Published : 20 Jan 2020 09:38 AM
Last Updated : 20 Jan 2020 09:38 AM
சோழர் கால வரலாறு என்றாலும் சரி, தஞ்சைப் பெருங்கோயில்களின் கலைச் சிறப்புகள் என்றாலும் சரி; குடவாயில் பாலசுப்ரமணியனின் பெயர் இல்லாமல் யோசிக்கவே முடியாது. தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றி, திருவாரூர், தாராசுரம் கோயில்களைப் பற்றி அவர் எழுதியுள்ள பெருநூல்கள் ஒவ்வொன்றும் அந்தக் கோயில்களில் பொதிந்துகிடக்கும் சிற்பம், கட்டிடக் கலை, ஓவியக் கலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் கலைக்களஞ்சியங்கள். அவரது சமீபத்திய நூலான ‘இராஜேந்திர சோழன்’ சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் கோயில்கள் - ஊர்கள் தலைப்பிலேயே நூல்களை எழுதியிருக்கிறீர்கள். தங்களின் சமீபத்திய நூல் கங்கைகொண்டசோழபுரத்தைப் பற்றி பேசினாலும் இராஜேந்திர சோழனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஏன் இந்த மாற்றம்?
இந்திய வரலாற்றிலேயே நான் அறிந்தவரையில் இராஜேந்திர சோழனுக்கு இணையாக வேறொரு மன்னனைச் சொல்லத் தோன்றவில்லை. அப்படிப்பட்ட ஒரு பேரரசன், இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழகத்தில் கொண்டாடப்படவே இல்லை. தமிழக அரசு இதுவரை இராஜேந்திரனின் பிறந்த நாளைக்கூடக் கொண்டாடவில்லை. இராஜேந்திர சோழனின் வரலாறும், அவனது வீரச் செயல்களும் தமிழ் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்.
எவ்விதமான ஆய்வியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக் கிறீர்கள்?
கள ஆய்வு மேற்கொள்ளாமல் எந்தப் புதிய பார்வையும் வராது. அதனால்தான், கள ஆய்வு என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். இராஜேந்திர சோழன் வெற்றிகொண்ட இடங்களில் ஒருசில இடங்கள் நீங்கலாக கிட்டத்தட்ட முழுமையும் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். இந்தியாவில் மட்டுமின்றி அவன் வெற்றிகொண்ட கீழ்த்திசை நாடுகளுக்கும் நேரடியாக சென்று பார்த்துவிட்டுதான் ‘இராஜேந்திர சோழன்’ புத்தகத்தை முடித்தேன். சிற்பங்களைப் பற்றி நான் எழுதும்போது நான் இன்னொரு வழிமுறையைப் பின்பற்றுகிறேன். எந்தவொரு சிற்பத்தைப் பார்த்தாலும் அதன் புராணக் கதை, அதைப் பற்றி தேவாரத் திருமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகள் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால்தான் அதனுடைய முழுமையை உணர முடியும். சிற்பங்களை ரசிக்க வேண்டும் என்றால் தமிழிலக்கியப் பின்புலம் அவசியமானது. உதாரணத்துக்கு, ‘இராஜேந்திர சோழன்’ புத்தகத்தில் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள ஆடல்வல்லான் திருமேனியைப் பற்றி முற்றிலும் புதிய கோணத்தில் எழுதியிருக்கிறேன். காரைக்கால் அம்மையார் பாடிய பதிகத்தின் அடிப்படையில்தான் இராஜேந்திர சோழன் அந்தச் சிற்பத்தை வைத்திருக்கிறான். அந்த ஒரு குறிப்பிட்ட சிற்பத்தில் கோபம், சிரிப்பின் உச்சம், மெய்மறந்து இருத்தல், மிரண்டுபோதல் என்ற எல்லாவிதமான மெய்ப்பாடுகளும் இருக்கின்றன.
வரலாற்றில், இராஜராஜனைவிடவும் இராஜேந்திரன் முக்கியமானவர் என்றொரு பார்வையும் இருக்கிறதே?
இராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்தே பார்க்க முடியாது. இராஜராஜனின் வெற்றிகளுக்கெல்லாம் இராஜேந்திரன் பின்னணியில் இருந்திருக்கிறான். இராஜேந்திரனின் வெற்றிகளுக்கு இராஜராஜனின் திறமைகள் அடிப்படையாக இருந்திருக்கின்றன.
தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர்களின் காலம் பொற்காலம்போல இன்று பொதுவெளியில் ஒரு பெரும் பார்வை இருந்தாலும், அவர்கள் காலத்தில்தான் இன்று அடித்தட்டு மக்களாக இருப்பவர்களிடமிருந்து நிலவுரிமை பறிக்கப்பட்டது; பிராமணர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, நிறைய நிலவுடைமையைப் பெற்றார்கள் என்னும் விமர்சனங்களும் இருக்கின்றன. நீங்கள் சோழர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வரலாறு படித்தவர்களும் கல்வெட்டுகளை முழுமையாக ஆராய்ந்தவர்களும் ஒரு விமர்சனத்தைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், மட்டையடியாக வரலாற்றை அணுக முடியாது; கூடாது. பிராமணர்களுக்குச் சோழர்கள் நிலங்களைத் தானமாகக் கொடுத்தார்கள் என்ற பேச்சு கரந்தைச் செப்பேட்டின் அடிப்படையிலானது. அதேசமயம், அந்தச் செப்பேட்டை ஆதாரம் காட்டுபவர்கள் பலர் அதை வரிவரியாகப் படித்தவர்கள் கிடையாது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வெறுமனே பிராமணர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதான குறிப்பு அதில் கிடையாது. ஆயுர்வேதம், கலைத் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே நிலங்களை அளித்திருக்கிறார்கள். அப்போது வடபுலத்தோடும் கீழ்த்திசை நாடுகளோடும் தொடர்புகொள்வதற்கு சம்ஸ்கிருதம் இணைப்புமொழியாக இருந்திருக்கிறது. அதனால், சம்ஸ்கிருதக் கல்வியும் அவசியமானதாக இருந்திருக்கிறது. ஆகையால், சாஸ்திர விற்பன்னர்கள் என்ற அடிப்படையிலும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டிருக் கிறார்கள். ஒவ்வொரு ஆட்சிக் காலகட்டத்திலும் சில சமூகக் குழுக்கள் முக்கியத்துவம் பெறுவது வரலாறு நெடுகிலும் நடக்கிறது. நாம் இன்றைய கறாரான ஜனநாயக நெறிமுறைகளின் வழி கடந்த கால முடியாட்சிகளை மதிப்பிட முடியாது; அதன் அடிப்படையில் மட்டுமே முற்றிலுமாக யாரையும் நிராகரித்திடவும் முடியாது.
சோழர் காலத்தைப் பற்றிய வரலாற்றில் நீலகண்ட சாஸ்திரியின் நூல் முக்கியமானது. ஆனால், அவரது புத்தகம் வெளிவந்த காலத்துக்குப் பிறகு நோபோரு கராஷிமா, இரா.சுப்பராயலு போன்றோரும் நீங்களும் ஏகப்பட்ட கல்வெட்டுகளைப் புதிதாகக் கண்டறிந்திருக்கிறீர்கள். சாஸ்திரியின் புத்தகத்தைத் தாண்டி புதிய கண்டறிதல்கள் ஏதும் உண்டா?
ஏகப்பட்டவை உண்டு. நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்துகளுக்கு மாறுபட்ட கண்டடைதல்களும் உண்டு. எனது புத்தகங்களிலேயே அப்படி நிறைய சுட்டிக்காட்டியிருக்கிறேன். இன்னும்கூட அனைத்துக் கல்வெட்டுகளும் நமக்குப் பிரதிகளாகக் கிடைக்கவில்லை. பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில்தான் கல்வெட்டுகளைப் படியெடுத்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் கொஞ்சம் வேலைகள் நடந்திருந்திருக்கின்றன. வருடாந்திர அறிக்கைகள்தான் வெளியாகியிருக்கின்றன. நூறு வரிகளைக் கொண்ட கல்வெட்டை இரண்டு வரிகளில் சுருக்கிச்சொல்கிற இந்த வருடாந்திர அறிக்கைகளைக் கொண்டு நம்மால் வரலாற்றை எழுதிவிட முடியாது. அத்தனை கல்வெட்டுகளும் அச்சில் வர வேண்டும்.
கல்வெட்டுகளைப் பிரதிகளாக வெளியிடுகிறபோது பாடபேதங்களுக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன அல்லவா?
நிச்சயமாக இருக்கிறது. நிறையவே இருக்கிறது. நானே எனது புத்தகங்களில் தொடர்ந்து அவற்றைத் தொட்டுக்காட்டியிருக்கிறேன். ஆண்டுக்குறிப்புகளைப் பார்க்காமலே விடுவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்கெனவே இருக்கும் அறிக்கைகளை வைத்துக்கொண்டு ஆய்வுசெய்வார்கள். என்னைப் போன்ற ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே கல்வெட்டு இருக்கும் இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆராய்கிறோம். ஏற்கெனவே அச்சில் வந்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை நேரில் பார்க்கிறோம். உதாரணத்துக்கு, ‘உடையார்குடி கல்வெட்டு: ஒரு மீள்பார்வை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலைசெய்த மூன்று பிராமணர்களைப் பற்றிய ஒரு கருத்து அந்தக் கல்வெட்டில் இருந்தது. நீலகண்ட சாஸ்திரியாருக்குக் கல்வெட்டுப் பயிற்சி இல்லாத காரணத்தால் தவறான ஒரு கருத்தை நிலைநிறுத்திவிட்டார். அதை மறுத்து வேறு சிலர், வேறு வேறு கோணங்களில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். யாருமே அந்தக் கல்வெட்டை நேரடியாகச் சென்று படிக்கவில்லை. நான் அந்தக் கல்வெட்டைப் படித்த பிறகுதான், சாஸ்திரியார் தவறாகச் சொல்லிய கருத்து ஒரு நூற்றாண்டு கால சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது என்று வேறுபட்ட ஒரு கருத்தைச் சொன்னேன். மற்ற வரலாற்று ஆசிரியர்களும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தொல்லியல் துறையும் வரலாற்று ஆர்வலர்களும் தொடர்ந்து கல்வெட்டுப் பயிற்சி முகாம்களை முன்னெடுத்துவருகிறார்கள். எந்த அளவுக்கு ஆர்வலர்கள் ஆய்வாளர்களாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது?
வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது. ஆனால், ரொம்பப் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியவில்லை. ஏனென்றால், போதிய ஆசிரியர்களே நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஆர்வமாக வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக அதைச் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். தமிழ் படிப்பவர்களுக்குக் கல்வெட்டியலை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்கள் என்றாலும் அது மேலோட்டமாகவே இருக்கிறது. கல்வெட்டியலை அறிமுகப்படுத்துகிறதே தவிர, கல்வெட்டியலில் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குகிற வகையில் அது இல்லை.
சோழர் காலத்தை அறிந்துகொள்ள விரும்பும் வாசகருக்கு நீங்கள் எந்த நூலைப் பரிந்துரைப்பீர்கள்?
தற்போது இருக்கும் நூல்களில் நீலகண்ட சாஸ்திரியாரின் நூல் மிகச் சிறந்த ஒன்று. ஆனால், எதிர்காலத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரும்போது அந்தப் புத்தகத்தில் நிச்சயம் மாற்றங்கள் வரும். ஒருசில கருத்துகள் மாற்றமடையும். எந்த மாற்றங்கள் வந்தபோதிலும், சோழர் வரலாறு என்பது அவர் போட்ட சாலைதான். அதன் பிறகு, சாஸ்திரியாரின் ஆங்கில நூலையொட்டி சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய புத்தகம். சில கருத்துகளில் சாஸ்திரியாரிடமிருந்து பண்டாரத்தார் மாறுபட்டும் இருக்கிறார். இவர்கள் இரண்டு பேருக்கு இணையாக பின்வந்த நூல்களைச் சொல்ல முடியாது.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT