் வெளிப்பாடும்கூட!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT