Published : 18 Aug 2015 09:14 AM
Last Updated : 18 Aug 2015 09:14 AM
டெல்லியில் 15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, சென்னைக்கு வந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் என்னுள் ஏற்பட்ட மனத்தோற்றங்கள் இப்போதும் மாறிவிடவில்லை. ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட் என்ற இந்த ஊரின் சீதோஷ்ணமும் ஜனநெரிசலும்தான் சென்னை பற்றி என் மனதில் படிந்த சித்திரங்கள். அதில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. எறும்புக் கூட்டம்போல் மொய்த்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் கூட்டம், கூட்டம், எங்கு பார்த்தாலும் கூட்டம். இதற்கு ஆட்சியாளர்களே காரணம். உலகின் பெருநகரங்களோடு சென்னையை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு நகரம் மக்கள் லகுவாக வாழ்வதற்கு ஏற்ற இசைவான சூழலை அளிக்கிறதா இல்லையா என்பது அந்நகரைச் சுற்றி வளரும் துணை நகரங்களையும் பொறுத்தே இருக்கிறது. சென்னைக்கு அப்படிப்பட்ட துணை நகரங்கள் இல்லை. கிராமங்களில் வாழ்வது சாத்தியமில்லாமல்போனதால், மக்கள் கூட்டம் நகரங்களை நோக்கிப் புலம்பெயர்வதுதான் ஒரு நகரம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை. அப்படி வரும் மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் வாங்கிக்கொள்வதற்கான எந்த அடிப்படை வசதியையும் சென்னை நகரம் கொண்டிருக்கவில்லை. இங்குள்ள சேரிகளே அதற்குச் சாட்சி. நான் வாழும் மைலாப்பூருக்கு அருகில் உள்ள நொச்சிக்குப்பத்தில் உள்ள குப்பைக் கூளங்களையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்க்கும்போது என் மனம் பதறுகிறது. மடிப்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளும் இந்தச் சேரிகளைவிட எந்த விதத்திலும் மேம்பட்டதல்ல. ஒரு மழைப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க இயலாது.
சென்னையின் பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரியும் என் வாசகி ஒருவர், புறநகர்ப் பகுதி ஒன்றில் வசித்தார். திடீரென்று ஜுரம். கல்லூரி போகவில்லை. ஒரே வாரத்தில் கல்லூரிக்கு அவரது மரணச் செய்தி வந்தது. டெங்கு போன்ற ஏதோ ஒரு காய்ச்சல். சவ அடக்கத்துக்காக அவர் வீட்டுக்குப் போனபோது மிகப் பெரிய அதிர்ச்சியால் தாக்குண்டேன். சேறும் சகதியும் புல்லும் புதருமாக - சரித்திரத்தில் இருண்ட காலம் என்று சொல்வார்களே - அப்படிப்பட்டதொரு காலத்துக்குப் போய்விட்டதுபோல் இருந்தது. பெண்ணுக்கு 25 வயதுகூட ஆகியிருக்காது. கல்லூரிப் பேராசிரியைகள் அத்தனை பேரும் ஒரு பஸ்ஸில் வந்து இறங்கியபோது அந்தப் பெண்ணின் தந்தை கதறிக்கொண்டே சொன்னார் ஒரு வார்த்தை, அதை என்னால் வாழ்நாளில் மறக்க இயலாது. “எம் பொண்ணு கல்யாணத்துலதான் உங்க எல்லாரையும் பார்ப்பேன்னு நினைச்சேன் தாய்ங்களா… இப்போ எம் பொண்ணு பொணத்தைப் பாக்க வந்துட்டீங்களே…”
சென்னையின் ப்ளூம்ஸ்பரி
என் வீட்டிலிருந்து நடை தூரத்தில் ஒரு வசிப்பிடம் இருக்கிறது. ஒரு வனத்தைப் போல் தோற்றமளிக்கும் பகுதி அது. ஒரு தூசி தும்பைப் பார்க்க முடியாது. சூரியனே காணாத அளவுக்கு விருட்சங்களின் அடர்த்தி. மத்திய லண்டனில் உள்ள ப்ளூம்ஸ்பரியைப் பார்த்திருக்கிறீர்களா, அப்படி இருக்கும் அந்தப் பகுதி. போட் ஹவுஸ் என்று பெயர். இப்படி சென்னையில் அநேக இடங்கள் உண்டு. லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவைச் சுற்றியுள்ள பல பகுதிகள் சென்னையின் ப்ளூம்ஸ்பரிதான். போயஸ் கார்டன் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைப் போக்காத வரை சென்னை பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள எதுவும் இல்லை.
வதை முகாம் பெட்டிகள்
கிராமங்களிலிருந்து பிழைப்புத் தேடி தினந்தோறும் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்துக்கொண்டு சென்னை நகரம் எதிர்கொள்ளும் இன்னொரு அதிபயங்கரப் பிரச்சினை, போக்குவரத்து. ஒரு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் செல்வது இங்கு சகஜம். காரணம் என்ன? அவர்கள் பஸ்ஸிலோ மெட்ரோ ரயிலிலோ வசதியாகப் பயணம் செய்வதற்கு இங்கே வாய்ப்பு இல்லை. இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டவுன் பஸ்ஸில் அல்லது மின்சார ரயிலில் பயணம் செய்வது பற்றி உங்களால் யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், ஐரோப்பிய நகரங்களில் குடும்பமே ஸ்கூட்டரில் போகும் காட்சியை நீங்கள் காண முடியாது. சொன்னாலும் நம்ப மாட்டார்கள். மூன்று நிமிடத்துக்கு ஒரு பஸ்ஸையும், மெட்ரோ ரயிலையும் நீங்கள் அங்கே பிடிக்க முடியும். இங்குள்ள பேருந்துகளைப் பார்க்கத் தோன்றும் எனக்கு, ஹிட்லரின் வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரயில் பெட்டிகள்தான் ஞாபகம் வருகின்றன. அப்பேர்ப்பட்ட கொடூரமான அனுபவத்தையே சென்னை பஸ்களும் மின்சார ரயில்களும் நமக்கு அளித்துக்கொண்டிருக்கின்றன.
இப்படி இல்லாமல் ஒரு நகரம் தன் ஜீவனையும் சௌந்தர்யத்தையும் இழக்காமல் இருக்க வேண்டுமானால், நகரத்தில் இருக்கும் வசதிகள் அனைத்தும் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும். உதாரணமாக, பாரிஸ் நகரை எடுத்துக்கொண்டால் அங்கே இருக்கும் சூப்பர் மார்க்கெட், சினிமா, பள்ளிகள், வீட்டுவசதி, போக்குவரத்து என்ற அத்தனை வசதிகளும் ஃபிரான்ஸின் தென்கோடியில் உள்ள தூலுஸ் என்ற சிறுநகரிலும் கிடைக்கும். பாரிஸில் கிடைக்கும் அதே காஃபி, அதே விலையில் தூலுஸில் கிடைத்தது.
ஆனால், எல்லாவற்றைத் தாண்டியும் எந்த ஒரு நிலப் பகுதியும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இருள்களினூடேகூடத் தனக்கான அற்புதங்களையும் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. அப்படிப் பார்த்தால், சென்னையின் அற்புதங்கள் என எதையெல்லாம் சொல்லலாம். முதலாவதாக நான் சொல்லக் கூடியது நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட். நீங்கள் சைவ உணவுக்காரராகவே இருந்தாலும் இந்த மார்க்கெட்டை ஒரு ஞாயிறு காலையில் பார்க்க வேண்டும். அது ஒரு வாழ்க்கை. இப்படி ஒரு மாலை நேரத்து எட்வர்ட் எலியட்ஸ் பீச், நண்பகல் நேரத்து எழும்பூர் அருங்காட்சியகம், மாலை நேரத்து நேப்பியர் பாலம்… அப்புறம் இரவு நேரத்துச் சென்னை… அதுபற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். சமீபத்தில் ஆலந்தூரில் உள்ள சாங்கு சித்தரின் ஜீவசமாதிக்கு ஒரு பவுர்ணமி இரவில் சென்றிருந்தேன். சென்னையின் அற்புதங்களில் ஒன்றான கானா பாடல்களில் அந்த இரவு முழுவதும் திளைத்திருந்தேன்.
- சாரு நிவேதிதா, எழுத்தாளர், ‘எக்ஸைல்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT