Published : 17 Mar 2020 07:38 AM
Last Updated : 17 Mar 2020 07:38 AM
“எனது அன்பான சகோதரர்களே, கனத்த இதயத்துடன் இன்று உங்கள் முன் வந்துள்ளேன்.” 1971 மார்ச் 7 அன்று வங்கத் தலைநகர் டாக்காவில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆற்றிய உரையின் ஒவ்வொரு வரியிலும் தாங்கொணா வலி நிறைந்திருக்கிறது. 20 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் முஜிபுர், “மன வருத்தத்துடன் நமது 23 ஆண்டு காலச் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது வங்க மக்கள் ரத்தம் சிந்தினார்கள் என்பதன்றி வேறு எதுவும் தெரியவில்லை. அப்பாவிகளின் ரத்தம், கண்ணீர். இதுவே நமது வரலாறு!”
டாக்கா, சிட்டகாங், குல்னா, ரங்க்பூர், ராஜ்சஹி தெருக்களில் ரத்த ஆறு ஓடியது. கொடூரத் தாக்குதலில் அப்பாவிகள் கொத்துக் கொத்தாக மாய்ந்துபோயினர். “அமைதியான முறையில் ஹர்த்தால் நடத்த அழைப்புவிடுத்தேன். மக்களும் தெருவுக்கு வந்தனர். பதிலுக்கு என்ன கிடைத்தது? கையில் ஆயுதம் இல்லாத மக்கள் மீது ஆயுதங்களைத் திருப்பினார்கள். இவை எங்கள் மக்களின் பணத்தில் வெளி எதிரியிடமிருந்து எங்களைக் காப்பதற்காக வாங்கப்பட்டவை. ஆனால், இன்று எம் சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுகிறது” என்றார். விடுதலைக்காக, உரிமைகளுக்காகப் பொறுப்பான தலைவனின் அறைகூவலாக ஒலித்தது முஜிபுரின் குரல். வங்க விடுதலைப் போர் தொடங்கியது.
1947-ல் நமக்கு ஒரு நாள் முன்னதாக சுதந்திரம் பெற்றபோதும் 1970 டிசம்பரில்தான் பாகிஸ்தானில் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தம் 300 இடங்கள். இதில், கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த அவாமி லீக் கட்சி, 160 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றது. அதன் தலைவர் முஜிபுர் ரஹ்மான். அவர்தான் பிரதமராகப் பொறுப் பேற்றிருக்க வேண்டும். ஆனால், மேற்கு பாகிஸ்தானியத் தலைவர்களும் மக்களும் இதற்கு உடன்படவில்லை. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவிக்கு வரத் துடித்தார் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜுல்பிகர் அலி புட்டோ. கிழக்குப் பகுதியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. வங்க மக்கள் போராட்டத்தில் குதித்தனர். உலகில் முதன்முறையாக, மொழி அடிப்படையில் ஒரு தேசம் உருவாகும் களம் ஏற்பட்டது.
ஏனெனில், அது ஒரு வரலாற்றுத் தருணம். மதங்களால் மட்டுமே நாடுகளை ஒருங்கிணைத்துவிட முடிவதில்லை. மொழி அடையாளம் அதனிலும் தீவிரமானது. பாகிஸ்தான் பிறந்தபோதே வங்க மொழியின் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளி உருதுவை ஒற்றை ஆட்சிமொழியாக ஏற்றது. கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசம் வங்காளிகளால் நிறைந்தது. இது ஆறாத ரணமாக அவர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. மேலும், சுதந்திரத்துக்குப் பின்னர் 20 ஆண்டுகளாகவும் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கமே பாகிஸ்தான் அரசியலில் கோலோச்சியது; குறிப்பாக, சிந்து மாகாணத்தினர். இந்தக் கோபத்தின் உச்சமாகவே மக்களின் போராட்டம் வெடித்தது. இந்தக் கோபத்தின் உச்சமாகவே முஜிபுர் ரஹ்மானுக்கு உருவாக்கப்பட்ட நெருக்கடி அமைந்தது. விளைவாக, வங்கதேச விடுதலைப் போராட்டம் வெடித்தது.வங்க மக்களின் கோபம் ‘முக்தி பாகினி இயக்கம்’ வழியாக அவர்களுடைய விடுதலையை நோக்கி செலுத்தியது.
வங்கப் போராட்டத்தின் நெருக்கடியானது இந்தியாவையும் வலுக்கட்டாயமாக அதனுள்ளே இழுத்தது. வங்கதேசத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியது இந்தியா. இந்திரா காந்தி, முக்தி பாகினி, முஜிபுர் ரஹ்மான் கூட்டணி பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. சுதந்திரமான இறையாண்மை கொண்ட தனி நாடாக உருவானது வங்கதேசம். பிரதமராகப் பொறுப்பேற்றார் முஜிபுர்.
மதப் பிரிவினை அரசியலை ஏற்க மறுத்தார் முஜிபுர். தேசியம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோஷலிஸம் ஆகிய கொள்கைகளை முன்வைத்தார். இராக்கில் சதாம் ஹுசைன், பாகிஸ்தானில் ஜெனரல் முஷரஃப், சவுதியின் சல்மான் ஆகியோருக்கு முன்பாக மத அடிப்படைவாதத்தை நிராகரித்து, முற்போக்கு அதிபராகச் செயல்பட்டவர் முஜிபுர். ‘தீஸ்டா’ நதிநீர்ப் பங்கீடு, வங்கதேச அகதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நிரந்தரமாக ஒரு சகோதர உணர்வு நிலவுவதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.
வங்க மொழியின் உரிமைக்காகப் போராட்டம் நடத்திய பிப்ரவரி 21-ம் தேதியை ஆண்டுதோறும் வங்கதேசத்தில் நினைவுகூர்கிறார்கள். வங்கதேசம் முன்னெடுத்ததாலேயே அன்றைய தினம் சர்வதேசத் தாய்மொழிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. எல்லா மொழிகளுக்குமான தனித்துவம், மொழிகளுக்கு இடையேயான சமத்துவம், அந்தந்த மொழிகளுக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை முஜிபுரின் வழியாக உலகுக்கு உணர்த்துகிறது.
மார்ச் 17, 2020: முஜிபுர் ரஹ்மான் நூற்றாண்டு நிறைவு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT