Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM
இன்னொரு பெண் குழந்தை பொறந்தா வீட்டை விட்டுத் துரத்தி என் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணிவெச்சிடுவேன்னு என் மாமியார் சொன்னாங்க... ஜோசியர்கிட்ட போனோம். அவர் அடுத்ததும் பொண்ணுதான்னு சொன்னார், அதான் கலைச்சிட்டோம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் முதல் மாம்பழம் வரை தனக்கெனத் தனி அடையாளங்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கும் நகரம் சேலம். ஆனால், மலைகள் சூழ்ந்த இந்த நகரம், காலம்காலமாகத் தனக்குள் ஒரு சமூக அவலத்தைப் பொத்தி வைத்திருப்பதோடல்லாமல் அதைப் பாதுகாத்தும் வைத்திருக்கிறது என்பது 2014-ல் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்தான். பெண் சிசுக்களைப் பாதுகாக்க அரசு வகுத்த திட்டங்களும் தன்னார்வ அமைப்புகள் எடுத்த முயற்சிகளும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்பதை சேலம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சுற்றி வந்தாலே புலப்படுகிறது.
பெண்களாக இருப்பவர்கள் தங்களை இழிவான பிறவிகளாகக் கருதிக்கொள்வதும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதன் மூலமே அவர்களது பிறப்பின் ‘இழிவை'த் துடைக்க முடியும் என்று நம்புவதையும் இந்தக் கிராமங்களில் பரவலாகக் காண முடிகிறது.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றமென்றாலும் சேலம் மாவட்டத்தைச் சுற்றி அதை அறிவிக்கும் பல ஸ்கேன் மையங்கள் இயங்குவதாகச் சொல்லி அதிர்ச்சியளிக்கிறார் க்ரை அமைப்பைச் சேர்ந்த ராயன். க்ரை அமைப்போடு சேர்ந்து சேலம் மக்கள் அறக்கட்டளை அமைப்பு சேலம் பகுதியில் பெண் சிசுக்கள் பாதுகாப்புக்கெனப் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. அறக்கட்டளையை நிர்வகித்துவரும் ஜெயம் என்பவரை அறக்கட்டளையின் அலுவலகம் இயங்கும் அயோத்தியபட்டினத்தில் சந்தித்தோம். “ஸ்கேன் மையங்கள் மட்டுமல்ல, சேலத்தில் மட்டும்தான் பெண் சிசுக்களுக்கு எதிராக விஞ்ஞானமும் மரபும் கைகோத்துச் செயல்படும். இந்தப் பகுதியில் நாங்கள் சுமார் 27 கிராமங்களில் வேலை பார்த்துக்கொண்டுவருகிறோம். இந்தப் பகுதிகளில் பெண்கள் மீதான வன்முறைகளைச் சொல்லி மாளாது. கருக்கலைப்பு தொடங்கி, கல்வியில் பாகுபாடு, குழந்தைத் திருமணம் என்று எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்தித்தே ஒரு பெண் வளர வேண்டியிருக்கிறது” என்று சொன்னவர், அறக்கட்டளையில் பணிபுரியும் பாரதி என்கிற பெண்ணையும், ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவரது உறவினர் சங்கீதாவையும் நம்மோடு அனுப்பிவைத்தார்.
ஜோசியம்-ஜாதகம்-நம்பிக்கை
சங்கீதாவும் பாரதியும் முதலில் காரிப்பட்டி என்னும் கிராமத்தின் அருகில் இருக்கும் மின்னம்பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். காரிலிருந்து இறங்கிக் காட்டுப் பாதையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தவுடன் அந்த வீடு தென்படுகிறது. காவித்துண்டு அணிந்து வெளிப்படும் படையாச்சியிடம் ஜாதகத்தை நீட்டுகிறார் சங்கீதா. “ஏற்கெனவே இரண்டு பொண்ணுங்க, இந்த மொறயாவது பையன் பொறக்குமா பாருங்க” என்று கோரிக்கை வைக்கிறார். சுமார் பத்து நிமிடங்கள் ஜாதகத்தைப் பார்த்துப் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்தவுடன் பதில் சொல்கிறார் படையாச்சி. “உனக்குப் பையன் உண்டு. ஆனா, இப்போ வயித்துல இருக்கிறது பொண்ணுதான். போயிட்டு வா.”
சங்கீதாவிடமிருந்து தட்சிணையாக நூறு ரூபாயைப் பெற்றுக்கொள்கிறார். மெதுவாக, பேச்சுக்கொடுக்கும் பாரதியிடம் சங்கீதா போல நிறையப் பேர் வருவதாகப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார் படையாச்சி. “தினமும் ஒண்ணு ரெண்டு பேராவது வந்து கேட்பாங்க, என்ன குழந்தைன்னு. நான் சொல்றது இதுவரை தப்பிப்போனதில்ல. நீ வேணுமினா பாரு, இவளுக்கும் தப்பாது” என்று சொல்லி வழியனுப்புகிறார்.
படையாச்சியைப் போல பல ஜோசியர்கள் அந்தப் பகுதிகளில் இருப்பதாகச் சொல்லி அதிர வைக்கிறார் பாரதி. “இங்க இருக்கிற 27 கிராமங்களிலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைஞ்சது ஒண்ணு ரெண்டு பேராவது ஜோசியர் இருப்பாங்க. கல்யாணப் பொருத்தமெல்லாம் பார்த்தாலும், அவங்க பெருசா சம்பாதிக்கிறது குழந்தை ஆணா, பெண்ணானு ஜாதகத்தைப் பார்த்துச் சொல்றதுலதான். இதுல சில பேருக்கு ரொம்பக் கிராக்கி. சாப்பாடு கட்டிக்கிட்டு வந்து வரிசையில் நின்னு பார்த்துட்டுப் போவாங்க” என்கிறார் பாரதி.
உண்மையான அதிர்ச்சி இந்த ஜோசியத்தை நம்பிப் பலர் தங்களது கருவைக் கலைப்பதுதான். “இன்னொரு பெண் குழந்தை பொறந்தா வீட்டை விட்டுத் துரத்தி என் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணிவெச்சிடுவேன்னு என் மாமியார் சொன்னாங்க. இதோ இவ பொறக்கும்போது இவளக் கையிலகூடத் தூக்கல. வேற வழியில்லாம ஜோசியர்கிட்ட போனோம். அவர் அடுத்ததும் பொண்ணுதான்னு சொன்னார், அதான் கலைச்சிட்டேன்” என்று குற்றவுணர்வு கொஞ்சமு மின்றிச் சொல்கிறார் மேகலா, இரண்டரை வயதுப் பெண் குழந்தையைச் சுமந்தபடி. “அதெல்லாம் பார்த்தா முடியுமா? இவளுக்கு முன்னாடியும் பொண்ணுதான். மொத பொண்ணு பொறந்தவுடனேயே என் புருசன் அடிக்க ஆரம்பிச்சிட்டாரு. அவரோட தம்பிக்கு ரெண்டும் பசங்க. பூர்வீகச் சொத்து அவங்களுக்குப் போயிடும். அதுக்காகவாவது அடுத்தத பையனா பெத்துக்கணும். அப்போதான் எனக்கும் மரியாதை கிடைக்கும். ஜோசியர் நாலாவது பையன்னு சொல்லியிருக்காரு, நம்பிக்கை இருக்கு” என்று சிரிக்கிறார்.
அடுத்து சங்கீதாவும் பாரதியும் நம்மை அழைத்துச்சென்ற இடம் வாழப்பாடி.
கருக்கலைப்பா தானமா?
உயர்ந்த கட்டிடம் ஒன்றின் முன்பு நிறுத்தப்படுகிறது நமது கார். அது ஒரு ஸ்கேன் மையம். “என்ன குழந்தைன்னு தெரிஞ்சிக்கணும்” என்று அடிக்குரலில் கெஞ்சும் சங்கீதாவிடம் “இன்னிக்கு டாக்டர் இல்ல, நாளைக்கு வா” என்று கறாராகச் சொல்லி அனுப்புகிறார் அங்கிருக்கும் நர்ஸ். “இந்த சென்டர்ல நிச்சயம் சொல்லிடுவாங்கன்னு தெரியும். இன்னிக்கு டாக்டர் இல்லை” என்று புலம்பியபடி இன்னொரு மருத்துவமனையில் வண்டியை நிறுத்தச் சொல்கிறார் பாரதி. அங்கே காத்திருப்பவர்கள் முழுவதும் கர்ப்பிணிகள். விதவிதமான கவலைகளின் ரேகைகளைச் சுமந்த முகங்கள். வரவேற்புப் பிரிவில் இருந்தவரிடம் பேச்சுக்கொடுத்த பாரதி வந்து சொல்கிறார், “கேட்டேன், இங்கேயும் சொல்லுவாங்க. குழந்தை எப்படி இருக்குன்னு சொல்ல 600 ரூபாய். என்ன குழந்தைன்னு சொல்ல 1,500 ரூபாயாம்” என்கிறார். பெண் டாக்டர் நுழைந்தவுடன் அந்த இளம்சிவப்பு நிறக் கட்டிடமே கொஞ்சம் பரபரப்பாகிறது. சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு சங்கீதா அழைக்கப்படுகிறார். “என்னம்மா தெரியணும்? கையில காசு வெச்சிருக்கியா?” என்று கேட்டுக்கொண்டே வயிற்றுப் பகுதியில் ஜெல் தடவி ஸ்கேன் கருவியைப் பொருத்துகிறார். “பொண்ணுதாம்மா. பேசாம இப்பவே அட்மிட் ஆயிடு. ஏழு மாசம் ஆகுது. அதனால டெலிவரி பண்ற மாதிரியே குழந்தையை வெளியே எடுத்துடுவோம். 9,000 ரூபா ஆகும்” என்கிறார். “அவ்வளவு காசு இல்ல” என்று சங்கீதா தயங்க, “சரி, டெலிவரிக்கு அட்மிட் ஆயிடு. காசு எதுவும் செலவுசெய்ய வேணாம். குழந்தையைக் கொடுத்திடலாம்” என்று சொல்லி அனுப்பிவைக்கிறார்.
எருக்கம் இலை - சிறு குழந்தை
சேலம் மக்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் மேலும் பல செய்திகளைச் சொல்லி அதிர வைக் கிறார் ஜெயம். “இங்க மொத்தம் 243 ஸ்கேன் சென்டர் இருக்கு. இதுல 107-தான் அதிகார பூர்வமா செயல்படுது. கடந்த ரெண்டு வருஷத் துல எங்க பகுதியில மட்டும் 340 கருக்கலைப்பு நடந்திருக்கு. இதெல்லாம் ஆர்.டி.ஐ, கள ஆய்வுகள்னு பல வகையில நாங்க திரட்டின தகவல்கள்” என்கிறார். அறக்கட்டளையில் புதிதாக இருந்த மாரியம்மாவுக்கு நம்மை அறிமுகப்படுத்திவைக்கிறார் அவர். சுமார் 70 வயது இருக்கும் மாரியம்மாவுக்கு. “முன்ன மாதிரி இல்லம்மா. இப்போ எல்லாம் நிறுத்திட்டேன். இவங்க பயமுறுத்தினாங்க. இப்போ கட்டிட வேலைக்குப் போறேன்” என்று பேசிக்கொண்டே போக, அவர் பேசிக்கொண்டிருப்பது கருக்கலைப்புகளைப் பற்றி என்று புரியவே கொஞ்ச நேரம் ஆகிறது. “50 வருஷமா மருத்துவச்சியா இருந்தேன். நிறைய குழந்தைகளுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். சும்மா ஆயிரத்துக்கும் மேல இருக்கும். கருக்கலைப்பு யாராவது வற்புறுத்திக் கேட்டாதான் செய்வேன். அப்படி சும்மா 50 செஞ்சிருப்பேன்” என்று சொல்லும் மாரியம்மாவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். “எல்லோரையும் நல்லா கட்டிக்கொடுத்துட்டேன்” என்கிறார்.
“அஞ்சு நாள், ஆறு நாள் தள்ளிப்போச்சுன்னா சர்க்கரைப் பாகு வெச்சுச் சாப்பிடச் சொல்லிடுவேன். அதுலேயே கலைஞ்சிடும். மூணு மாசம் வரைக்கும்னா அவங்களுக்கு வேற வைத்தியம்” என்று சொல்லிக்கொண்டே கையளவு அகலமாக இருக்கும் எருக்க இலையை அருகிலிருந்து பறிக்கிறார். “இதை ரெண்டா ஒடிச்சி வழியிற பாலைக் காம்போட துணியில சுத்தி உள்ள விட்டுடணும். ஒரே நாள்ல குழந்தையோட வெளியே வந்துடும்” என்கிறார். “மூணு மாசத்துக்கு மேலேனா அவங்க ஹாஸ்பிடலுக்குத்தான் போகணும். எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் நான் செய்ய மாட்டேன்” என்கிறார். “எருக்கம் காம்பு உயிர்வலியைத் தரும். ஆனாலும் இப்பவும் பண்ணிக்கிற பொண்ணுங்க இருக்காங்க” என்கிறார் ஜெயம். “மூணு மாசத்துல எப்படி குழந்தை ஆணா, பெண்ணான்னு தெரியும்?” என்று கேட்டபோது, “அதான் ஜாதகத்தைப் பார்த்துட்டு வருவாங்க இல்ல” என்கிறார் மேகலா.
“வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய 14 -15 வாரங்களாகும். மூன்று மாதங்களிலேயே கருக் கலைப்பு செய்வதெல்லாம் அறியாமையின் உச்சம். இந்தப் பகுதியில், குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்விக்கென்று பல சலுகைகள் ஏற்படுத்தியிருக்கிறது அரசு. ஆனால், அவை இன்னும் போய்ச்சேர வேண்டிய இடத்தைச் சேரவில்லை. அரசு இந்தப் பிரச்சினையில் இன்னமும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் சேலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அசோக். சேலம் பகுதியில் உள்ள பல ஸ்கேன் மையங்களில் பல ஏமாற்று வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார். “வருகிறவர்கள் கருக்கலைப்பு செய்யும் எண்ணத்தில் வந்தால் ஆறு வாரங்களில்கூட குழந்தையின் பாலினம் தெரியும் என்று சொல்லி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் எல்லாம் இங்கு உண்டு” என்று அதிர வைக்கிறார்.
“வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய 14 -15 வாரங்களாகும். மூன்று மாதங்களிலேயே கருக் கலைப்பு செய்வதெல்லாம் அறியாமையின் உச்சம். இந்தப் பகுதியில், குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்விக்கென்று பல சலுகைகள் ஏற்படுத்தியிருக்கிறது அரசு. ஆனால், அவை இன்னும் போய்ச்சேர வேண்டிய இடத்தைச் சேரவில்லை. அரசு இந்தப் பிரச்சினையில் இன்னமும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் சேலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அசோக். சேலம் பகுதியில் உள்ள பல ஸ்கேன் மையங்களில் பல ஏமாற்று வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார். “வருகிறவர்கள் கருக்கலைப்பு செய்யும் எண்ணத்தில் வந்தால் ஆறு வாரங்களில்கூட குழந்தையின் பாலினம் தெரியும் என்று சொல்லி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் எல்லாம் இங்கு உண்டு” என்று அதிர வைக்கிறார்.
“புதுப் புடவ கட்டியிருக்கேன், போட்டோ புடிக்கலையா?” என்று கேள்வி கேட்டு “வேணாம், நீ பத்திரிகையில போட்டா, யாராவது சாபம் வுடுவாங்க” என்று தானே பதிலும் தந்து வெள்ளந்தியாக வழியனுப்பி வைக்கிறார் மாரியம்மா. எருக்க இலையின் நிறத்தில் இருக்கிறது அவரது புடவை.
- கவிதா முரளிதரன்.
தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in
(பெரும்பாலான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT