Published : 01 Apr 2020 08:10 AM
Last Updated : 01 Apr 2020 08:10 AM
கேரளாவின் ‘கைத்தாங்கு’: மலையேறிய ஆட்சியர்!
பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூ, கொன்னி சட்டமன்றத் தொகுதியின் சிபிஎம் உறுப்பினர் கே.யு.ஜனீஷ் குமார் இருவரும் காட்டுவழியில் ஆற்றைக் கடக்கும் புகைப்படமானது கரோனா நிவாரணப் பணிகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். பெரியாறு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 12 கிமீ உள்ளடங்கிய வனப்பகுதியில் அமைந்திருக்கிறது அவனிப்பாறை. அங்கு வசிக்கும் 37 பழங்குடியினக் குடும்பங்கள் உணவின்றித் தவிப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையொட்டி தன்னார்வலர்களின் குழு ஒன்றுடன் சேர்ந்து, அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகை, அத்தியாவசியப் பொருட்களுடன் கிளம்பிவிட்டனர் நூவும் ஜனீஷும். சாலையிலிருந்து இறங்கி மூன்று கிமீ தூரம் காட்டுவழிப் பாதையில் மலையேறிச் சென்று கொடுத்திருக்கிறார்கள். உணவு, மருந்து தேவைப்படுபவர்களுக்கு அதை இலவசமாகக் கொண்டுசேர்க்கும் ‘கைத்தாங்குத் திட்டம்’ கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வட்டத்துக்கும் ஐந்து தன்னார்வலர்களைக் கொண்ட கைத்தாங்குக் குழுக்கள் இயங்கிவருகின்றன.
15 நிமிடங்களில் கரோனா சோதனை: வழிகாட்டும் கர்நாடகம்!
கரோனா நோய்த் தொற்று இருக்கிறதா என்று 15 நிமிடங்களில் சோதனை முடிவைச் சொல்லிவிடலாம், சோதனை ஒன்றுக்கான செலவு ரூ.800 மட்டும்தான். அதற்காக சிங்கப்பூரிலிருந்து ஒரு லட்சம் நவீனக் கருவிகளை வாங்க முடிவெடுத்திருக்கிறது கர்நாடகம். ‘தமிழகத்திலும் அந்தக் கருவியை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தென்கொரியாவைப் போல நாளொன்றுக்கு 18,000 பேரைச் சோதனை செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டத்துக்குத் தேவைப்படும் கருவிகளை வாங்குவதற்குத் தனது தொகுதி வளர்ச்சி நிதியை அளிக்கத் தயார்’ என்று அறிவித்திருக்கிறார் அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.
ஊதிய வெட்டு: தெலங்கானாவின் தவறான முடிவு!
அரசு ஊழியர்களுக்கு ஊதிய வெட்டை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 75% வெட்டு; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 60% வெட்டு; மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 50% வெட்டு என்று தொடரும் பட்டியலில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்கு 10% ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா முதலமைச்சரும் அதிகாரிகளும் விரும்பினால் தங்களது ஊதியத்தை நன்கொடையாக வழங்கட்டும், அடிப்படை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஏன் பறிக்க வேண்டும்? ஒரு பேரிடர்க் காலத்தில் முன்னுதாரணமாக ஏனைய நிறுவனங்களுக்கு இருக்க வேண்டிய அரசானது கந்துவட்டிக்காரரைப் போல நடந்துகொள்ளலாமா என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment