Published : 31 Aug 2015 09:13 AM
Last Updated : 31 Aug 2015 09:13 AM
நான் ‘இந்தியும் இந்தியாவும்’ கட்டுரையில் சொல்லியவை இவை:
1. இந்தித் திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
2. மத்திய அரசு அலுவலகங்களிலேயே - குறிப்பாக டெல்லியில் - இந்தியைத் திணிக்க முடியவில்லை.
3. மாநிலங்களில் பொதுவாக நம்மை எரிச்சல்பட வைப்பது யாருக்கும் பயன்படாத இந்தித் திணிப்பு; மாநிலத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழி புழங்காதது; பல மத்திய அரசுத் தேர்வுகளில் தாய்மொழியில் எழுத முடியாத நிலைமை.
4. இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகளைத் தொழில்நுட்பம் கொடுக்க முடியும். மத்திய அரசும் 1968 நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் இந்தக் குறைகளை நீக்க முடியும்.
5. 22 மொழிகளை ஆட்சிமொழிகள் ஆக்குவது போகாத ஊருக்கு வழி தேடுவது. ஏனென்றால், அரசியல் சட்டத்திருத்தத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்குத் தேவையான இரண்டில் மூன்று பங்கு ஒப்புதல்களைப் பெறுவது நடைமுறைக்கு ஒவ்வாதது.
6. 22 மொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மாநிலங்களில் பேசப்படும் மொழிகளை, மாநிலங்களில் ஆட்சிமொழிகளாக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் வைக்கக் கூடாது?
எனது கட்டுரையைத் தொடர்ந்து மூன்று கட்டுரைகள் வந்திருக்கின்றன. முதல் மற்றும் மூன்றாம் கருத்துகளுக்கு மறுகருத்துகள் இல்லை. இரண்டாவது மற்றும் நாலாவது கருத்துகளைப் பற்றி மூவரும் பேசவில்லை. கடைசி இரு கருத்துகளுக்கு எதிராக மட்டும் ஆழி செந்தில் நாதனும் மணியரசனும் எழுதியிருக்கிறார்கள். புவியரசன் ஆட்சிமொழிச் சிக்கல் இதுவரை முறையாக அணுகப்பட வில்லை என்று பொதுவாக எழுதியிருக்கிறார்.
மறுகருத்துகள் என்ன?
செந்தில்நாதன்
22 மொழிகளும் ஆட்சிமொழியாக வேண்டும் என்ற ட்விட்டர் பரப்புரைக்கு இந்தி பேசாத மாநிலங்களில் பெருத்த ஆதரவு கிடைத்திருக்கிறது என்று இவர் சொல்கிறார். உண்மை என்ன? 27 ஜூலையிலிருந்து 27 ஆகஸ்ட் வரை 26,000 பேர் பரப்புரை செய்திருக்கி றார்கள். சுதந்திர தினத்தன்றும் 14 ஆகஸ்ட் அன்றும் சில அமைப்புகள் முயன்று வேலை செய்ததால் சுமார் 20,000 பரப்புரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 95% சில நூறு பேர்களால் திரும்பத் திரும்பப் பரப்புரை செய்யப்பட்டன என்று எனக்கு இந்தப் புள்ளிவிவரங்களை அளித்த நண்பர் சொல்கிறார். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. 10,000 பேர் தனியாகப் பரப்புரை செய்தார்கள் என்று எடுத்துக்கொண்டாலும், இது எதிர்ப்புப் புயல் ஆகுமா?
22 மொழிகளும் ஆட்சிமொழி ஆவதைப் பற்றி எனக்குக் குழப்பம் இருக்கிறது என்கிறார். எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. ஆட்சிமொழி நமது நாட்டில் மூன்று தகவல் பரிமாற்றத் தளங்களில் இயங்குகிறது. முதலாவது, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே. இரண்டாவது, மத்திய அரசு அலுவலகங்களுக்கு இடையே. மூன்றாவது, மத்திய அரசுக்கும் மக்களுக்கும் இடையே.
இதில் முதல் தளப் பரிமாற்றங்களில் எந்தப் பெரிய சிக்கலும் இல்லை. இரண்டாவது தளப் பரிமாற்றங்களிலும் இதே நிலைதான். மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலமே புழங்குகிறது. டெல்லியிலும் ஆங்கிலம்தான். மாநிலத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழியும் புழங்குவதற்குத் தொழில்நுட்பத்தால் வழிவகை செய்ய முடியும். ஆனால், இதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மத்திய அரசும் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களும். நானோ, செந்தில்நாதனோ அல்ல.
மூன்றாவது தளம் முக்கியமான தளம்
மிக அழகாக செந்தில்நாதன் சொல்கிறார், ‘நான் எனது அரசிடம் என் மொழியில் பேச வேண்டும். எனது அரசு என்னிடம் என் மொழியில் பேச வேண்டும்’. அவரது கூற்றோடு நான் முழுவதுமாக உடன்படுகிறேன். இதற்கான எல்லா வழிமுறைகளையும் மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செய்ய வேண்டும். எளிதாகச் செய்ய முடியும். ஆனால், இதற்கு 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக வேண்டிய அவசியமே இல்லை. என் மொழியில் நான் பேச வேண்டும் என்பதற்கும் இந்தியில் இங்கு பேசவே கூடாது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
மாநிலங்களில் புழங்கும் எல்லா மொழிகளுக்கும் உரிமைகள் வேண்டும் என்று சொல்லும் இவர், போராட்டத்தைத் தமிழகத்தில் ஏன் தொடங்கக் கூடாது? மாநிலத்தோடுதான் ஏழை மக்களுக்கு அதிகம் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கு அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை. அரசியல் சட்டம் 345-ம் பிரிவின்படி மாநில அரசே ஆட்சி மொழிகளை அறிவிக்கலாம். ஜார்க்கண்ட் மாநிலம் ஒரியா மற்றும் ஐந்து வேறு மொழிகளை இரண்டாவது ஆட்சி மொழிகளாக அறிவித்திருக்கிறது.
மணியரசன்
இவர் தமிழ் மட்டும்தான் தமிழகத்தில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்கிறார். இவரை முதலில் செந்தில்நாதன் மாற்றட்டும். மேலும், இவர் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலிருந்து பேசுகிறார். நான் முற்றிலும் வேறுபடுகிறேன். எனது தேசம் இந்தியா. எனது தாய்மொழி தமிழ். இவர் தேசிய இனங்கள் சேர்ந்துதான் இந்தியா பிறந்தது என்கிறார்.
இவருக்கு அம்பேத்கர் சரியான பதிலைத் தருகிறார்: “(இந்தியக்) கூட்டமைப்பு (federation) மாநிலங்கள் கூட்டமைப்பு ஒன்றில் சேர்கிறோம் என்று செய்துகொண்ட ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு அல்ல; அல்லது கூட்டமைப்பிலிருந்து பிரிவதற்கு உரிமை கிடையாது என்ற ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு அல்ல. இந்தக் கூட்டமைப்பு ஒன்றியம் (union) என்றால், அது அழிக்க முடியாதது. நாடும் மக்களும் பல மாநிலங்களாக நிர்வாக வசதிக்காகப் பகுக்கப்பட்டாலும், நாடு ஓர் ஒருங்கிணைந்த முழுமை. அதன் மக்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒரே அரசின் கீழ் வாழும், ஒரே மூலத்திலிருந்து தோன்றிய, ஒரே மக்கள்.”
புவியரசன்
இவர், ஆட்சிமொழி பற்றிய சிக்கல் அரசியல் சாசன அவையிலும் சரி, அதன்பின் நாடாளுமன்றத்திலும் சரி, இதுவரையில் முறையாக அணுகப்படவில்லை என்கிறார். நான் அவரோடு உடன்படவில்லை. மத்தியில் ஆட்சிமொழி இந்தி அல்லது இந்துஸ்தானி என்பதில் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து தெளிவாகத்தான் இருந்தார்கள். பாகிஸ்தான் பிரிந்தவுடன் இந்துஸ்தானி வலுவிழந்துவிட்டது.
இவரே கூறுவதுபோல ஆட்சிமொழியாக இந்தி தொடர்வதற்கு எதிர்ப்பு என்பதைக் காட்டிலும் தொடர்புமொழியாக ஆங்கிலம் நீடிப்பதை வலியுறுத்தியே தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் குரலுக்கிணங்கி, நாடாளுமன்றமும் சிக்கலை முறையாகவே அணுகியி ருக்கிறது என்று எண்ணுகிறேன். மூவரும் தொட விரும்பாத 1968 ஆண்டுத் தீர்மானம் இதற்கு ஒரு சான்று. எனவே, 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக வேண்டும் என்பது புதுப் பூதம் அல்லது இதுவரை பதுங்கியிருந்த பூதம்.
பழம் தின்ன ஆசையா?
குறைகளேதும் இருந்தால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும். இந்தியில் ஒரு பழமொழி உண்டு. ‘மாம்பழங்களைத் தின்ன ஆசையா அல்லது மரங்களை எண்ண ஆசையா’ என்று. நாம் மரங்களை எண்ணுபவர்களாகவோ அல்லது நெடிதுயர்ந்த மரங்களை வேரோடு சாய்க்க முயல்பவர்களாகவோ இருக்கக் கூடாது என்பதே என் கருத்து.
மக்கள் மாம்பழங்களைத்தான் விரும்புவார்கள்.
- பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT