Published : 04 Aug 2015 09:46 AM
Last Updated : 04 Aug 2015 09:46 AM

சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

காலையில் தூங்கி எழுந்து, பல் துலக்கி, காபி குடித்தவுடன் ஒரு வரி விடாமல் பத்திரிகை படிக்கும் வழக்கம் பலருக்கு உண்டு. சில செய்திகளைப் படித்தாலே ரத்தம் கொதிக்கும், உதாரணத்துக்கு, ‘தங்கம் விலை மேலும் சரிவு: பவுன் ரூ.18,664-க்கு விற்பனை’.

சம்பளமும் போதாமல், கையில் சேமிப்பும் இல்லாத நிலையில் இப்படி அநியாயமாக தங்கம் விலை குறைந்து கொண்டிருந்தால் ரத்தம் கொதிக்காமல் இருக்குமா? இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் நகைக் கடைகளுக்குப் படையெடுத்துச் சென்று வாங்குகிறார்கள் என்று தொடர்ந்து அதே செய்தியில் படிக்கும்போது ரத்தம் மேலும் கொதித்து சிறிதளவு ஆவியாகக்கூடப் பறந்தது. என்ன ஒரு பரக்காவெட்டித்தனம்? பெரும்பாலானவர்களால் வாங்க முடியாத நிலையில், சற்றே நிதானம் காட்டினால் என்னவாம்? மோடி ஆட்சியில் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டுவரும் மன உளைச்சல்கள் ஒன்றா, இரண்டா!

அடுத்த பக்கத்தைத் திருப்பினால் அந்தக் கொதிப்பு குறைந்து மகிழ்ச்சி கூத்தாட வைத்தது. ‘22 வீடுகளில் திருடிய கணவன், மனைவி கைது - 210 பவுன், 10 கிலோ வெள்ளி பறிமுதல்’ என்பதுதான் அதற்கான காரணம். அதில்தான் எத்தனை விஷயங்கள் புதைந்திருக்கின்றன!

ஆந்திரத்தைச் சேர்ந்தவர் கர்ண பிரபு (30), அவரது மனைவி சவுமியா (30). அவரும் ஆந்திராவா, தெலங்கானாவா, தமிழ்நாடா தெரியவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்னால் ‘மதறாஸ் மனதே’ என்று சென்னைக்கு உரிமையோடு வந்தவர், இங்கேயே காதலித்து சவுமியாவைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சென்னையில்தான் காதலிக்க எத்தனை இடங்கள்! அடையாறு காந்தி மண்டபம், அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, மெரீனா, எலியட்ஸ் கடற்கரை, கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்கள், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்க ரயில் நிலையங்கள் (கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலும் காதலிப்பார்கள் என்றே நம்புகிறேன்), பஸ் நிறுத்தங்கள், சென்னைப் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்கள், மால்கள், கோயில்கள், பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், அண்ணா சாலை, தந்தை பெரியார் சாலை, அரசு மருத்துவ மனைகள், நடை மேம்பாலங்கள் - அவ்வளவு ஏன், ஜன நெரிசல் மிகுந்த ரங்கநாதன் தெருவில்கூட நகராமல் நிற்க முடிந்தால் காதலிக்கலாம்!

கர்ண பிரபு ஊதுபத்தி வியாபாரம் செய்துவந்தார். அதில் கொஞ்சம் வருமானம் வந்திருக்கும்போலத் தெரிகிறது. பைக் வாங்கிவிட்டார். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்திருந்தால் ஊதுபத்தி விற்பவர்கள் ஆண்டுக்கு 25,000 அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டும் என்று தன்னுடைய சமதர்ம பட்ஜெட்டில் அறிவித்திருப்பார். ஏழைகள் மேல் எவ்வளவு கரிசனத்தோடு இருந்தார், பாவம்!

இப்படியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் தியாகராய நகரில் ஒரு வீட்டுக்குள் சென்றபோது, முன் அறையில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்திருக்கிறார் - வேறு யார், கர்ண பிரபுதான். அதில் 7 பவுன் நகை, ரூ.30,000 ரொக்கம் இருந்திருக்கிறது. ம்… எத்தனையோ கைப்பைகளைக் கடந்து வந்திருக்கிறது இந்தத் தமிழனின் வாழ்க்கை (அடியேன்தான்), இப்படியொரு வாய்ப்பு சிக்கவில்லையே! எப்போது அறுந்துவிழும் என்று சொல்ல முடியாத நிலையில் சிவசேனை - பாஜக கூட்டணி உறவுபோல அல்லவா இருக்கிறது என் கைப்பை?

நீங்கள் கேட்கலாம், அதெப்படி வீட்டுக்குள் சட்டென்று நுழைய முடிந்தது என்று! சென்னைவாசிகளைப் பொறுத் தவரை பெரும்பாலும் பெற்ற தாய், தந்தை, உடன் பிறந்தவர் களைத்தான் சட்டென்று வீட்டுக்குள் நுழைய விட மாட்டார்கள். ஊதுபத்தி வியாபாரத்துடன் ‘வீடு புகுந்தும் பொருட்களைச் சேகரிப்பது’ என்று தீர்மானித்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி ஜகதாம்பதி. இப்போதைய விலைவாசிக்குத்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் இனங்கள் தேவைப்படுகின்றனவே? எத்தனையோ பேராசிரியர்கள் கோலிவுட்டுக்குப் பாட்டு, கதை-வசனம் எழுதுகிறார்களே? எவ்வளவு கஷ்டமான ஜீவனம் அவர்களுடையது!

கணவன், பகல் நேரத்தில் ஆள் இல்லாத வீடுகளில் நுழைந்து தேட்டை போடும்போது, மனைவி வீதியில் காவல் இருப்பாராம் - எப்படிப்பட்ட ஆதர்ச தம்பதி! இதற்காகவே எலெக்ட்ரானிக் கட்டர், ஸ்க்ரூ டிரைவர், கையுறை போன்ற சாதனங்களுடன் செல்வார்களாம். டவுன் சர்வேயர் டேப்பை மறக்கிறார், எலெக்ட்ரீஷியன் ஜம்பரை வீட்டில் விட்டுவிடுகிறார், போலீஸ்காரர் கேஸ் டைரியைக் கொண்டுசெல்வதில்லை, மாணவர்கள் ஹோம்-ஒர்க் நோட்டைத் தவறவிடுகிறார்கள் என்ற பொறுப்பற்ற தன்மைக்கு இடையில் இப்படி ‘உரிய சாதனங்களோடு’ தொழிலுக்குப் போகிறவர்களும் இருப்பதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

இவர்கள் சைதாப்பேட்டையில்தான் குடியிருக்கிறார்களாம். சைதாப்பேட்டை என்றாலே அங்கே உதயசூரியன் பொறித்த பொன்விழா வளைவுதான் நினைவுக்கு வரும். இனி, இத்தம்பதியரும் (எனக்கு) நினைவுக்கு வருவார்கள். சைதாப்பேட்டைவாசிகள் பாக்கியசாலிகள்!

ஆதர்ச தம்பதியிடமிருந்து 210 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள், பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கைப்பற்றியிருக் கிறார்கள் போலீஸார். (போலீஸார் ‘கைப்பற்றியது’ என்றால், அதற்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறதா என்ன?) இவர்கள் அடகு வைத்துள்ள 193 பவுன் நகைகளை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளார்களாம். (அசல், வட்டி இரண்டும் செலுத்தி மீட்பார்களா? நாம் அடகு வைத்தால், நாம்தானே மீட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது!) இவ்வளவு நகை களை அடகு வைக்கும் அளவுக்கு என்ன பண முடையோ!

பாருங்கள்... ஒரு சின்ன செய்தி, இப்படியாக எத்தனை எத்தனை சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. தினமும் செய்தித்தாள்களை வாசியுங்கள், சிந்தனை தெளிவுபட, சீரிய பாதை புலப்பட, செம்மம் சிறக்க, சிரித்து மகிழ, அலுவலகத்துக்குத் தாமதமாகப் போக… இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யத் தோன்றுகிறது.

கணவன், பகல் நேரத்தில் ஆள் இல்லாத வீடுகளில் நுழைந்து தேட்டை போடும்போது, மனைவி வீதியில் காவல் இருப்பாராம் - எப்படிப்பட்ட ஆதர்ச தம்பதி! இதற்காகவே எலெக்ட்ரானிக் கட்டர், ஸ்க்ரூ டிரைவர், கையுறை போன்ற சாதனங்களுடன் செல்வார்களாம். இப்படி ‘உரிய சாதனங்களோடு’ தொழிலுக்குப் போகிறவர்களும் இருப்பதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை!

(எல்லாம் ரயில் பயண சகவாச தோஷத்தில் வந்த அடுக்குமொழிகள்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x