Published : 11 Mar 2020 09:33 AM
Last Updated : 11 Mar 2020 09:33 AM
கோவிட் பாதிப்பா இல்லையா என்று எங்கு சோதிக்கின்றனர்?
அனைத்து சர்வதேச விமானப் பயணிகளும் விமான நிலையத்திலேயே வெப்பத் திரையிடல் மூலம் முதலில் சோதிக்கப்படுகின்றனர். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் சோதிக்கின்றனர். பாதிப்புள்ளவர்களைத் தனியாகத் தங்கவைத்துக் கண்காணிக்க, கூடுதல் சிகிச்சைப் பிரிவுகளுக்கான இடங்களை இந்திய ராணுவம் தயார் செய்கிறது. ஜெய்சால்மர் (ராஜஸ்தான்), சூரத்கர் (ராஜஸ்தான்), செகந்திராபாத் (தெலங்கானா), சென்னை (தமிழ்நாடு), கொல்கத்தா (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கூடுதல் சிகிச்சைப் பிரிவுகள் தயாராகிவிட்டன.
இதில் நடைமுறை என்ன?
நாட்டின் 30 விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளும் சோதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறி உள்ளோர் அடுத்தகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிசெய்யப்பட்டால் தனி வார்டுகள் அல்லது சிறப்பு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்.
அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். விமானத்துக்குள்ளேயே கோவிட்-19 தொடர்பான எச்சரிக்கைகள் பயணிகளுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. காய்ச்சல் அறிகுறி, ஜலதோஷம், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருந்தால் அவர்களே தெரிவிக்கும் வகையில் தனிப் படிவங்கள் தரப்படுகின்றன.
சோதனைக்கு உள்ளானவருக்குக் காய்ச்சல் இருந்தால்..?
காய்ச்சல் இருந்தால் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார். அவருடைய காய்ச்சல்
கோவிட்-19 தானா என்று பரிசோதிக்கப்படும். கோவிட்-19 உறுதியானால், எந்த நாட்டிலிருந்து வருகிறார், அவருடன் வந்தவர்கள் யார் என்பது விசாரிக்கப்படும். அவரிடமிருந்து பரிசோதனைகளுக்கு மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்படும். 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரையில் தனியாக வைத்து சிகிச்சை தரப்படும். கோவிட்-19 இருக்கிறதா இல்லையா என்பது ரசாயனப் பரிசோதனைகள் மூலம் 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் தெரிந்துவிடும். இந்த வைரஸ் தொடர்ந்து 14 நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும். நோயை அறிவதில் உலக சுகாதார நிறுவனம் காட்டிய வழிமுறைகளையே இந்தியா கடைப்பிடிக்கிறது.
இந்தியாவுக்குள்ள சவால் என்ன?
எந்தக் கொள்ளை நோயாக இருந்தாலும் அது உள்நாட்டில் வேகமாகப் பரவும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் கூட்டமும், அகற்றப்படாத குப்பைகள், தேங்கிய சாக்கடைகள், மேலும் மேலும் சேரும் குப்பைகள், தும்மும்போதும் இருமும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சுகாதாரத்தைத்கூடக் கடைப்பிடிக்காத மக்கள், திறந்த நிலையிலேயே கடைகளில் வைக்கப்படும் தின்பண்டங்கள், அடிக்கடி கையைக் கழுவுதல் என்ற பழக்கமின்மை, கழுவுவதற்குத் தண்ணீர் இல்லாத பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவுள்ள மனிதர்கள், எதையும் தீவிரமாக எடுக்காமல் விதிப்படி நடக்கட்டும் என்ற அலட்சியம் ஆகியவை இந்தியாவுக்குப் பெரிய சவால்கள்.
யாரெல்லாம் சோதித்துக்கொள்ள வேண்டும்?
குளிருடன் கூடிய காய்ச்சல், தொண்டை வறட்சி, மூக்கு ஒழுகுதல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக சோதனைக்கு உட்பட வேண்டும்.
இந்தியாவில் சோதனைக்கூடங்கள், மருந்துகள் போதுமான அளவில் உள்ளனவா?
புனேயில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் முதல் எல்லா நவீன சோதனைக் கூடங்களும் அரசு மருத்துவமனைகளும் தயாராக உள்ளன. தேவையான மருந்து மட்டுமல்ல, மருந்துத் தயாரிப்பை அதிகப்படுத்துவதற்கான மூலப்பொருட்களும் போதிய அளவு கைவசம் உள்ளன.
- தொகுப்பு: சாரி சீனத்தின் ஹூபேய் மாநிலத்து வூஹான் நகரிலிருந்து உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 'கோவிட்-19’ என்று அழைக்கப்படும் 'கரோனா வைரஸ்' காய்ச்சல் பரவிவிட்டது. வூஹான் நகர மீன் சந்தையிலிருந்து இது பரவத் தொடங்கியது. இது நுரையீரலைத்தான் குறிவைக்கிறது. 'அனைத்து நாடுகளும் கவலைப்படும்படியான பொது சுகாதார நெருக்கடி' என்று இக்காய்ச்சலை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஎச்ஓ) அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில், இந்தியா என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT