Published : 02 Mar 2020 08:01 AM
Last Updated : 02 Mar 2020 08:01 AM

ஒரு ஜெர்மானிய அரசியல் கதை: மெர்க்கெல் எதிர்காலம் என்னவாகும்?

ஜோசென் பிட்னர்

ஜெர்மனியின் மரபியர்கள் (கன்சர்வேடிவ்கள்) இப்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தக் குழப்பம் அவர்களே உருவாக்கிக்கொண்டது. பிப்ரவரி 5-ம் நாள் ‘கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் (சிடியு)’ (ஆளுங்கட்சி) கட்சி, மிகுந்த வலதுசாரியான ‘ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மனி (ஏஎஃப்டி)’ கட்சியுடன் இணைந்து கிழக்கு மாநிலமான துரிங்கியாவுக்குப் புதிய ஆளுநரை நியமிக்க வாக்களித்தது. உடனடியாக, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து பலத்த ஆட்சேபக் குரல்கள் எழுந்தன. புதிதாகத் தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதிமொழியோடு ஆளுநர் பதவி விலகிவிட்டார். அரசியல்ரீதியாகப் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. சிடியு கட்சியின் தலைவரும், பிரதமர் ஏஞ்செலா மார்க்கலுக்குப் பிறகு அப்பதவியை வகிக்கக்கூடியவர் என்று கருதப்பட்டவருமான அனக்ரெட் கிராம்ப் காரன்பாவர் பதவி விலகிவிட்டார். ஜெர்மனியின் மரபியர்கள் மத்தியில் திடீரென சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டுவிட்டன.

இப்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு தெளிவுபெற, எர்ன்ஸ்ட் பிளாஸ் 1935-ல் தெரிவித்த ஆய்வுக் கருத்தை மரபியர்கள் மீண்டும் வாசிப்பது அவசியம். “வெவ்வேறு சமூகக் குழுக்கள் காலத்தை வெவ்வேறு விதமாக உணர்கின்றன. முதலீட்டியம் வேகமாக மாறிக்கொண்டும், இப்போதுள்ள உற்பத்தி முறைகளை மாற்றிக்கொள்வதாகவும் இருக்கிறது. வேலை கிடைக்காத இளைஞர்களும், மரபு சார்ந்த உற்பத்தி முறையை ஆதரிக்கும் விவசாயிகளும், இப்போதுள்ள வாழ்வாதாரம் நிரந்தரமில்லை என்ற நிச்சயமற்ற நிலையில் வாழும் மத்தியதர வர்க்கமும் தனித்துவமான நிகழ்காலத்திலேயே வாழ்கின்றனர். தங்களுடைய சொந்தப் பழைய நினைவுகள், நம்பிக்கைகள், அச்சங்கள் ஆகியவற்றுடன் ஒவ்வொரு சமூகமும் வாழ்கிறது. ஒவ்வொரு குழுவின் அனுபவமும் அவற்றினுடைய உண்மையான இருப்புக்கும், உலகாயத வரம்புகளுக்கும் ஒட்டியே இருக்கின்றன. ஆனால், அவை ஒன்று இன்னொன்றோடு முற்றாக இயைந்து செயல்படக்கூடியவை அல்ல. இது ஒத்திசைவாக இல்லாதவற்றின் ஒத்திசைவு” என்கிறார் பிளாஸ். இதுதான் வெய்மார் குடியரசை (பழைய ஜெர்மனி 1918-1933) வீழ்த்தியது.

புதிய சொல்லாடல்கள்

அவர் கண்ட ஆய்வு முடிவு, ‘முதலீட்டியம்’ என்ற வார்த்தைக்குப் பதில் ‘உலகமயமாக்கல்’ என்பதைச் சேருங்கள், ‘வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்’ என்பதற்குப் பதில் ‘2000-வது ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள்’ என்று சேர்த்துக்கொள்ளுங்கள், ‘விவசாயிகள்’ என்பதற்குப் பதில் ‘முந்தைய கிழக்கு ஜெர்மனியில் வசித்தவர்கள்’ என்று நிரப்பிக்கொள்ளுங்கள் என்கிறது. 85 ஆண்டுகளுக்கு முன்னால் பிளாஸ் எந்தக் காட்சியைச் சித்தரித்தாரோ, அது அப்படியே மீண்டும் திரும்பியிருப்பதைக் காணலாம். ஜெர்மனியில் வெவ்வேறு சமூகக் குழுவினர் இப்போது வெவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்துவருகின்றனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பைக் கருத்தியல் தீவிரவாதிகளிடம் விடக் கூடாது என்பதை 1930-களில் பெற்ற அனுபவங்களிலிருந்து மரபியர்கள் மறக்கவில்லை என்றே சென்ற மாதத் தொடக்கம் வரை நினைக்க வைத்தனர். ஏஎஃப்டி என்ற வலதுசாரிக் கட்சியுடன் சிடியு கட்சி கைகோத்ததும், கட்சித் தலைமைப் பதவியிலிருந்து கிராம்ப் காரன்பாவர் விலகியதும் அந்த நினைப்புகளை வலுவிழக்கச் செய்துவிட்டன. ஜெர்மனியை சிடியுவால் மீண்டும் ஒருங்கிணைத்து ஒற்றுமையாகச் செயல்பட வைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

அப்படிச் செய்வதாக இருந்தால், இன்றைய உரசல்களுக்கு ஆணிவேர் எது என்று ஆழ்ந்து ஆராய வேண்டும். நாஜிகள் கையாண்ட பயங்கர வழிமுறைகளால் ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு பின்னர் உருவான மேற்கு ஜெர்மனியானது உலக அரங்கில் தனி அடையாளம் பெற்றது. தேசியம் கடந்ததாகவும், ஐரோப்பாவுக்கு உற்ற நண்பனாகவும், பன்மைத்துவக் கலாச்சாரத்தை ஆதரிப்பதாகவும், வேறு நாடுகளிலிருந்து வரும் அகதிகள் குடியேறத் திறந்த மனதுடன் வரவேற்கும் நாடாகவும் வளர்ந்தது. ஐரோப்பியக் கண்டத்துக்கு நாஜிகள் செய்த தீமைகளுக்காகவும், உலக அளவில் ஏற்பட்ட அவப்பெயரைக் களையவும் நாம் நன்றாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெர்மானிய அரசும் மக்களில் பெரும்பாலானவர்களும் நினைத்தனர்.

ஆனால், இந்த அடையாளப்படுத்தல் நடைமுறையில், முந்தைய கிழக்கு ஜெர்மானிய மாநிலங்கள் விலக்கியே வைக்கப்பட்டிருந்தன. லீப்சிக் - டிரெஸ்டென் நகரங்களின் புரட்சிக்காரர்கள் காட்டிய கருணையும் நெஞ்சுரமும் 1989-ல் இரண்டு ஜெர்மனிகளும் இணைய வழிவகுத்தன. அதேசமயம், இரு வேறுபட்ட சிந்தனைகளின் மோதலாகவும் அது இருந்தது. ‘இரும்புத் திரைக்கு அப்பால்தான் பாசிஸ்ட்டுகள் வாழ்கின்றனர்’ என்று கிழக்கு ஜெர்மனி மக்களுக்கு ஆண்டுக்கணக்கில் போதிக்கப்பட்டது. இரண்டாவது உலகப் போருக்காகவும், பிறகு நடந்த மாபெரும் இனப் படுகொலைகளுக்காகவும் மேற்கு ஜெர்மானியத் தொழிலதிபர்கள் தார்மீகப் பொறுப்பேற்றனர். போருக்குப் பிந்தைய காலத்தில் கிழக்கு ஜெர்மனியில் வசித்தவர்களின் அனுபவங்களோ வெவ்வேறு விதமானவை. 1968-ல் மக்களுக்கு அதிகாரமளிக்கும் இயக்கம் நடந்தபோது கிழக்கு ஜெர்மனியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அங்கே செல்வமும் வளரவில்லை. மற்றவர்களைக் குடியேற அனுமதிப்பதும் காலப்போக்கில்தான் தொடங்கியது.

வேற்றுமைகள் தொடர்ந்தன

1989 இணைப்புக்குப் பிறகும் இரண்டு பகுதிகளிலும் வாழ்ந்தவர்களிடையே மனோரீதியான வேற்றுமைகள் தொடர்ந்தன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எல்லைகளைத் திறந்துவிட்டதால் ஜெர்மனியின் மேற்கு, கிழக்கு இரண்டிலும் வேலையிழப்பு உணரப்பட்டது. 1989 முதல் 1999 வரையில் முந்தைய கிழக்கு ஜெர்மனிப் பகுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டு மடங்காக உயர்ந்தது. வீடமைப்பு உள்ளிட்ட துறைகளில் மேற்கு ஜெர்மானியர்கள் பெரும் எண்ணிக்கையில் புகுந்து தொழில் செய்தபோது அவர்களுடைய ஆதிக்கத்தை கிழக்கு ஜெர்மானியர்கள் உணர்ந்தனர். சிலர் அதைக் காலனியாக்கம் என்றுகூட வர்ணித்தனர். 2015 முதல் ஐரோப்பிய அகதிகள் அதிக எண்ணிக்கையில் ஜெர்மனிக்கு வந்தபோது, ‘உலகமயமாக்கலுடன் நம்முடைய சமூகம் ரகசிய சந்திப்பில் இருக்கிறது’ என்று மேற்கு ஜெர்மானியர்கள் அதைக் கேலியாகத் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இந்த அனுபவம் எங்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டது என்று கிழக்கு ஜெர்மானியர்கள் அவர்களுக்குப் பதிலளித்தனர்.

இதன் விளைவாக, தங்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும், தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாகவும் கிழக்கு ஜெர்மனியினர் கருதத் தொடங்கினர். இரண்டு ஜெர்மனிகளும் சேர்ந்த பிறகு வலைப்பின்னல்போல சமூகங்கள் இணைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கூடி வாழ முடியாமல் சிக்கலான சமூகமாகிவிட்டதாக இப்போது உணர்கின்றனர். தேசிய லட்சியத்துக்காக உழைக்கும் ஒற்றுமைமிக்க மக்களாக இல்லாமல், உலகமயப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய பன்மைத்துவ மக்கள்திரளாக மாறிவிட்டோம் என்று நினைக்கின்றனர் கிழக்கு ஜெர்மானியர்கள்.

சிரியா போர் காரணமாக சொந்த ஊரைவிட்டு வரும் அகதிகள் ஜெர்மனிக்கு வரலாம் என்று பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் 2015-ல் அறிவித்தார். அது வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க கணமாக இருந்தது. மேற்கில் இருப்பவர்களைவிட நம் பாதுகாப்பு, கவலைகள் குறித்து அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இவை காட்டுகின்றன என்று கிழக்கு ஜெர்மானியர்கள் கருதினர். அகதிகளை வரவேற்கும் அறிவிப்பை அதற்குச் சான்றாகக் கருதினர். அதிலிருந்து ஏஎஃப்டி கட்சிக்கு ஆதரவு பெருகியது. ஜெர்மனியின் கிழக்கில் உள்ள மூன்று மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு 25% வாக்குகள் கிடைத்தன. அந்த மூன்று மாநிலங்களிலும் அதுதான் இப்போது இரண்டாவது பெரிய கட்சி. ஏஎஃப்டி கட்சியின் வளர்ச்சிக்கு கிழக்கு - மேற்கு பிளவு மட்டும் காரணமில்லை; வளர்ந்துவரும் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும், சிடியு போன்ற பழைய கட்சிக்கும் இடையே நிலவும் மாறுபட்ட சிந்தனைகளும் லட்சியங்களும்கூட காரணம்.

தன் சிறு வயதில் ஜெர்மனியின் கிழக்கில் வளர்ந்த மெர்க்கெல்லுக்கு ஏன் கிழக்கு ஜெர்மானியர்கள் நினைப்பது புரியவில்லை என்று வியப்பு ஏற்படுகிறது. மெர்க்கெல் மிகவும் புத்திசாலி. விடுதலை என்பதைத் தங்கள் முன்னேற்றத்துக்குக் கிடைத்த வாய்ப்பு என்று கருதி அந்த முயற்சியில் இறங்காத கிழக்கு ஜெர்மானியர்கள் மீது அவருக்கு அனுதாபமில்லை. மரபுகளைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற கருத்துள்ளவர் என்றாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மாற்ற சுற்றுச்சூழலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் கிரீன்ஸ் கட்சியினருடன் நெருங்குகிறார். மேற்கு ஜெர்மனியில் உள்ள பெரும்பாலானவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சி மிக்கவர்கள், கலாச்சாரரீதியாகத் திறந்த மனதுடன் இருப்பவர்கள்.

கட்சிக்காரர்களுக்கு சங்கடம்

மெர்க்கெல்லின் 14 ஆண்டுக் கால ஆட்சிக்குப் பிறகு சிடியு கட்சிக்கு இப்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் பெர்லினிலிருந்து வரும் கட்சித் தலைவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்கும்போது உள்ளூர்க் கிளை நிர்வாகிகள் வந்து, ‘கிரீன்ஸ் கட்சிக்காரர்களுடன் நெருங்கிப் பேசாதீர்கள், அது மேலும் பல வாக்காளர்களை ஏஎஃப்டி கட்சியை நோக்கித் தள்ளிவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள். மேற்கு நோக்கிப் பயணிக்கும்போது, ‘ஏஎஃப்டி கட்சிக்காரர்களுடன் ரொம்பவும் இழையாதீர்கள், நம்முடைய ஆதரவாளர்கள் கோபித்துக்கொண்டு கிரீன்ஸ் கட்சியை நோக்கிப் போய்விடுவார்கள்’ என்று எச்சரிக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பதுதான். இடது, அதி தீவிர வலது ஆகிய கட்சிகளைச் சாராமல் வெற்றி பெற என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய நிலை ஜெர்மனியின் மரபியர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஏஞ்செலா மெர்க்கெல் செய்த தவறுகளை வெளிப்படையாக விவாதிப்பதன் மூலம்தான் மரபியக் கட்சி தன்னை மறுவரையறுத்துக்கொள்ள முடியும். ஜெர்மனிக்கு உள்ளேயே ஒற்றுமையின்மை வளர்ந்துவருவதை அவர் புறக்கணித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அவர் அரசியல்ரீதியாக மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இல்லை என்பதுதான். இது அவருடைய மிகப் பெரிய குறைபாடு. வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சமூகச் சூழலில் பொறுப்புள்ள அரசியல் தலைவர் நியாயமாகவும் திட நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். ஏஎஃப்டி என்ற வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவு தரும் வாக்காளர்களிடம் இப்படிப்பட்ட தீவிர வலதுசாரிக் கட்சிகளை ஆதரிக்காதீர்கள் என்று கண்டிப்புடன் அவர் கூறியிருக்க வேண்டும். கிரீன்ஸ் கட்சியை ஆதரிப்பவர்களிடமும், தொழில் வணிகத்துக்கு ஆதரவான அரசை ஆதரியுங்கள், நாங்களும் பசுமையைக் காக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்கள்தான், எதற்கு இதற்கென்று தனிக் கட்சி என்று கூறியிருக்க வேண்டும். இரண்டையும் அவர் செய்யத் தவறிவிட்டார்.

அடுத்த ஆண்டு ஜெர்மானிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மெர்க்கெல்லின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. சிடியு கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியின் குறைபாடுகளைச் சீர்செய்ய வேண்டும். தீவிர வலதுசாரி, இடதுசாரிகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டும். பழமையைக் காப்பதே தவறு என்று இருதரப்பாரும் சொல்கின்றனர்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x