Published : 26 Aug 2015 08:32 AM
Last Updated : 26 Aug 2015 08:32 AM
20-ம் நூற்றாண்டின் அற்புதமான மனிதர்களில் ஒருவர் தெரசா.
‘‘ஒரு நாள் மாலை… வீதியோரத்தில் நான்கு பேரைக் கண்டோம். அவர்களில் ஒரு பெண் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தார். ‘அந்தப் பெண்ணை இல்லத்துக்கு பாதுகாப்பாக நான் அழைத்துச் செல்கிறேன். நீங்கள் மற்ற மூவரை கவனித்துக்கொள்ளுங்கள்’ என என்னுடன் வந்த கன்னியாஸ்திரீகளிடம் சொன்னேன். அந்தப் பெண்ணைப் பத்திரமாக அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தினேன். அப்போது அவர் முகத்தில் அழகான புன்னகை மலர்ந்தது. என் கையைப் பிடித்துக்கொண்டு ‘நன்றி’ எனும் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு இறந்துபோனார்.அந்தச் சம்பவம் என் ஆழ்மனதைக் கிளறியது. அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனக் கேட்டுப்பார்த்தேன். உடனடி பதில் கிடைத்தது. ‘எனக்குப் பசிக்கிறது, நான் செத்துக்கொண்டிருக்கிறேன், குளிர்கிறது, வலிக்கிறது’இப்படி ஏதாவதொன்றைச் சொல்லி என் பக்கம் கவனம் திருப்ப நிச்சயம் முயற்சித்திருப்பேன். ஆனால், அந்தப் பெண் எனக்கு அவருடைய அன்பைக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு மரணித்தார். ஏழை மக்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களால் நமக்கு அழகான பல விஷயங்களைச் சொல்லித்தர முடியும்’’
- 1979 டிசம்பர் 10-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அன்னை தெரசா ஆற்றிய உரை இது.
வாழ்வின் விளிம்பில் தத்தளித்தவர்களை, தொழு நோயாளிகளை, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வர்களை, முன்னாள் பாலியல் தொழிலாளர்களை, அகதிகளை, மனநிலை பாதிக்கப்பட்டவர்களை, அநாதை மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை, முதியோர்களை அரவணைத்தவர் அன்னை தெரசா.
எங்கிருந்தோ வந்தார்
மாசிடோனியாவில் ஸ்காபியே என்னும் சிற்றூரில் (இன்றைய தலைநகரம்) 1910 ஆகஸ்ட் 26-ல் பிறந்தார் ஆக்னஸ் கான்ஸா போஜாயூ (பின்னாளில் அன்னை தெரசா). அல்பேனியாவின் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய தந்தையைத் தன் எட்டு வயதில் இழந்தார். ஏழ்மையான சூழலில் பல சிக்கல்களுக்கு இடையில் மகளுக்குத் தொண்டாற்றும் உணர்வை ஊட்டி வளர்த்தார் அவருடைய தாய். கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பு முடித்து 18 வயதை எட்டியபோது, கன்னியாஸ்திரீயாக முடிவெடுத்தார். 1928-ல் அயர்லாந்து சென்று தேவாலயப் பணிகளில் ஈடுபட்டபோது, சகோதரி மேரி தெரசா எனும் பெயர் சூட்டப்பட்டார். அடுத்த ஆண்டு மேற்படிப்பு மற்றும் துறவறப் பயிற்சிக்காக டார்ஜிலிங் அனுப்பப்பட்டார். 1931-ல் கொல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியின் பூகோளம் மற்றும் வரலாற்று ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய வங்காளக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்து வறுமையை ஒழித்துவிடலாம் என இளம் தெரசா அப்போது நம்பினார். அர்ப்பணிப்போடு தன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்து 1944-ல் அப்பள்ளியின் முதல்வரானார்.
நீ யார்?
சலனமற்ற நீரோடைபோல ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையை 1946 செப்டம்பர் 10 புரட்டிப்போட்டது. கொல்கத்தாவில் ரயில் ஏறியவர் இமயமலை அடிவாரத்தில் பயணித்தபோது மனதுக்குள் ஒரு குரல் ஒலித்தது. கான்வென்ட் பள்ளியில் சவுகரியமாகப் பாடம் கற்பிக்கத்தான் மாசிடோனியாவிலிருந்து இந்தியா வந்தோமா எனும் கேள்வி மின்னல்போலப் பாய்ந்தது. நலிவடைந்த மக்களுக்குப் பணி செய்துகிடப்பதே தன் வாழ்க்கையின் அர்த்தம் எனத் தோன்றியது. பள்ளி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும்படி முறையிட்டார்.
1948 ஆகஸ்ட் மாதம் கான்வென்ட் கன்னியாஸ்திரீ உடை துறந்து வெள்ளை-நீலம் இழையோடும் சேலைதான் இனி தன் உடை எனத் தீர்மானித்து அணிந்தார். கான்வென்ட்டை விட்டு வெளியேறி கொல்கத்தா வீதிகளில் செய்வதறியாது உலாவினார். 1942-43-ல் வங்காளப் பஞ்சம் தாக்கிய மக்களின் வாழ்வாதாரமற்ற நிலையை நேரடியாகக் கண்டார். போதாததற்கு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் வேர் இழந்த லட்சக்கணக்கான மக்களின் துயர்மிகு வாழ்வு உலுக்கியது. எங்கு பார்த்தாலும் நோய், ஆதரவற்ற நிலை, மரணம். அந்தத் தருணத்தில் தன் வாழ்வின் இலக்கு தெரசாவுக்குத் துல்லியமாகப் புரிந்தது. ஆறு மாதங்கள் அடிப்படை மருத்துவப் பயிற்சி பெற்ற பின்னர் கொல்கத்தா குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். ஆனால், கையில் பணம் இல்லை. உதவ, இணைந்து களத்தில் இறங்கவும் எவரும் இல்லை. இருப்பினும் அவருடைய அளப்பரிய பங்களிப்பான ‘தி மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ அறக்கட்டளையை நிறுவத் தூண்டிய முக்கியச் சம்பவம் வேறு.
“1948-ல் ஒரு நாள்… உயிரிழந்துகொண்டிருந்த ஒரு மனிதனைத் தெருவில் கண்டு உடனடியாக அவரைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார் தெரசா. ஆனால், அவர் இறக்கும் தறுவாயில் இருந்ததால், ‘ஒரு படுக்கையை வீணாக்க விரும்பவில்லை’ என்ற பதிலோடு அனுமதி மறுக்கப்பட்டது. சினம் கொண்ட தெரசா மருத்துவமனை வாசலில் போராட்டத்தில் இறங்கினார். வேறுவழியின்றி மருத்துவமனை அவரை அனுமதித்தது. ஆனால், சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தனி ஒரு இடத்தை உருவாக்கி ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமும் சாவின்பிடியில் இருப்பவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் கண்ணியமான மரணத்தைப் பெற்றுத்தரவும் முடிவெடுத்தார்” என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியும் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான நவீன் பி.சாவ்லா. பலரிடம் பிச்சை கேட்டு, ஒருவழியாக உள்ளூர் அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்றுச் சொற்ப நன்கொடை திரட்டி திறந்தவெளிப் பள்ளி ஒன்றையும் ஆதரவற்றவர்களுக்குப் பாதுகாப்பு இல்லம் ஒன்றையும் கொல்கத்தாவில் நிறுவினார்.
தாயன்றி வேறில்லை
1950-ல் வாட்டிகனின் ஒப்புதல் பெற்று, புனிதமேரி பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 13 பேர் கொண்ட குழுவோடு ‘தி மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ நிறுவினார். 10 ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமிருந்து பெருத்த ஆதரவும் நன்கொடையும் வந்து குவிந்தன. தன்னைத் தேடிவந்த பணம் கொண்டு தொழுநோயாளிகள் குடியிருப்பு, அநாதை இல்லம், பல நூறு அடிப்படை மருத்துவ உதவி மையங்களை நிறுவினார் தெரசா. முறைப்படுத்தப்பட்ட மருத்துவமனையை நிறுவினால், அங்கு தன்னார்வத்தில் தொண்டுபுரிய அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாது. சம்பளத்துக்குத் தாதிகள் நியமிக்கப்பட்டால் சிகிச்சைக்குச் செலவு அதிகமாகும். பின்பு தெருவோரம் சிதறிக்கிடப்பவர்களை யார் பராமரிப்பது என்ற எண்ணத்தில்தான் அன்னை தெரசா அடிப்படை மருத்துவச் சேவை மையங்களை மட்டுமே உருவாக்கினார். இப்படி அயராது பாடுபட்டுத் தன் இறப்புக்கு முன்னர் 4,000 அறக்கட்டளைகளை 123 நாடுகளில் நிறுவினார். அதேபோல 13 பேருடன் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இன்று 1 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வ ஊழியர்கள் இடைவிடாது செயல்படுகிறார்கள்.
இன்றைக்கும் தெரசா மீது புழுதி வாரித் தூற்றுவோர் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும், தெரசாவின் மறைவுக்குப் பின்னரும் அவர் உருவாக்கிய அமைப்புகள் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கின்றன என்பதுமே அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில். 20-ம் நூற்றாண்டின் அற்புதமான மனிதரில் ஒருவர் அவர். விளிம்புநிலை மனிதர்களுக்கு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான அன்பையும் சேவையையும் அதற்கான உந்துதலையும் அவருடைய பெயர் என்றும் கொடுத்துக்கொண்டேயிருக்கும்!
ம.சுசித்ரா
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT