Published : 05 Mar 2020 08:19 AM
Last Updated : 05 Mar 2020 08:19 AM
தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கிவிட்டது. மாணவர்கள் இந்தத் தேர்வுக்காக ஓராண்டுக்கும் மேல் தங்களைத் தயார்செய்துகொண்டிருப்பார்கள். என்றாலும், அவர்களோடு பெற்றோர்களுக்கும் சேர்த்து இது சவாலான நாட்கள். இந்த நாட்களை எப்படி எதிர்கொள்வது? நல்ல உடல்-மன நலனோடு தேர்வை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று பரிந்துரைக்கிறார்கள் இரு மருத்துவ நிபுணர்கள்.
கு.கணேசன்- பொது நல மருத்துவர்
1. தேர்வு சமயத்தில் மாணவர்கள் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பெற்றோர்கள்தான் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அவர்கள் சரியான நேரத்தில் போதுமான அளவு சாப்பிடுகிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
2. ஆவியில் அவித்த உணவை உண்பது நல்லது. காலையில் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகள் வயிற்றுக்கு இதமானவை. மதியம் பருப்பு, காய்கறி, தயிர் இருக்க வேண்டும். தேவையான அளவு சாப்பிட வேண்டும்; வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. எளிதில் செரிமானமாகும் உணவே இரவில் முக்கியம்.
3. விழுந்து விழுந்து படிக்கும் பிள்ளைகள் போதுமான அளவு ஓய்வு எடுக்கிறார்களா என்பதையும் பெற்றோர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஆறு மணி நேரத்துக்கும் குறையாமல் தூங்குவது அவசியம்.
4. இப்போதுள்ள பிள்ளைகள் தண்ணீர் அதிகம் குடிப்பதில்லை. அவர்களாகக் குடிக்காவிட்டாலும் பெற்றோர்கள் அவர்களுக்குத் தண்ணீர் குடிக்க நினைவூட்ட வேண்டும். காய்ச்சி ஆறவைத்த தண்ணீராக இருப்பது அவசியம்.
5. விழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகப் பல மாணவர்களும் டீ, காபியை மண்டுவார்கள். டீ, காபி அவசியத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
6. உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், உடலுக்கு நல்ல ஊட்டத்தைத் தருவதற்கும் மோர், பழச்சாறு, சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
7. மென்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. சைவ-அசைவ சூப் குடிக்கலாம். சிப்ஸைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
8. கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள். வறுத்த, பொரித்த இறைச்சியைவிட குழம்பில் இட்ட இறைச்சி உணவைச் சாப்பிடுவது நல்லது. மீன் உணவும் நல்லது.
9. ஹோட்டல்கள், கையேந்தி பவன்கள் போன்றவற்றுக்குப் போய் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, வீட்டு உணவையே சாப்பிடுவது அவசியம்.
10. இந்தச் சமயத்தில் தலைவலி, காய்ச்சல் வருவது இயல்புதான். ஆரம்பத்திலேயே மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு அவர் தரும் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
ஜி.ராமானுஜம்- மனநல மருத்துவர்
1. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். படிக்கும் நேரத்தின் அளவு, கவனிக்கும் திறன், நினைவுத் திறன் ஒவ்வொரு பிள்ளைக்கும் மாறுபடும். சிலருக்கு ஒருசில பாடங்கள்தான் நன்றாகப் படிக்கவரும். ஆகவே, “நன்றாகப் படிக்கிறான் பார்! அவனை விட அதிகமாக மார்க் எடுக்க வேண்டும்” என்றெல்லாம் ஒப்பீடு செய்யக் கூடாது.
2. நம் பிள்ளைகளுக்கு நாம்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொலைக்காட்சி, செல்பேசி பார்க்கக் கூடாது என்று அவர்களைச் சொல்லிவிட்டு நாம் அவற்றில் மூழ்கக் கூடாது.
3. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் பேரிழப்பு விளையாட்டுதான். உண்மையில், விளையாட்டுதான் உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும்; நினைவுத் திறனையும் பெருக்கும். தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு அரை மணி நேரம் விளையாடிவிட்டு வந்தால் பாடம் நன்றாகப் பதியும். கூட விளையாட ஆள் இல்லை என்றால் சைக்கிள் எடுத்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வரும்படி பெற்றோர்களே சொல்லலாம்.
4. தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மிகப் பெரிய எதிரி பதற்றம். இதனால், 90 மதிப்பெண் எடுக்க வேண்டிய இடத்தில் 60, 70 மதிப்பெண் கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படும். நன்றாகப் படித்ததுகூட நினைவுக்கு வராது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். மதிப்பெண்ணை இலக்காகக் கொள்ளாமல், ‘நான் ரசித்துப் படித்ததை நன்றாக எழுதுவேன்’ என்ற தன்னம்பிக்கை கொண்டு தேர்வை எழுதினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த மனநிலையைப் பெற்றோர்கள்தான் உருவாக்க வேண்டும்.
5. மனத்தில் பதித்தல், அதைச் சேமித்துவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல்; இது ஒரு நல்ல உத்தி.
6. தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கம் இல்லை என்றால் குழப்பம் வரும். நினைவுத் திறன் பாதிக்கப்படும். விடாமல் படிக்கும்போது ஒரு மணி நேரம் தூங்கிவிட்டுப் படித்தால் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும்.
7. அடுத்த பையனைப் பார்த்துப் பயப்படக் கூடாது. அவர்களுக்கு இருக்கும் திறமை நமக்கும் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்க வேண்டும்.
8. துரித உணவு நினைவுத் திறனைப் பாதிக்கும். அப்படிச் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் குறையும். பரோட்டா போன்ற மைதாவால் ஆன உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதும் நல்லது; செரிமானக் கோளாறை உண்டாக்கும் உணவைக் கூடிய மட்டும் தவிர்க்கலாம்.
9. அளவுக்கு அதிகமாகப் படித்துத் திணித்துக்கொள்வதைவிட படித்ததை ஒருங்கிணைத்து எவ்வளவு அழகாக எழுதுகிறோம் என்பது நல்ல மதிப்பெண்களுக்கு உதவும்.
10. இந்தத் தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பது இதன் அர்த்தமல்ல. மதிப்பெண்ணை விடவும் வாழ்க்கை முக்கியம் என்பதே இதன் அர்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT