Published : 26 Aug 2015 09:02 AM
Last Updated : 26 Aug 2015 09:02 AM
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு சதவீதத்தை அதிகரிப்பது, அதன் பயன்பாட்டைப் பரவலாக்குவது குறித்து கடந்த 2001- லிருந்தே மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. 2009-ல் எரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5% எத்தனாலைப் பெட்ரோலியத்துடன் கலக்க வேண்டும். இதைப் படிப்படியாக 2017-ல் 20% ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. 2014-ல் மத்திய அரசின் ‘வாகன எரிபொருள் தொலைநோக்குத் திட்டம் மற்றும் கொள்கை 2025’-லும் இது வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், அரசியல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் 13 மாநிலங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, 2% எத்தனாலைப் பெட்ரோலுடன் கலக்கின்றன.
இந்தியாவில் 8 மாநிலங்களில் 152 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 642 தனியார் சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதே ஆலைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்தால், தற்போதைய உற்பத்தியைவிட நான்கு மடங்கு அதிகமாக (ஒரு கோடி கிலோ லிட்டர்) எத்தனாலை உற்பத்தி செய்யலாம். மேலும், எத்தனாலைக் கரும்பிலிருந்து மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. அமெரிக்காவில் சோளம் அதிகமாக விளைவதால் சோளத்திலிருந்தும், சில நாடுகளில் உருளைக்கிழங்கிலிருந்தும் தயாரிக்கிறார்கள்.
விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காத சூழல் மற்றும் உரிய குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் வசதி இல்லாத இந்தியா போன்ற பெரும் விவசாய நாடுகளில் அந்தந்த மாநிலங்களில் மிகையாக உற்பத்தியாகும் கரும்பு, சோளம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கலாம். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இயலும்.
கரும்பு உற்பத்தியில் நாட்டின் முதல் மூன்று இடங்களிலிருக்கும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரும்பு விவசாயிகள் கடும் நஷ்டத்தில் இருக்கின்றனர். தென்னிந்தியாவின் ‘சர்க்கரைக் கிண்ணம்’என்றழைக்கப்படும் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தனது கரும்புத் தோட்டத்துக்குத் தீ வைத்த நஞ்சே கவுடா என்கிற விவசாயி, அதில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். அந்த மாநிலத்தில் மட்டும், கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 20-ம் தேதிக்குள் 108 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் கணிசமானோர் கரும்பு விவசாயிகள். அங்குள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.127 கோடியை நிலுவைத் தொகையாக வைத்துள்ளன. தமிழகத்திலும் கரும்பு விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் நிலுவைப் பணம் வர வேண்டியிருக்கிறது. சராசரியாக ஐந்தாண்டுகளுக்கு முந்தைய தவணைத் தொகையைத்தான் அவர்கள் தற்போது பெறுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 46 சர்க்கரை ஆலைகளில் 9 சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை நாள் ஒன்றுக்கு 320 கிலோ லிட்டர் வீதம் ஆண்டுக்கு 96,000 கிலோ லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்கின்றன. உற்பத்தி செய்யப்படும் எத்தனால் மது உற்பத்திக்குத் தேவையான எரிசாராயமாக மாற்றப்படுகிறது. ஆனால், இந்த எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவது, கூடுதல் எத்தனால் உற்பத்தி செய்வது ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் சர்க்கரை ஆலைகள் ஒரே ஆண்டில் கரும்பு விவசாயிகளின் மொத்த நிலுவைத் தொகையையுமே திரும்பச் செலுத்த இயலும். ஆலைகள், விவசாயிகள் என இருதரப்புப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். ஆனால், அதற்குத் தடையாக இருப்பது எது?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
தெளிவோம்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT