Last Updated : 19 May, 2014 08:12 AM

 

Published : 19 May 2014 08:12 AM
Last Updated : 19 May 2014 08:12 AM

மறக்க முடியாத தேர்தல்

உலகின் மிகப் பெரிய தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது. வரலாற்றைப் பொய்யாக்கிய தேர்தல் இது. இதில் கிடைத்திருக்கும் எண்களைப் பார்க்கும்போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எண்களை மேலேழுந்தவாரியாகப் பார்ப்பதென்பது கண்களை ஏமாற்றிவிடும். ஆழமான அரசியலின் பல பரிமாணங்களை எண்கள் தங்கள் உள்ளே பொதிந்துவைத்திருக்கின்றன.

புதுப்புது சாத்தியங்கள்

இந்தியா உண்மையில், அதிபர் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. 2014 தேர்தலில் மோடிதான் கதாநாயகன்; தேர்தலின் மையம். இந்த உண்மையைத் தேர்தல் முடிவுகளில் கிடைத்த எண்களும் பறைசாற்றுகின்றன. மோடி என்பவர் ஒரு கருத்தாக்கம் என்பதையும், அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது என்பதையும், காலம் தன்னுடைய அபிமானத்துக்குரியவர்களுக்கே வாரி வழங்கும் என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். 2014 தேர்தல் களத்தை மோடி ஆக்கிரமித்துக்கொண்டார் என்றால், தேர்தல் களத்தின் அமைப்பை மாற்றியெழுதியதும் புதுப்புது சாத்தியங்களை உருவாக்கியதும் ஆம் ஆத்மி கட்சிதான். வெவ்வேறு தளங்களிலும் ஆ.ஆ.க. செயல்பட்டது. போதைப்பொருள்கள், அணுசக்தி, பழங்குடிகள் உரிமை போன்றவற்றைப் பற்றி புதிய கேள்விகள் பலவற்றையும் ஆ.ஆ.க. எழுப்பியது. இந்தக் கேள்விகளெல்லாம் இதுநாள்வரை குரலற்றுக் கிடந்தவை. அரசியலில் அனுமதிக்கப்பட்ட, சாத்தியமான எல்லைகளை மறுவரையறை செய்தது ஆ.ஆ.க. வாரணாசியில் மோடிக்குச் சவால் விடுத்ததாகட்டும், மும்பையின் தாதாக்களுக்குச் சவால் விடுத்ததாகட்டும் அரசியலில் புத்துணர்வைக் கொண்டுவந்தது ஆ.ஆ.க. இருந்தாலும், ஆ.ஆ.க-விடம் எண்கள் கருணை காட்டவில்லை. எனினும், ஆ.ஆ.க. என்பது ஒரு எதிர்கால நம்பிக்கை.

இரண்டு முடிவுகள்

இரண்டு முடிவுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின. மோடியிடமிருந்து விலகுவதென்ற நிதீஷ் குமாரின் முடிவு தனக்குத்தானே பறித்துக்கொண்ட குழி. நிதீஷ் குமாரை மக்கள் நடத்திய விதம் விநோதமானது. பிஹாரின் முன்னேற்றத் துக்காகப் பாடுபட்டவர் அவர்; பிஹாரின் அலங்கோலமான நிலையைக் களைந்தவர் அவர்; ஆனாலும், மக்கள் அவரை ஒதுக்கிவிட்டு பா.ஜ.க-வை நாடியிருக்கிறார்கள். புத்திசாலித்தனமான முடிவு என்றால், அது தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவுடையதுதான். நீண்ட காலமாக ஆட்சியில் இல்லாமல் இருந்தவர் அவர். ஹைதராபாத் போன்ற வளர்ச்சியின் களங்களை மறுபடியும் உருவாக்கக் கூடியவராகவும், மோடியின் காலத்துக்கு முன்பே மோடியாக இருந்தவராகவும் சந்திரபாபு தன்னை முன்னிறுத்திக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. கிட்டத்தட்ட தி.மு.க-வைத் துவம்சம் செய்திருக்கிறது. பிராந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருப்பவர்கள் மம்தா பானர்ஜியும் ஜெயலலிதாவும். அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. இருந்தாலும், பிராந்திய அரசியலை ஆக்கபூர்வமாக அவர்கள் முன்னெடுக்க சாத்தியம் இருக்கிறது. கிடைத்த வாக்குகள் அடிப்படையில் ‘பிற கட்சிகள்' என்ற தரப்பு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறதென்றால், இந்தப் பிராந்தியங்கள் நிச்சயம் அரசியல் முக்கியத்துவத்தைக் கோருகின்றன. இதை உறுதிப்படுத்துவதுதான் மோடி அரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

இடது எங்கே போவது?

இடதுசாரிகளைப் பற்றியும் பின்குறிப்பாக இங்கே சொல்லியாக வேண்டும். கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பங்காற்றுவதில் மட்டுமே திருப்தியுற்று, தேசியக் கட்சி என்ற பொறுப்பை இடதுசாரிகள் புறக்கணித்துவிட்டனர். சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் குண்டர்கள் அரசியலை ஊடுருவச் செய்தவர்கள், இப்போது திரிணமூல் காங்கிரஸின் குண்டர்கள் கையில் சிக்கியிருக்கிறார்கள். பரதன், காரத் ஆகிய தலைமைகள் இந்திய மார்க்ஸியத்தின் மெழுகு அருங்காட்சியகமாக ஆகிவிட்டன. அரசியல் மற்றும் சமூக நீதியின் புது மொழியைப் பேசக் கூடிய புதிய தலைவர்களை இடது உருவாக்கும் என்று நம்பலாம்.

மூன்றாவது அணிக்கு நோட்டா

கிடைத்திருக்கும் வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, சமாஜ்வாதி கட்சி இன்னும் தனது முக்கியத் துவத்தை இழக்கவில்லை என்றாலும், மூன்றாவது அணிக் கான சாத்தியம் என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை. மூன்றாவது அணிக்குத் தேவைப்படக்கூடிய வாக்குகளும் தற்போது கிடைக்கவில்லை. ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்று மூன்றாவது அணிக்கான மத்தியஸ்தரும் இப்போது இல்லை. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை என்றால், பா.ஜ.க-வின் இப்படிப்பட்ட வெற்றி அந்தச் சாத்தியக்கூறை ஒன்றுமில்லாததாக ஆக்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் மகத்தான பங்கு

அரசியலின் மிகப் புனிதமான அமைப்புகளில் இந்தியத் தேர்தல் ஆணையமும் ஒன்று. கண்ணியத்துடனும் லாவகத் துடனும் அது தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கிறது; தேர்தல் நடைமுறைகளின் விழுமியத்தைப் பாதுகாத்திருக் கிறது. இருந்தாலும், இந்தத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின்மீது தேர்தல் விதிமுறைகள் மீறல், பாரபட்சமான அணுகுமுறை ஆகியன தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சில புகார்களுக்குத் தேர்தல் ஆணையம் மெதுவாகவே எதிர்வினையாற்றியது என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் ஒரு அற்புதத்தையே நிகழ்த்தியிருக்கிறது என்றும் யாரும் பெருமை கொள்ளத் தக்க நிர்வாகத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறது என்றும் தோன்றுகிறது.

- சிவ விஸ்வநாதன், அரசு, பொதுக் கொள்கைகளுக்கான ஜிண்டால் கல்லூரியின் பேராசிரியர். தமிழில்: ஆசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x