Published : 18 Aug 2015 09:24 AM
Last Updated : 18 Aug 2015 09:24 AM

தாம் ஜாகே... காம் லேகே ஆயேகா...

எப்படியோ சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை. அதான், 1,000 கோடி ரூபாயில் முன்பு தலைமைச் செயலகமாகக் கட்டப்பட்டதே அதே கட்டிடம்தான். இந்த அடையாளத்தையொட்டிய அடையாளம் ஒன்று உண்டு. அதன் தென்புற வாயிலை யொட்டி உள்ள சுரங்கப் பாதை தையலர் கடை. ‘பி.எம்.கோபால் ராவ் ஜென்ட்ஸ் டெய்லர்’. இதற்கென்று அரை நூற்றாண்டு கடந்த வரலாறும் உண்டு.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோபால் ராவ் சட்டை தைத்துக் கொடுத்திருக்கிறார். மு.க.ஸ்டாலினுக்குத் திருமண சூட் தைக்கப்பட்டதும் இங்குதான். இன்னும் துரைமுருகன், திருச்சி சிவா, குமரி அனந்தன், வைத்திலிங்கம் என்று பல பிரபலங்கள் இந்தச் சின்னஞ்சிறு கடைக்கு இப்போதும் வாடிக்கையாளர்கள்.

முன்பு அண்ணா சாலையில், இப்போது ‘சரவண பவன்’ உணவகம் இருக்குமிடத்தில் ‘செல்லா ராம்ஸ்’ என்று ஒரு தையல் கடை இருந்தது. அங்கு காஜா தைக்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கோபால் ராவ், மெல்ல மெல்ல தொழிலைக் கற்று, பின்னாளில் சொந்தமாகக் கடை போட்டார். இப்போது ‘காதி பவன்’ இருக்குமிடத்தில் அப்போது ‘பாம்பே அல்வா ஹவுஸ்’ இருந்தது. அதன் பின் பகுதியில் கோபால் ராவின் கடை இருந்தது. தனி ஆளாக ஷட்டரைத் திறந்த கோபால் ராவ், குறுகிய காலத்திலேயே 40 பேர் வேலைசெய்யும் தையல் கடலாக அதை விரிவுபடுத்தினார்.

1970-ல் அங்கு கட்டிடம் இடிக்கப்பட்டபோது, இப்போதுள்ள சுரங்கநடை பாதைக்குக் கடையை மாற்ற வேண்டிய கட்டாயம். அதன் பிறகும் 20 வருடங்கள் தையல் இயந்திரத்தோடு சுழன்றார் கோபால் ராவ். இப்போது, அவரது மகன் கர்ணன் ராவ் கையில் கடை.

‘‘ஒரு வேலைய சிறப்பா செஞ்சு குடுத்தோம்னா, சம்பந்தப்பட்ட நபர் அதை ஆறு பேருக்கு விளம்பரப்படுத்துவார். கொம்பாக்கிட்டோம்னா, அதை 24 பேருகிட்ட சொல்லி நாஸ்தி பண்ணிரு வாங்கன்னு எங்க கடையோட வாடிக்கையாளர் ராகவன் ஐ.ஏ.எஸ். சார் எங்கப்பாகிட்ட சொல்லு வாராம். அது உண்மைதான். எங்க கடைக்குப் பெருசா விளம்பரம் ஏதும் கிடையாது. ‘தாம் ஜாகே.. காம் லேகே ஆயேகா.. (ஒரு வேலை போய் இன்னொரு வேலையைக் கொண்டுவரும்)’னு இந்தியில ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதுமாதிரி எங்களுடைய தொழில் நேர்த்திதான் எங்களுக்கான விளம்பரம்’’ - பெருமை மிளிரப் பேசுகிறார் கர்ணன் ராவ். கோபால் ராவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உட்பட ஒன்பது பிள்ளைகள். அத்தனை பேரையும் கரையேற்றியது இந்தத் தையல் கடைதான். “அப்பெல்லாம் எங்க கடையில அளவு குடுக்குறதுக்கு நான் முந்தி நீ முந்தின்னு வாடிக்கையாளர்கள் மோதுவாங்களாம். ‘வரிசை யில நின்னாதான் அளவெடுப்பேன்… இல்லாட்டா எடுக்க மாட்டேன்’னு அப்பா சொல்லுவாராம். இப்ப ரெடிமேடு யுகமா போயிருச்சுன்னாலும் இன்னைக்கும் நம்மளைத் தேடி வர்றவங்க வந்துக்கிட்டுதான் இருக்காங்க. சென்னை நம்மள வாழவைக்குது’’ என்று சிரிக்கிறார் கர்ணன் ராவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x