Last Updated : 21 Aug, 2015 10:11 AM

 

Published : 21 Aug 2015 10:11 AM
Last Updated : 21 Aug 2015 10:11 AM

தாமிரபரணி: மண் மேடாகிப்போன ஸ்ரீவைகுண்டம் அணை

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணை ஸ்ரீவைகுண்டம் அணை. இங்கே ஆற்றின் நீரோட்டம் ஓடையாக சுருங்கிக்கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. எல்லாம் மனிதப் பிழைதான்.

தூத்துக்குடி மாவட்டத்தின் விவசா யத்துக்கு உயிர் நாடியாக திகழ்வது ஸ்ரீவைகுண்டம் அணை. இந்த அணை 1873-ல் பக்கிள் என்கிற ஆங்கிலேயே அதிகாரியின் முயற்சியால் கட்டப்பட்டது. ஒரு கி.மீ. சுற்றளவுடன் 8 அடி தண் ணீரை தேக்கும் அளவுக்கு இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், பெயருக்குத் தான் 8 அடி. இதுவரை அணை தூர் வாரப்படாததால் இப்போது அணையில் ஒரு அடி கூட தண்ணீரைத் தேக்க முடியாது. அணையில் சுமார் 6 அடிக்கு மேல் மணலும், சகதியும் சேர்ந்துள்ளன. அணைப் பகுதி மேடானதுடன் அமலைச் செடிகளும், சீமைகருவேல மரங்களும் வளர்ந்துள்ளன. இதனால், மழைக் காலங் களில் ஆற்றில் வரும் தண்ணீர் அணை யைத் தாண்டி பெருமளவு வெளியேறி கடலில் கலக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் தென்கால் மூலம் 12,760 ஏக்கரும், வடகால்மூலம் 12,800 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார பல முறை திட்ட மதிப்பீடுகள் தயாரித்தும், பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எஸ். ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அணையை தூர்வாரக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 10-ம் தேதி அணையை தூர் வார அனுமதி அளித்தது. ஆனாலும் தூர் வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று கடந்த ஜூலை 6-ம் தேதி ம.தி.மு.க., அணையை தூர் வாரும் போராட்டத்தை நடத்தியது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை அறிவித்ததால் அணையை தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். ஆனால், பணிகளில் தொய்வு நிலவுகிறது.

மழைக்கு முன் முடியுமா பணிகள்?

வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். ஏனெனில் மழைக் காலத்தில் தூர் வார முடியாது. தூர் வாரினாலும் பயன் இல்லை. இன்னொரு பக்கம் அணைப்பகுதியில் தூர் வார்கிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெற வாய்ப்பிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவது என்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பெரும் கனவு. நீண்ட காலத்துக்குப் பின் இப்போது தூர் வாருவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் பணிகளை அக்கறையுடன் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

கரையெங்கும் மண்டபங்கள்

தாமிரபரணி ஓடும் கரையெல்லாம் நூற்றுக்கணக்கான மண்டபங்கள் சிறியதும், பெரியதுமாக காட்சியளிக் கின்றன. இவை சேர, சோழர், பாண்டி யர் காலங்களில் கட்டப்பட்டவை. திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபம், திருப்புடை மருதூரில் உள்ள தைப்பூச மண்டபம் ஆகியவை புனிதமானவையாக கருதப்படுகின்றன.

திருமஞ்சன நீர் எடுத்துச் செல்ல திருக்குடம் பொருந்திய மண்டபங்களை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் காணலாம். வெள்ளக்கோயில் பகுதியில் 42 தூண்களுடன் 150 பேர் வரை அமரக்கூடிய சுடுகாட்டு மண்டபம் இருக்கிறது. ஐங்கோண வடிவிலான மண்டபங்களும் உண்டு. பல்வேறு மண்டபங்களில் ஓவியங்களும், கல்வெட்டு குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.

தாமிரபரணியில் படித்துறைகளுக் கும் பஞ்சமில்லை. அத்தாளநல்லூரில் உள்ள படித்துறையில் சத்தியப்படிகள், ஆழ்வார்திருநகரியில் வைகாசி விசாகம் தீர்த்தவாரி, ஸ்ரீவைகுண்டம் நீண்ட படித்துறை, பாபநாசம், குறுக்குத்துறை போன்ற பகுதிகளில் மடித்து மடித்து அமைக்கப்பட்டதான படித்துறைகள் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, 100-க்கும் மேற்பட்ட தீர்த்த கட்டங்கள் ஆற்றங்கரையில் இருக்கின்றன.

திருநெல்வேலி, கைலாசபுரத்தில் கைலாசநாத சுவாமி கோயிலுக்கு எதிரே தாமிரபரணி கரையோரத்தில் மண்டபத்தை ஒட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் மணற்பரப்பு இருந் துள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தி லும், அதற்கு முன்பும் இங்குதான் பொதுக் கூட்டங்கள் நடந்தன. 1908-ம் ஆண்டில் இங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் வ.உ.சி. பேசியிருக்கிறார். தவிர, முத்துராமலிங்க தேவர், நாவலர் நெடுஞ்செழியன், சத்தியவாணிமுத்து, அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பல் வேறு தலைவர்கள் இங்கே சொற்பொழி வாற்றியுள்ளனர். காலவெளியில் காணா மல் போய்விட்டது அந்த மணல்வெளி.

ஓவியரின் மகத்தான முயற்சி

தாமிரபரணி கரையோரத்தில் அமைந்துள்ள மண்டபங்களை ஓவியமாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் பொன்.வள்ளிநாயகம். இவரது ஓவியப் பயணத்தில் பல்வேறு வரலாற்று குறிப்புகள், மக்களின் பண்பாடு, அன்றாட வாழ்க்கையோடு ஆற்றங்கரை மண்டபங்கள் ஒன்றிப்போயிருக்கும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. “மண்டபங்கள் அமைந்துள்ள திசை, சூரிய ஒளி அவற்றின்மீது விழும் பாங்கு குறித்தெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டுதான் அவற்றை ஓவியமாக வரைகிறேன். பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் திருநெல்வேலியில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்றை ஓவியமாக வரைந்திருக்கிறேன். அனைத்து மண்டபங்களையும் வரைந்த பின்பு அவற்றை கண்காட்சியாக வைக்கவுள்ளேன்” என்கிறார் அவர்.

(தவழ்வாள் தாமிரபரணி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x