Published : 05 Feb 2020 08:10 AM
Last Updated : 05 Feb 2020 08:10 AM
சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து எந்த ஒரு இயக்கமும் தனக்கான ஒரு ஊடகத்தைக் கொண்டிருப்பதை முக்கியமென்று கருதிவந்திருக்கிறது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள்/ இருப்பவர்கள் தலித் மக்களே! அம்மக்களின் குரல் ஒலிப்பதற்கான அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ இன்றுவரை குறைவாகத்தான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மேற்கொண்ட முன்னோடி இதழியல் முயற்சிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது நமக்குப் புலப்படுகிறது.
அது 1920, ஜனவரி 31. டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய மாதமிருமுறை மராத்தி இதழான ‘மூக் நாயக்’கின் முதல் இதழ் வெளியான நாள். ‘மூக் நாயக்’ என்றால், மராத்தி மொழியில் ‘குரலற்றவர்களின் தலைவர்’ என்று பொருள். இந்தப் பெயரை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்திய பக்திக் கவிஞர் துக்காராமின் பாடல் ஒன்றிலிருந்து டாக்டர் அம்பேத்கர் தழுவிப் பயன்படுத்தினார். ‘மூக் நாயக்’ என்ற பெயருக்குக் கீழாக, அந்தப் பாடலும் இடம்பெற்றிருந்தது.
மூக் நாயக்கின் பின்னணி
முன்னதாக அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த அம்பேத்கர், லண்டனில் உள்ள பொருளாதாரக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பரோடா மாகாண கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அந்த ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டு, இந்தியாவுக்கு 1917-ல் வந்தார். மீண்டும் தனது ஆய்வைத் தொடரும் கனவோடு அதற்கு ஆகக்கூடிய செலவுக்குத் தொகையைச் சேமிப்பதற்காக ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சில அனுபவங்கள்தான் அவரை சொந்தமாகப் பத்திரிகை நடத்தத் தூண்டின.
1918-19 ஆண்டுகளில் சவுத்பரோ கமிட்டி இந்தியாவுக்கு வந்தது. அது தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில், டாக்டர் அம்பேத்கரையும் முற்பட்ட பிரிவினர் சார்பில் சமூக சேவகர் வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் தங்கள் தரப்புகளின் வாதங்களை எடுத்துவைக்க அழைத்தது. இந்த விஷயத்தில் வித்தல் ராம்ஜியின் தரப்பு வாதங்களுக்குப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை என்று அம்பேத்கரின் மனம் வாடியது. கூடவே, ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை எடுத்துக்கூறி ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்தக் கடிதம் பிரசுரிக்கப்படவேயில்லை. இதெல்லாம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி பத்திரிகை வேண்டும் என்ற திசையை நோக்கி அம்பேத்கரை நகர்த்தின.
நிதி வசதி ஏதும் இல்லை என்றாலும் ஒரு லட்சிய உத்வேகத்துடன்தான் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ பத்திரிகையைத் தொடங்கினார். அவர் பத்திரிகை தொடங்கும் செய்தியை அறிந்த கோலாப்பூரின் சத்திரபதி ஷாஹு மகாராஜா அம்பேத்கரின் இல்லத்துக்கு வந்து ரூ.2,500 நன்கொடையைத் தந்தார். பத்திரிகையின் தொடக்க நிலையில் இந்தத் தொகை பெரும் ஊக்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘மூக் நாயக்’ பத்திரிகையை அம்பேத்கர் தொடங்கினாலும் அதன் ஆசிரியர் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்ததில்லை. அரசுப் பணியில் இருந்ததுவும் இதற்கு ஒரு காரணம். மாதம் இருமுறை இதழாக ஒரு சனிக்கிழமை விட்டு அடுத்த சனிக்கிழமையில் அந்த இதழ் வெளியானது. ஆரம்பத்தில் பாண்டுரங் நந்தராம் பட்கர் அந்த இதழின் அதிகாரபூர்வ, பெயரளவிலான ஆசிரியராக இருந்தார். பிறகு, தின்யந்தேவ் கோலப் ஆசிரியர் பொறுப்பேற்றார். சில காலம் கழித்து அம்பேத்கருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோலப் பதவி விலகினார்.
படிகளற்ற கோபுரம்
‘மூக் நாயக்’கின் முதல் இதழில்தான் தற்போது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அம்பேத்கரின் வரிகள் இடம்பெற்றன. “இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.”
‘மூக் நாயக்’ அதன் பெயருக்கு ஏற்ப குரலற்றவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்கொண்ட சாதிக் கொடுமைகளைப் பற்றி அந்த இதழுக்குக் கடிதம் எழுதினார்கள். அது சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம். ‘மூக் நாயக்’ பத்திரிகை இந்திய தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் அம்பேத்கரோ ‘மூக் நாயக்’ பத்திரிகையோ இந்திய சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அந்நியரின் கொடுமைகளை, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இந்திய தேசியவாதம் நமக்குள்ளே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதால்தான் அது அம்பேத்கரால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்னொரு இதழில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: “இந்தியா ஒரு சுதந்திர நாடாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. ஒரு நல்ல அரசாகவும் உருவாக வேண்டும். அதில் எல்லா வகுப்பு மக்களுக்கும் மதம், சமூகம், பொருளாதாரம், அரசியல் தொடர்பானவற்றில் சம உரிமை என்பது உறுதிசெய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வின் படிகளில் உயர்வதற்கான வாய்ப்பும், இவ்வாறு முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் அளிக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பிராமணர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதைவிட நூறு மடங்கு நியாயம், ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து பிராமணர் கைகளுக்கு மட்டும் மாற்றப்படக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்ப்பதில் அடங்கியிருக்கிறது.”
புறக்கணிப்பு
‘மூக் நாயக்’ இதழ் தொடங்கப்பட்டபோது, பால கங்காதர திலகரின் ‘கேசரி’ பத்திரிகைக்கு மூன்று ரூபாய் பணத்துடன் விளம்பரம் அனுப்பப்பட்டது. விளம்பரம் செய்ய மறுத்து, பணத்தைத் திருப்பி அனுப்பியது அந்தப் பத்திரிகை. இப்படியாக, தொடக்கத்திலேயே அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ புறக்கணிப்பை எதிர்கொண்டது. 1920-ல் 700 சந்தாதாரர்களைக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, 1922-ல் ஆயிரத்தைத் தொட்டது. இதற்கிடையில் பாதியிலேயே நின்றுபோன தனது பொருளாதார முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக அம்பேத்கர் லண்டன் சென்றுவிட ‘மூக் நாயக்’ பத்திரிகை தள்ளாடியது. அதற்கு முன்னதாக ஆறு மாதங்களில் 12 இதழ்களின் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியராக இருந்து அம்பேத்கரே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.
சில ஆண்டுகளில் ‘மூக் நாயக்’ நின்றுபோனது. ஆனாலும், பின்னாளில் ‘பஹிஷ்க்ரிட் பாரத்’, ‘ஈக்குவாலிட்டி ஜன்ட்டா’ ஆகிய இதழ்களை டாக்டர் அம்பேத்கர் தொடங்கி நடத்தினார். அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவுக்கு வந்தாலும் அந்தக் காலத்தைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வலுவான ஊடகம் இல்லாதது இன்றும் தொடர்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அமையும்போது அது ‘மூக் நாயக்’ இட்ட அடித்தளத்தின்மீதுதான் அமையும் என்பது டாக்டர் அம்பேத்கரின் தியாகத்துக்கும் துணிவுக்கும் சான்று!
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT