Published : 20 Aug 2015 09:12 AM
Last Updated : 20 Aug 2015 09:12 AM
கடந்த இரு நாட்களில் நாம் விவாதித்தபடி, தேவையில்லாத இலவசங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரூ.3,750 கோடி; இலவசங்களுக்கான விநியோகம், பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் ரூ.4,244 கோடி; உணவு மானியத் திட்டத்தில் ஓட்டைகளை அடைப்பதன் மூலம் ரூ.1,660 கோடி; மின்திட்டங்களைச் சீரமைப்பதன் மூலம் ரூ.1,495 கோடி; எதிர்காலத்தில் வட்டித்தொகையைக் குறைக்கும் நடவடிக்கை மூலம் ரூ.893 கோடி என ஆண்டுக்கு ரூ.12,042 கோடியைச் சேமிக்க முடியும். அதாவது, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமான ரூ.29,672 கோடியில், மூன்றில் ஒரு பங்கு வருமானம் இது. இதுபோல இருக்கின்றன ஆதாயம் தரும் திட்டங்கள்!
தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 96,082 கோடி. இதில் விற்பனை வரி மட்டும் ரூ.72,068 கோடி. 2015-2016 பட்ஜெட்டின் படி டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய மொத்த வரி ரூ.29,672 கோடி. மொத்த விற்பனை வரியில் டாஸ்மாக் பங்கைக் கழித்துவிட்டுக் கணக்கிட்டால், தமிழக அரசின் மொத்த விற்பனை வரி வருவாய் வெறும் ரூ.49,693 கோடி மட்டுமே. அதேசமயம், கிட்டத்தட்ட குஜராத் மாநிலத்தின் விற்பனை வரி வருவாயும் இதுதான் (ரூ.49,800 கோடி). ஆனால், மாநிலத்தின் பிற வரி இனங்களில் இருந்து குஜராத் அரசு கூடுதல் வருவாயை (ரூ.18,616.46 கோடி) பெறுகிறது. எனவே, தமிழகத்தில் விற்பனை வரி மற்றும் மாநில வரி இனங்களின் வசூலிப்பில் சீரமைப்பைக் கொண்டுவந்தால், அரசுக்குக் கூடுதல் வரி வருவாய் நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனால், அரசு அதற்குச் சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.
முதலில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இங்கே விற்பனை வரி முறையாக வசூல் செய்யப்படுகிறதா? அல்லது முறையாகச் செலுத்தப்படுகிறதா? பெரும்பாலும் போலிக் கணக்குகள். அதை எழுதுவதற்கென்றே துறைசார் வல்லுநர்கள். குற்றம் புரிவதற்கு அவர்களுக்குச் சம்பளம். கடந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் ரூ.628 கோடி மதிப்புக்கு வணிக வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது என்கிறது தமிழக அரசு. தவிர, ஏராளமான வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பிரதாயத்துக்காக அரசு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொகை மட்டுமே ஓர் ஆண்டில் இவ்வளவு என்றால், கண்டுபிடிக்க முடியாத தொகை எவ்வளவு இருக்கும்?
நம் சமூகத்தில் வரி ஏய்ப்பு என்பது, சிறிதும் குற்றவுணர்வு இல்லாத ஒரு சாமர்த்தியமான வணிக உத்தியாகிவிட்டது. முழுமையாக மற்றும் நேர்மையாக வரி செலுத்துவது சட்டரீதியான கடமை என்பதைத் தாண்டி, இன்று அது தார்மிகரீதியான பெருமையாக மாறிவிட்டது. ஒருவர் செலுத்தும் வரி என்பது தேசத் தொண்டு செய்வதோ அல்லது தானம் அளிப்பதோ அல்ல. அரசிடமிருந்து அவர் பெறும் சேவைக்குச் செலுத்த வேண்டிய கட்டணம்.
இங்கே வரி ஏய்ப்பு நடப்பது மனசாட்சியுள்ள ஒவ்வொரு விற்பனை வரித் துறை அதிகாரிக்கும் வரியை ஏய்க்கும் ஒவ்வொரு வணிகருக்கும் தெரியும். இதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய விற்பனை வரி வருவாயில் சுமார் 20% வரை குறைகிறது. அதில் 5 முதல் 10% வரை அதிகாரிகள் தொடங்கி, அரசியல் பிரமுகர்கள் வரை ‘கைமாறுகிறது’. இதற்குத் தீர்வு காண விற்பனை வரித் துறையில் அதிரடி மாற்றங்களை, சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். அதற்கு முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும். விற்பனை வரி என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு என்பதைத் தீவிர பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, விற்பனை வரி வசூலிப்பில் முனைப்பைக் காட்டினால் சுமார் 20% கூடுதலாக (ரூ.10,000 கோடி) கிடைக்கும். ஆனால், நாம் அதில் பாதியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட, விற்பனை வரி வருவாயில் மட்டும் ரூ.5,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும்.
விற்பனை வரி தொடர்பாகவே இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம். இதுவரை நாம் மது விற்பனையால் வரும் விற்பனை வரியை மட்டுமே பேசிவருகிறோம். ஆனால், மது என்கிற ஒரு பொருளால் மட்டும்தான் விற்பனை வரி கிடைக்குமா? மற்ற பொருட்களிலிருந்து கிடைக்காதா? என்ன, மதுவிலிருந்து கிடைப்பதைப் போல அதிக வரி கிடைக்காவிட்டாலும் வரியே கிடைக்காமல் போகாது இல்லையா, வாருங்கள், கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.
- டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
(தெளிவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT