Published : 20 Aug 2015 09:02 AM
Last Updated : 20 Aug 2015 09:02 AM
அதர்மத்தின் ஒரு பகுதியை வெறுப்பதுபோலத்தான் குடியை நியாயப்படுத்தாத பாடல்களையும் ரசித்தார்கள்.
முழுக் குடிகாரர் ஒருவர் மனைவியை அடித்துக் கொண்டிருக்கிறார். மனைவியின் அழுகைச் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுப் பாட்டி வருகிறார். குடிகாரரைப் பார்த்து, “ஏம்ப்பா அவளைப் போட்டு அடிக்கிறாய்; அவள் ஏழு மாசச் சூலி. வயிற்றுப் பிள்ளையை அடிக்கலாமா… அவள் அப்படி என்ன தப்பு செய்துவிட்டாள்?” என்று கேட்கிறார்.
குடிகாரர் அந்தப் பாட்டியைப் பார்த்துச் சொல்லுகிறார், “பாட்டி! சாப்பிடும் சோத்திலே இவள் கல்லை அள்ளிப் போடுதா. கல் பொறுக்காமல் பொங்கலாமா? மனுஷன் எப்படிச் சாப்பிடுவான்” எனக் கேட்கிறார். பாட்டி, “அடே மடையா! கள்ளுல பூச்சி கிடந்தா குடிக்கிறாயே. பூச்சியத் தூக்கி வெளியில போட்டுத்தானே குடிக்கிறே. கர்ப்பிணியை அடிக்கலாமோ? வயிற்றுப் பிள்ளைக்கு மாந்தம் வரும்” என்கிறார். இதைப் பாடுகிறார் பாட்டி,
“கள்ளுலே பூச்சி கிடந்தா
கலக்கிக் கலக்கிக் குடிக்கிறானே
சோத்திலே கல்லு கிடந்தா
சொந்தப் பொண்டாட்டிய அடிக்கிறானே
கள்ளெல்லாம் குடிக்காதேடா
நித்தம் கள்ளு குடிக்காதேடா
பித்தம் போயி சிரசிலேறும்
பெண்டாட்டிய அடிக்காதேடா
புள்ளக்கி மாந்தம் வரும்.”
அடிகோலப்படுகேனே
இன்னொரு பெண். வீட்டுக்கு ஒரே மகள், செல்லமாய் வளர்ந்தவர். படித்தவர், அரசாங்க வேலைக்காரர் என்று மகளை ஒருவருக்குக் கட்டிவைத்தார். அவர் மொடாக்குடியர் என்பது கொஞ்சநாளில் தெரிந்தது. பத்து வருஷங்களை அவருடன் கழித்துவிட்டார். ஒருநாள் குடல் வெந்து கணவர் செத்துப்போனார். மனைவி ஒப்பாரிவைத்து,
“பத்தரை மாத்து பழிப்படா சென்றிருந்தேன்
எட்டரை மாத்து எடையும் கொறஞ்சேனுங்க
முட்டக் குடியனுக்குத் தாலிகட்டி வச்சாளே - இப்ப
முத்தத்து வேம்பானேன் முழுதும் கசப்பானேன்
சாராயங் குடிச்சுகிட்டு சாயங்கால வேளையிலே
சாஞ்சுவருவானே படிச்ச பாவிமட்ட
அரசாங்க உத்யோகம் அம்மாவும் சொன்னாளே
ஆசப்பட்டுத் தலநீட்டி அடிகோலப்படுகேனே”
என்று அழுகிறாள்.
நியாயப்படுத்த மாட்டான்
நாட்டார் வழக்காறுகள் எப்போதுமே குடியை நியாயப்படுத்தியது இல்லை. பொதுவான விஷயங்களை யதார்த்தமாகக் கூறும் வாய்மொழிப் பாடல்கள்கூட, குடிதொடர்பான செய்திகளைப் பாடும்போது எதிர்ப்பை முன்வைத்தே பதிவுசெய்துள்ளன. குடிகாரர் தன் மனைவியிடம் குடிக்கப் பணம் கேட்டுக் கொடுக்காத போது, மனைவியை இன்னொருவருடன் சேர்த்து வக்கிரத்தோடு கணவர் பேசும்போதுகூட மனைவி, ‘‘பசியால் வாடும் குழந்தைகளுக்காக நான் அவிசாரி ஆனாலும் குடிச்சுத் தொலைக்கும் உன்னைவிட மேல்தான்’’ என்கிறாள். குறிப்பிட்ட தொழில் சார்ந்த சாதி தொடர்பானவர்களிடம் பதிவு செய்யப்பட்ட பாடல்களின் சாராம்சம் இது.
காந்திமகான் - கேளு
பாடுவதற்கும் ஆடுவதற்கும் ஒலிப்பதற்கும் இசைக் கருவிகளை இசைப்பதற்கும் மது இல்லாமல் முடியாது என்று பொதுவாகச் சொல்லும் கலைஞன், பாடகன்கூட மதுவை நியாயப்படுத்துவதில்லை. கரகாட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் கோமாளி,
‘‘கள்ளு குடிக்கப் போகாதேடா கோமாளிப் பயலே
ஏமாளிப் பயலே அடே நம்ம
காந்திமகான் சொன்னதைக் கேட்டுக்கோடா’’
என்று பாடியதை நான் கேட்டிருக்கிறேன்.
லட்சுமணனின் பிரச்சாரம்
கோபால ராவ், 40-களில் நடத்திய தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியை பரமசிவ ராவ் நினைவுகூரும்போது, அப்போதெல்லாம் அப்பா லட்சுமணனின் வாய்வழி மதுவிலக்கு பிரச்சாரம் செய்தாக, நாடு சுதந்திரம் கிடைத்த சமயம்,
‘‘ஜனங்க காந்திய மறக்கல;
இந்தியாவையும் மறக்கல” என்றார்.
தோல்பாவைக் கூத்தில் ஏழாம் நாள் நிகழ்ச்சி. சுந்தர காண்டம். சீதையைத் தேட மூன்று நாட்கள் அவகாசம் கேட்டான் சுக்ரீவன். ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை. ராமன் லட்சுமணனிடம் “சுக்ரீவனைப் பார்த்துவா’’ என்கிறான். லட்சுமணனின் ஆவேசத்தைப் பார்த்த அனுமன் பயந்துபோய் நிற்கிறான். சுக்ரீவனுக்குச் செய்தி கிடைக்கிறது. அவன் லட்சுமணனின் காலில் விழுகிறான்; ராமனின் பாதங்களைப் பற்றுகிறான்.
“மதுவே உன்னாலே கெட்டேன் இதுவே
பாவியேன் மதுவை உண்ட மயக்கத்தாலே
மறந்தேனே சொன்ன வாக்கை மாயனே
சரணம் சரணம் பணிகின்றேன் - ராமா
மதுவையும் இனிமேல் தொட மாட்டேன்”
என்று பாடுகிறான். இந்த இடத்தில் லட்சுமணன் கொஞ்சநேரம் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வான்.
மதுஅரக்கன்
இந்திய சுதந்திரத்துக்குப் பின் நடந்த தோல் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் சுந்தரகாண்டத்துக்கு என்றே பார்வையாளர்கள் வந்தார்கள். மதுவிலக்குப் பிரச்சாரத் துடன் மகாத்மாவின் பெருமை பற்றியும் கோபால ராவ் சொன்னார். இதற்கென்று ஒரு நிகழ்ச்சியை ஜோடித்தார்.
நகைச்சுவைப் பாத்திரங்களான உளுவத்தலையனும் உச்சிக்குடும்பனும் மதுஅரக்கன் கொடும்பாவியைத் துடைப்பத்தால் அடிப்பார்கள். “இனி குடிப்பியா, குடிப்பியா” எனச் சொல்லி அடிப்பார்கள். கடைசியில், அந்த மதுஅரக்கப் பொம்மையைச் சுடுகாட்டில் எரிப்பார்கள். அப்போது உச்சிக்குடும்பனும் உளுவத் தலைவனும் கும்மியடித்துக்கொண்டு,
“மூதேவி சாராயம் தாயரம்மா தாயாரே
மூட்டிவிட்டுக் குடிகெடுக்கும் தாயரம்மா தாயாரே
காந்தி மகான் சொன்ன வாக்கியம்
கேட்டு நடக்கணும் தாயரம்மா தாயாரே’’
என்று பாடுவார்கள்.
இப்படியாகப் பிரச்சாரம் செய்து கோபால ராவும் குடியை விட்டுவிட்டாராம்.
பஞ்சாயத்து அபராதம்
தமிழகத்தில் நாட்டார் கலையை நிகழ்த்தும் குறிப்பிட்ட சாதியினர், மதுவிலக்கு அமலில் இருந்த போது அவர்களின் கலையைத் தெய்வக் கலையாக நம்பினார்கள். அப்போது அவர்களின் சாதிப் பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கும் வழக்கமும் மிகக் குறைவு. 70-களின் பின் இவர்களின் கலை நிகழ்த்தலும் பஞ்சாயத்து நடைமுறையும் முழுதும் மாறிவிட்டது.
பஞ்சாயத்தில் வரும் வழக்குகளுக்குப் போடப்படும் அபராதம் சாராயமாக மாற ஆரம்பித்த பின், இவர்களின் கலை ரசனை; கலைக்குரிய உபகரணங்களைத் தயார் செய்தல் போன்றவற்றில் பெரிய சரிவு ஏற்பட்டதைக் கவனித்துவருகிறேன்.
இச்சாதியினர் முறை தவறிய வன்புணர்ச்சிக்கு அபராதம் செலுத்தினால் போதும் என்ற பஞ்சாயத்துத் தீர்ப்பினால், இவர்களின் உறவில் பெருமளவில் விரிசல்கூட வந்துவிட்டது. இவர்களின் கலை முழுதுமாக அழிந்துவிட்டது. இவ்வளவு நடந்தபோதும்கூட இவர்களின் கலைநிகழ்வில் குடி நியாயப்படுத்தப் படவில்லை.
தெருக்கூத்தில் திரௌபதி வஸ்திரத்தைத் துச்சாதனன் உரியும்போதும் தோல்பாவைக்கூத்து நிகழ்வில் அசோகவனக் காட்சியில் சீதையிடம் ராவணன் ராமனைத் தூஷணமாகப் பேசும்போதும் பார்வையாளர்கள் அதர்மத்தின் ஒரு பகுதியாகக் கண்டு வெறுப்பது போலத்தான் குடியை நியாயப்படுத்தாத பாடல்களையும் ரசித்தார்கள்.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT