Published : 23 Aug 2015 11:53 AM
Last Updated : 23 Aug 2015 11:53 AM
ஊரில் சொல்வார்கள், “உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்று. நம் நாட்டில் தகவல் ஆணையமோ எல்லாப் பக்கத்திலும் இடிபடுகிறது.
காலனி ஆதிக்கத்தின் கருப்புச் சட்டங்களை எதிர்த்து மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பின்னர், இந்தியர்களுக்குப் பொறுப்பாட்சி அதிகாரம் கொடுப்பதாகக் கூறிய பிரிட்டிஷ் அரசாங்கம், தனது சட்டங்களை மேலும் இறுக்கியது. அரசு அலுவல்கள் பற்றி எவ்விதத் தகவல்களையும் மக்கள் அறிய முடியாத வகையில் அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு போட 1923-ம் வருடம் கொண்டுவரப்பட்டதே ‘அலுவல் ரகசியச் சட்டம்’. அச்சட்டத்தின்படி, ஒரு அலுவலகத்தில் எத்தனை ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள் என்ற தகவலைக்கூட குடிமக்களால் அறிந்துகொள்ள முடியாது.
அலுவல் ரகசியச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசின் செயல்பாடுகளில் ஒளிவு மறைவற்ற தன்மை இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பியும் 74 ஆண்டுகளுக்குப் பின்னரே, 1997-ல் தமிழ்நாட்டில் தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட்டது. வழக்கம்போல் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளால் அச்சட்டம் காகிதச் சட்டமாகவே இருந்தது. பின், 2005-ல் மத்திய அரசு கொண்டுவந்த தகவல் உரிமைச் சட்டம், “பொது ஊழியர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகளை உருவாக்குதல், ஜனநாயகத்தில் மக்களுக்குத் தகவல் அறியும் உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் ஊழலைத் தடுத்தல்” தனது குறிக்கோள் எனக் குறிப் பிட்டது. அதன் பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் களில் மக்களுக்கு அச்சட்டத்தின் மூலம் மாபெரும் அதிகாரம் வழங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது.
அச்சப்பட்ட நீதிமன்றங்கள்
ஆரம்பத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளாக இருப்பினும், அவர்களது கடமையுணர்வு மற்றும் பாரபட்சமற்ற செயல்பாடுகளினால் அச்சட்டத்தின் எல்லைகளைத் தமது தீர்ப்புகளால் விரிவுபடுத்தினர். அவர்களிட்ட உத்தரவுகளுக்கு நீதிமன்றங்களே அச்சப்பட வேண்டியதாயிற்று.
1997-ல் நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் ‘நீதி வாழ்வின் விழுமியங்கள்’ பற்றி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். தங்களது சொத்துக் கணக்குகளைத் தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்போவதாக உறுதி எடுத்துக்கொண்டனர். சுபாஷ் சந்திர அகா்வால் என்ற வழக்கறிஞர் எவ்வளவு நீதிபதிகள் அவ்வாறு சொத்துக்கணக்கை தலைமை நீதிபதியிடம் கொடுத்துள்ளனர் என்று தகவல் கேட்டதற்கு, உச்ச நீதிமன்றம் அத்தகவலைக் கொடுக்க மறுத்துவிட்டது. மத்திய தகவல் ஆணையர், அவரது மனுவின் மீது அத்தகவலை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
நீதி கேட்ட உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் உச்ச நீதிமன்றமே டெல்லி உயர் நீதிமன் றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். அதன் மீதான மேல் முறையீட்டை டெல்லி நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. பின்னர், உச்ச நீதிமன்றம் தனது நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்து தடை உத்தரவைப் பெற்றது. உச்ச நீதிமன்றமே நீதி கேட்டு நெடும் பயணம் சென்றது முதல் நிகழ்வாகும்.
அவ்வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய 16.9.2009 தேதிய கடிதத்தில், “ரகசியம் மற்றும் உணர்ச்சிபூர்வமான பல தகவல்களைத் தலைமை நீதிபதியிடம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகவல்களைச் சாதாரண குடிமக்களுடன் பகிர்ந்துகொள்வது உச்ச நீதிமன்றத்தின் இயங்குதலுக்கும் செயல்பாட்டுக்கும் குந்தகம் விளை விக்கும். நீதித் துறையின் சுதந்திரத்துக்குள் குறுக்கிடும் செயலாகிவிடும்” என்று குறிப்பிட்டு, தகவல் அறியும் சட்டத்தில் தக்க திருத்தம் கொண்டுவர வேண்டுகோள் விடுத்தார். அத்திருத்தம், நீதித் துறையின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் தகவல்களை மறுக்கும் உரிமையைத் தம்மிடம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய 13.10.2009 தேதிய பதில் கடிதத்தில், அவரது பரிந்துரையைச் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிப் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நீதித் துறைக்கு விலக்கு இல்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகச் செயல்பட்ட சோனியா காந்தி, தனது 10.11.2009 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தகவல் அறியும் சட்டத்தில் நீதித் துறைக்கு விதிவிலக்கு அளிப்பதற்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார். சட்டத்தின் மூலம் ஒளிவுமறைவற்ற தன்மை அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும், தேசப் பாதுகாப்பு குறித்த தகவலைத் தவிர, மற்ற எவ்விதத் தகவல் அளிப்பதற்கும் விதிவிலக்குக் கொடுக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
பிரதமர், சோனியா காந்திக்கு அனுப்பிய 24.12.2009 தேதிய பதில் கடிதத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வேண்டுகோள் பற்றிக் குறிப்பிட்டதுடன், “சட்டத்தில் திருத்தம் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து சட்டம் நீர்த்துப்போகாமலிருக்கும்படியே நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். கடந்த 6 வருட காலங்களில் தலைமை நீதிபதி விடுத்த வேண்டுகோளை அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. எனினும், தகவல் அறியும் ஆணையர்கள் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகள் மீதும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திடம்தானே இருக்கிறது!
வேதனையான செயல்
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இக்பால் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “கீழமை நீதிமன்ற நடுவர்கள்மீது பல ஊழல் புகார்கள் வந்துள்ளன” என்று குறிப்பிட்டார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது உயர் நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அலுவலர் அத்தகவலை அளிக்க மறுத்துவிட்டார். தகவல் ஆணையர் அத்தகவல்களைக் கொடுக்க உத்தரவிட்டபோது, சென்னை உயர் நீதிமன்றமே ஒரு வழக்காடியாக வழக்குத் தொடர்ந்து, தனது நீதிமன்றத்திலேயே தடை உத்தரவு பெற்றது வேதனையான செயல்.
சமீபத்தில் குஜராத் நீதிமன்றத் தலைமை நீதிபதி, அங்குள்ள நீதிபதிகள் குறைந்த செலவில் வீட்டு மனைகளை அரசிடமிருந்து பெற்றதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக முயன்றபோது, அதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
மாநிலத் தகவல் ஆணையர்களாக நியமனம் பெறுவதற்கான தகுதிகள் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 15(5) பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுவாழ்வில் உயர்ந்தவர்களாகவும், விரிந்த அறிவு பெற்றவர்களாகவும், சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இதழியல், பொது ஊடகங்கள் (அ) நிர்வாகம் மற்றும் ஆளுகையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. தவிர, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது என்றும் லாபம் தரும் பதவியை வகிக்கக் கூடாது என்றும், அரசியல் கட்சிகளோடு தொடர்பிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்திலோ (அ) எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றமே தகவல் ஆணையர்களின் தகுதி என்ன என்று கூறிய பின், நமீத் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தின் பிரிவுகளைப் புறக்கணித்து மாநில முதன்மைத் தகவல் ஆணையர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்று 2013-ல் உத்தரவிட்டது. அத்தீர்ப்பினால், பல ஆணையங்களின் முதன்மைப் பதவிகள் நிரப்பப்பட முடியாத சூழ்நிலை உண்டாயிற்று. சட்டத்தின் பிரிவுகளுக்கு முரணாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக தனது தீர்ப்பைச் சீராய்வு செய்த உச்ச நீதிமன்றம், சுயமாக அத்தீர்ப்பை ரத்துசெய்தது.
தவறை உணர்ந்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றத்திலும் பதிவாளர் நியமனம் குறித்து தகவல் அளிக்கும்படி தகவல் ஆணையர் அளித்த உத்தரவை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ரத்துசெய்ததுடன், எதிர்காலத்தில் தகவல் கேட்போர் தகவல் கேட்பதற்கான காரணத்தையும் கூற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தகவல் கேட்போர் தங்களது சொந்த விவரங்களையும், தகவல் கேட்பதற்கான காரணத்தையும் குறிப்பிடத் தேவையில்லை என்று சட்டப்பிரிவு 6(2)-ன் கீழ் குறிப்பிட்டிருக்கும்போது, நீதிபதிகள் தங்களது சொந்தக் கருத்தைச் சட்டத்தின்மீது திணித்தது சரியா என்ற கேள்வி பொதுமேடைகளில் எழுப்பப்பட்டன. தவறை உணர்ந்த சென்னை உயர் நீதிமன்றம், தாங்களே முடிவெடுத்து அத்தீர்ப்பைத் திரும்பப் பெற்றது.
இப்படி நீதிமன்றங்களே தகவலறியும் சட்டத்தைப் பற்றி தவறான புரிதலுடன் செயல்படும்போது, அச்சட்டத்தை அமல்படுத்தும் அரசுகளும், அதை ஆட்டிவைக்கும் அரசியல் கட்சிகளும் எப்படிச் செயல்படுவார்கள் என்று சொல்லத் தேவையில்லை.
அகில இந்திய அளவில் செயல்படும் ஆறு அரசியல் கட்சிகளுக்கும் தகவலறியும் சட்டம் பொருந்தும் என்று மத்திய தகவல் ஆணையர் அளித்த உத்தரவு அக்கட்சிகளை கதிகலங்கச் செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் பொது அதிகாரமிக்க அமைப்பு என்ற வரையறைக்குள் வரும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த ஆறு அரசியல் கட்சிகளும் அரசிடமிருந்து பெறக் கூடிய சலுகைகள் / உதவிகள் அவ்வமைப்புகளையும் அச்சட்டத்தின் கீழ் தகவலளிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
அச்சமுற்ற அரசியல் கட்சிகளும் தகவல் அறியும் சட்டத்தை நீர்த்துப்போவதற்கான முயற்சிகளின் முதல்கட்டமாக, தகவல் ஆணையர்களைத் தங்களது கைத்தடிகளாக நியமனங்கள் செய்துகொள்ளும் ஏற்பாட்டில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் இம்மாதம் ராமானுஜம், தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டது கடும் கண்டனங்களை ஈர்த்துள்ளது. அதை எதிர்த்து வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 15(3)-ல் தகவல் அறியும் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. முதல்வரைத் தலைவராகக்கொண்ட குழுவில் சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவரும், முதல்வரால் நியமிக்கப்படும் மற்றொரு அமைச்சரும் இடம்பெறுவர். இம்மூவர் குழுவே தகவல் அறியும் ஆணையர்களை நியமனம் செய்யும். தற்போது மூவரை நியமிக்கும்போது எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்தை முறையாகக் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தகவல் அறியும் ஆணையர்கள் நியமனத்தைப் பற்றி தற்போது குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள், இதற்கு முன்னால் 2012-ல் நியமனம் நடைபெற்றபோது ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அப்போது அதிமுக ஆதரவு வழக்கறிஞர்கள் இருவர் நியமனம்பெற்று இன்னும் பதவியில் உள்ளனர். தகவல் ஆணையம் சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும் என்பதிலும், அதன் முதற்கட்டமாக அதன் ஆணையர்கள் முறையாக நியமிக்கப்பட வேண்டும் என்பதிலும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கும்போது அனைத்து அதிகார மையங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயல்வதையும், தங்களது கட்சிக்காரர்களுக்குப் பதவிகளைப் பிரித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதையும் நாம் கண்டிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நாம் எதிர்ப்புக் குரல் கொடுத்திருந்தோமானால் தற்போது தள்ளாடிக்கொண்டிருக்கும் தகவல் ஆணையம் காப்பாற்றப்பட்டிருக்கும்!
-கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT