Published : 13 Aug 2015 08:53 AM
Last Updated : 13 Aug 2015 08:53 AM
வன்முறையைப் பயன்படுத்தியே பெரும்பாலான பாலியல் காட்சிகள் கட்டமைக்கப்படுகின்றன.
என் நண்பர் ஒருவர் சொன்னார், “இந்திய சினிமாவின் பாடல் காட்சிகளில் ஒலியைக் குறைத்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலானவை ஹார்ட் கோர் போர்னோக்ரபி” என்று. பாலியல் வறட்சியும் ஒடுக்குமுறையும்கொண்ட ஒரு சமூகத்தில், பாலியல் படங்கள் ஒரு அடிப்படைத் தேவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
பொதுவாக, பாலியல் படங்களைப் பார்ப்பதற்கான உரிமை கோருகிறவர்களுடைய வாதம், “தனி அறையில் ஒரு மனிதர் செய்யக்கூடிய காரியங்களைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்பதில் தொடங்கும். அதோடு மட்டுமல்ல, பாலியலைப் பற்றி பல்வேறு மனத்தடைகள் நிலவுகிற ஒரு சமூகத்தில், பாலியல் சார்ந்த உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பாலியல் படங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. அவை பாலியல் உறவுகளை மேம்படுத்துகின்றன, வடிகாலாக இருக்கின்றன என்றும் வாதிடுகிறார்கள். பாலியல் படங்களைப் பண்பாட்டுக் காரணங்களுக்காக எதிர்ப்பவர்கள் இந்தியப் பண்பாட்டில் காமம்; இலக்கியப் பிரதிகளிலும், சிற்பக் கலைகளிலும் மிக வெளிப்படையாக விவாதிக்கப்பட்டிருப்பதை மறந்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. மேலும் பாலியல் படங்கள், பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இவையெல்லாமே ஒரு எல்லை வரைக்கும் உண்மைதான். ஆனால், இது ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. அதன் இன்னொரு பக்கத்தை நாம் பார்க்க மறுப்பதன் மூலமாகத் தனி மனித சுதந்திரத்தை ஒரு சமூகப் பார்வையற்ற நிலையில் முன்வைக்கிறோமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
சர்வதேச வர்த்தகம்
பாலியல் படங்களைப் பார்க்கக்கூடிய யாருக்கும் எழக்கூடிய, எழ வேண்டிய ஒரு தார்மிகமான கேள்வி இருக்கிறது. இந்தப் படங்களில் நடிப்பவர்கள் யார்? இந்தப் படங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளாமல் தனிநபர் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவது அர்த்தமற்றது. பாலியல் படங்களில் நடிக்கக்கூடிய சர்வதேசப் புகழ்பெற்ற நடிகர்களும் நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பல லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய நட்சத்திரங்கள். ஆனால், அவர்களைப் போன்றவர்களால் மட்டும்தான் இந்தப் பாலியல் படங்கள் தயாரிக்கப்படுகின்றனவா? நிச்சயமாக இல்லை. இன்று இணையத்தில் கோடிக்கணக்கான பாலியல் படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சர்வதேச அளவில் அது இன்று மிகப் பெரிய வர்த்தகம். பல்லாயிரம்கோடி ரூபாய் இதில் புழங்குகிறது. இணைய செயல்பாடுகளில் 30%-க்கு மேல் பாலியல் படங்கள் தொடர்பானவை என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பிரம்மாண்டமான தொழிலுக்கான உள்ளடக்கம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?
பாலியல் படங்கள், பாலியல் தொழிலோடும் மனிதக் கடத்தலோடும் நேரடியாக சம்பந்தமுடைய ஒன்று. ஏமாற்றியோ கடத்தப்பட்டோ பாலியல் தொழிலுக்குள் கொண்டுவரப்படும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த பாலியல் படங்களில் நடிக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். குறிப்பாக, மிக இளம்வயதுப் பெண்கள், சிறுமிகள் சார்ந்த பாலியல் படங்கள்தான் வர்த்தகத்தின் பெரும் பகுதியாக இருக்கின்றன. இணையத்தில் பாலியல் படங்களைத் தேடுகிறவர்களில் பெரும்பாலானோர் சிறுவயதினரைக் குறிக்கும் வார்த்தைகளை உள்ளிட்டே தேடுவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் நடிக்க வைக்கப்படும் பெண்கள் வற்புறுத்தியும் மிரட்டப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் போதை மருந்து அளிக்கப்பட்டும் இந்தப் படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இன்னொருபுறம் பாலியல் அடிமைகளாகப் பாலியல் விடுதிகளுக்குக் கொண்டுவரப்படும் இளம் பெண்களும் சிறுமிகளும் அந்தத் தொழிலில் ஈடுபட மறுக்கும்போது, இதுபோன்ற படங்களை மணிக்கணக்கில் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
மிகைப்படுத்திய காட்சிகள்
இது உடலியல் வன்முறைக்கு முந்தைய உளவில் வன்முறை. ஒருபுறம் அந்தப் பெண்கள் பாலியல் தொழிலுக்கு இணங்கி வரும்வரை பலராலும் கூட்டாகப் பாலுறவுக்கு ஆட்படுத்தப்படுவது, இன்னொருபுறம் அதை இயல்பாக அவர்கள் மனதை ஒப்பச்செய்வதற்குப் பாலியல் படங்களைப் பயன்படுத்துவது. மேலும், பாலியல் தொழிலாளிகளைத் தேடி வரும் ஆண்கள் அதீதமான, வன்முறை சார்ந்த பாலியல் படங்களை அவர்களிடம் காட்டி, அதுபோன்ற செயல்களில் ஈடுபடுமாறு அவர்களை வற்புறுத்துகின்றனர். இது மிகப் பெரிய மானுட அவலம் மட்டுமல்ல, எந்த நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாத கொடூரமான குற்றச்செயல். இதைப் பற்றிய தார்மிகக் கேள்விகளை நாம் எழுப்பாமல், அந்தப் படங்களைப் பார்ப்பதற்கான சுதந்திரத்தை மட்டும் நாம் கோர முடியுமா?
பாலியல் படங்களைப் பார்ப்பவர்கள் எத்தகைய உளவியல் விளைவுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது ஒரு சிக்கலான கேள்வி. இதற்கு நாம் பொதுப்படையான பதில்களை அளிக்க முடியாது. ஒருவருடைய உடல்-மன இயல்புகள், அவர் யாருடன் பாலுறவு கொள்கிறார் என்பதைப் பொறுத்து, பாலியல் படங்கள் அவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மாறுபடலாம். சிலருக்கு வெகுசகஜமாக இருக்கக்கூடிய இந்தப் படங்கள், வேறு சிலருக்கு மிகக் கடுமையான பாலியல் சார்ந்த மனநோய்களைக்கூட ஏற்படுத்தலாம். பொதுவாக, பாலியல் படங்களில் காட்டப்படும் காட்சிகள் மிகையானவை. 90% வன்முறையோடு இணைந்தவை.
பாலுறவின் இன்பத்தை வன்முறையோடு இணைப்பது என்பது மிக ஆபத்தான ஒன்று.
இந்த மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகளை அல்லது போலித் தோற்றங்களை நிஜவாழ்க்கையில் முயற்சித்துப் பார்க்கிறவர்கள், பல சமயங்களில் கடும் தோல்வியைச் சந்திக்க நேரிடலாம். ஒரு இயல்பான பாலுறவின் மேல் அவர்கள் ஆர்வமிழந்து போகலாம். மேலும், இந்த வன்முறை சார்ந்த பாலியல் காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கிறவர்கள், சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக குற்றவுணர்வற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். பாலியல் இன்பத்துக்காக வன்முறையைப் பயன்படுத்துவது இயல்பான ஒன்று என்ற மனநிலை தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. பாலுறவில் சமத்துவமும் ஜனநாயகமும் அற்ற இந்தியா போன்ற நாடுகளில், பெண்களின் உடல் ஆண்களால் கடும் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதில் இந்தப் பாலியல் படங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இன்னொரு கொடூரம், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பாலியல் படங்களில் கணிசமான பகுதி, பிறருடைய அந்தரங்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட படங்கள். எல்லாவற்றையும்விடத் தலையாய பிரச்சினை சிறு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள். குழந்தைகள் வாழத் தகுதியற்ற இடமாக நம்முடைய நாடு மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதில் இந்தப் பாலியல் படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
பாலியல் படங்களின் வழியே புழங்கும் பெரும் பணமும் சர்வதேசக் குற்ற வலைப்பின்னலும் இன்று பெரும் அபாயமாக உருவெடுத்திருக்கின்றன. யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் இந்த அபாயத் துக்குப் பலியாகலாம். பாலியல் படங்கள் மனிதக் கடத்தல், கட்டாய பாலியல் தொழில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பிறருடைய அந்தரங்கத்தைத் திருடுவது முதலான மிகக் கொடூரமான குற்றங்களோடு தொடர்புடையதாக இருக்கிறபோது, இதன் வழியாகக் கிடைக்கும் பாலியல் இன்பத்தை நாம் வெறும் தனிநபர் சுதந்திரமாக மட்டுமே பார்க்கப்போகிறோமா? தனிநபர் சுதந்திரம் என்பது, பிற மனிதர்களின் சுதந்திரத்தோடும் பாதுகாப்போடும் கவுரவத்தோடும் தொடர்புடைய ஒன்று இல்லையா? பாலியல் படங்களைத் தடுக்க முடியுமா, முடியாதா என்பதல்ல பிரச்சினை. ஆனால், நான் பாலியல் படங்களைப் பார்க்க மாட்டேன் என்று சொல்வதற்கு ஒழுக்கவியல் சார்ந்த காரணங்களைவிட, மானுட நீதி சார்ந்த காரணங்கள் ஏராளமாக இருக்கின்றன.
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், ‘உயிர்மை’ ஆசிரியர், அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT