Published : 17 Mar 2020 07:35 AM
Last Updated : 17 Mar 2020 07:35 AM

ரோபோக்களை உருவாக்குவது கல்விக்கூடங்களின் வேலை அல்ல!

பாலசுப்ரமணியம் முத்துசாமி

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதம் பார்த்தேன். ஒரு சேவை நிறுவனத்தின் பிரதிநிதி தங்கள் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதை எதிர்த்தார். “பன்னாட்டுச் சந்தைகளில் அவர்கள் நிறுவனம் போட்டியிட செயல்திறன் மிக்க ஊழியர்களே தேவை. சலுகை எனும் பெயரில் செயல்திறன் குறைவான ஊழியர்களை நியமிப்பதானது அவர்களுடைய நிறுவனத்தின் போட்டியிடும் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடும். நீண்ட காலத்தில் அது நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்” என வாதிட்டார். சந்தைப் பொருளாதாரத் தூய்மைவாதம் இது.

தமிழகத்தின் மலைப்பகுதி ஒன்றில் ஒரு மருத்துவத் தம்பதியினர் வசித்துவருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் பெருவெற்றி ஈட்டியவர்கள். அவர்களுக்குப் பிறந்த ஒரு பெண் குழந்தை மனவளர்ச்சி குன்றியவர். அந்தக் குழந்தையின் எதிர்காலம் கருதி அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். அந்த ஊர் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து, மலைவாழ் மக்களுக்கான மிக நவீன மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்கள்.

இன்று அந்த மழைவாழ் மக்கள் மருத்துவமனையானது இதர மக்களுக்கும் இலவச மருத்துவ சேவையை வாரம் ஒரு நாள் வழங்கிவருகிறது. தூய்மைவாதச் சந்தைப் பொருளியல் பார்வையில் மனவளர்ச்சி குன்றிய அந்தப் பெண் குழந்தை, போட்டியில் பங்குபெறத் தகுதி இல்லாதவர். ஆனால், மலைவாழ் மக்கள் நலன் எனும் பார்வையில் அவர்களுக்கான நவீன வாழ்க்கை உருவாகக் காரணமாக இருந்த கடவுள்!

எழுதப்படிக்கத் தெரியாத மருத்துவச்சிகள்

மராத்தியத்தின் தண்டகாரண்ய வனத்தில் உள்ளது கட்சிரோலி. அங்குள்ள காந்திய மருத்துவத் தம்பதியினர் அபய் பங், ராணி பங் இருவரும் ‘சர்ச் (SEARCH)’ எனும் நிறுவனத்தை மலைவாழ் மக்களுக்காக நடத்திவருகிறார்கள். அவர்கள் கிராமங்களில் இருக்கும் எழுதப்படிக்கத் தெரியாத மருத்துவச்சிகளுக்குப் பயிற்சியளிக்கிறார்கள்; அதன் மூலம், கர்ப்பிணிகளின் வீடுகளுக்குச் சென்று கர்ப்ப காலம், பிரசவம், குழந்தைகளுக்கான சிகிச்சைகளை அதிகத் தரம்வாய்ந்த வகையில் அளிக்கும்படி ஒரு சேவையை உருவாக்கியுள்ளார்கள். அந்தப் பகுதியின் குழந்தைகள் இறப்பு வீதம் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் உயர்தர மருத்துவமனையான டெல்லி அகில இந்திய மருத்துவக் கல்லூரியின் தலைவர் அந்த மருத்துவச்சிகளின் திறனைப் பரிசோதித்தார். ‘கட்சிரோலியின் இந்தப் பெண் மருத்துவச்சிகள், எங்கள் கல்லூரியின் குழந்தைநல நிபுணர்களைவிட இந்த நோய்களை அறிவதில், சிகிச்சை அளிப்பதில், திறன் வாய்ந்தவர்கள்’ எனப் பாராட்டினார் அவர். அபய் பங், ராணி பங் உருவாக்கிய இந்த முறை, கடந்த 180 ஆண்டுகளில் உலகத்தில் பொதுச் சுகாதாரத் துறையின் முக்கியமான முன்னெடுப்புகளுள் ஒன்று என உலகப் புகழ்பெற்ற சுகாதார இதழான ‘லான்செட்’ பாராட்டியுள்ளது. இன்று இந்த முன்னெடுப்பை இந்தியாவும் பல உலக நாடுகளும் பின்பற்றுகின்றன.

இந்தியாவில் எய்ம்ஸ், ஜிப்மர், சிஎம்சி எனப் பல உயர்நிலை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் மிகக் கடினமானவை. இவற்றின் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் பல ஆண்டுகள் பெரும் செலவுசெய்து பயிற்சி எடுத்துப் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்த, மத்திய/மேல்வர்க்க மாணவர்களே இவற்றில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதேசமயத்தில், தமிழகம் போன்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுமுறைகளானது ஓரளவு சீரான, நேர்மையான வகையில் அனைத்து மாணவர்களும் உள்ளே எளிதாக நுழையும்வண்ணம் சில ஆண்டுகள் முன்புவரை இருந்தன. இதுபோன்ற கொள்கைகளின் நேர்மறை விளைவாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் சமூக அடுக்குகளிலுமிருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் உருவானார்கள். அதன் மூலம் தமிழகச் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைந்ததைப் பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டுகின்றன. தமிழகத்தில் பொறியியல் கல்வி பரவலானபோது கல்லூரி நுழைதல் இலகுவாகி, பல லட்சம் மாணவர்கள் பொறியியல் பயின்றார்கள். விளைவாக, மென்பொருள் துறை பெருவளர்ச்சி கண்டது. நம்முடைய பொறியியல் வல்லுநர்கள் இப்போது உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்.

நுழைய முடியாத் தேர்வுமுறை

இந்தியாவின் மத்திய, மேல்வர்க்க, சாதி அடுக்குகளில் மிகக் கடுமையான நுழைவுத் தேர்வுகளை எழுதித் தேர்வு பெறுதலே தகுதியின் ஒரே அடையாளம் எனும் கருத்தாக்கம் மிக வலுவாக வேரூன்றியுள்ளது. இந்தியாவில் 50-60% ஏழை, கீழ்த்தட்டு மக்கள் வசிக்கிறார்கள். இன்னும் கல்லூரி செல்லாத கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவற்றில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் சூழலின் காரணமாகவே இதுபோன்ற நுழைவுத் தேர்வுச் சுமைகளை எதிர்கொள்ளும் திறனின்றி இருக்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வுகள் மாணவரின் உள்ளார்ந்த புத்திசாலித்தனத்தையும் இயல்பான ஆர்வத்தையும் அளப்பவையாக இல்லாமல், சில ஆண்டு பயிற்சிகளின் விளைவை அளப்பவையாக உள்ளன. இதன் விளைவாக, கழிப்பறைகூட இல்லாத, ஒரு அறை கிராமத்து வீட்டில் வசிக்கும் அனிதாவும், அனைத்து வசதிகளும் பயிற்சி நிலையங்களும் கொண்ட நகரத்து மாணவியும் ஒரே தேர்வை எழுத நேர்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களாகிய ஐஐடிக்கள் ஐஐஎம்களில் பயின்ற பட்டதாரிகள், இந்தியாவின் மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். தலைவர்களாகவும் உள்ளார்கள். அவற்றுக்குச் சற்றும் குறையாத வெற்றிகரமான சமூகநலன் நாடும் அமுல், கதர் வாரியம் போன்ற நிறுவனங்களில் சாதாரணக் கல்வி நிறுவனங்களில் பயின்ற மனிதர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் பணியாற்றும் எந்தத் தனியார் மருத்துவமனையையும்விட சாதாரண மருத்துவர்களும், உள்ளூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியரும் கொண்ட அர்விந்த் மருத்துவமனை, அதிக மக்களுக்குப் பயனுள்ளதாகவும் அதிக லாபகரமானதாகவும் விளங்கிவருகிறது.

செயல்திறனா, பயன்திறனா?

இந்தியா உலகின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நாடு. சராசரி வளம் (ஒவ்வொரு மனிதருக்கும்) குறைவான நாடு. எனவே, இந்தியாவின் கல்விமுறைகளும் நிறுவனங்களும் தனிமனிதச் செயல்திறனை ஊக்குவிப்பதைவிட சமூகத்துக்கான பயன்திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைதலே முன்னேற்றத்தை ஜனநாயகப்படுத்தும். அந்த வகையான நிறுவனங்களே பெரும்பான்மை மக்களுக்கான சேவைகளை, பொருட்களைக் கட்டுப்படியாகும் வகையில் உற்பத்திசெய்து சந்தைப்படுத்தும். அதேசமயத்தில், தனிமனித முனைப்புகளானது மனித இனத்தின் மிகப் பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளைப் படைத்துள்ளதும் நம் கண் முன்னே உள்ள வரலாறு. அதைப் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, இந்தியாவின் பெரும்பான்மை நிறுவனங்கள் மக்களுக்கானவையாக அமைக்கப்பட வேண்டிய சமயத்தில், தனிமனிதச் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைகிற உயர்நிலை நிறுவனங்களும் தேவை.

ஆனால், எல்லா நிறுவனங்களையும் ஒன்றுபோல ஆக்குதலும், எல்லாக் கல்வி நிலையங்களுக்கும் ஒரே வகையான நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவருதலும் முறையாகாது. அது ஏற்கெனவே உயர் அடுக்கில் இருக்கும் சமூகங்களின், மாநிலங்களின் நிலையை மேலும் வலுப்படுத்தி மிகப் பெரும் சமநிலையின்மையை உருவாக்கும். இது பெரும் அதிகாரம் கொண்ட மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களையே உருவாக்கும். அவை நிச்சயமாக ஊரக, ஏழைச் சமூகங்களின் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.

- பாலசுப்ரமணியம் முத்துசாமி,

‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: arunbala9866@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x