Published : 04 Dec 2019 07:42 AM
Last Updated : 04 Dec 2019 07:42 AM

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள்

திரிலோச்சன் சாஸ்திரி

தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் குறித்து சமீபத்தில் தேர்தல் ஆணையமும் ரிசர்வ் வங்கியும் கேள்வி எழுப்பியிருப்பது இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 2017-ல் அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அப்போதைய நிதியமைச்சருக்கு இப்படி எழுதினார்: “மாற்றிக்கொள்ளும் வகையிலான பத்திரங்களைத் தருவதற்கு மத்திய வங்கியை விட மற்ற யாரையும் அனுமதிப்பது ஆபத்தானது, இது தேர்தல் நன்கொடைப் பத்திரங்களுக்கும் பொருந்தும்.” அரசியல் கட்சிகளுக்கு சட்டவிரோதமான வகையில் வெளிநாட்டுப் பணம் வந்துசேர்வதற்கு இது வழிவகுக்கும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இந்த எதிர்ப்புகளெல்லாம் புறக்கணிக்கப்பட்டு, நிதி மசோதாவின் ஒரு அங்கமாக இந்தத் திட்டமானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட திட்டம் இல்லை.

21-ம் நூற்றாண்டில் தேர்தல்களில் பணம் ஒரு பெரிய பங்காற்றுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியில்லை. தனிநபர் வருமான விகிதாச்சாரப்படி, அமெரிக்காவைவிட இந்தியா தேர்தலுக்கு அதிக அளவில் செலவிடுகிறது. இன்று, பணம் வைத்திருந்தால் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், பணம் வைத்திருக்கவில்லை என்றால், நிச்சயம் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிவரும். சில கட்சிகள் கொஞ்சமாகச் செலவழித்து ஒரு முறை வென்றிருக்கலாம். ஆனால், வெற்றியைப் பல தேர்தல்களில் தக்கவைத்துக்கொள்வதற்குப் பணம் தேவை.

தேர்தலும் பணமும்

வாக்காளர்களைச் சென்றுசேர்வதற்கு விளம்பரப் பலகைகளைக் கட்சிகள் பயன்படுத்துகின்றன. அச்சு, மின்னணு, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றன. தேர்தல் பேரணிகள் நடத்துகின்றன. இதற்கிடையே கட்சி ஊழியர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் பரிசுகள், பணம், மது போன்றவற்றைக் கொடுத்து வாக்குகளை விலைகொடுத்து வாங்கவும் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பணம் தேவைப்படுகிறது என்ற பட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரோ கட்சியோ மக்களுக்காக உழைப்பார்களா அல்லது அவர்களுக்கு நிதி உதவி செய்தவர்களுக்காக உழைப்பார்களா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. ஆகவே, சில நாடுகளில் தேர்தலுக்குப் பொது மக்களிடமிருந்து நிதி திரட்டப்படுகிறது.

தேர்தல் நன்கொடைப் பத்திரங்களைப் பொறுத்தவரை அவற்றின் மூலம் யாருக்கு யார் நன்கொடை தருகிறார்கள் என்பது வாக்காளருக்குத் தெரியாது. அதிகார வர்க்கத்தின் தொல்லைகளிலிருந்து நன்கொடையாளர்களைக் காப்பாற்றுவதற்கு இப்படி ஒரு ஏற்பாடு. எனினும், அப்படிப்பட்ட தொல்லைகளைத் தருவது ஆட்சியில் உள்ள கட்சியே ஆகும். காவல் துறை, மத்தியப் புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, அமலாக்கப் பிரிவு போன்றவற்றைக் கொண்டு ஆளும் அரசு தொல்லைகள் தருவதுண்டு. இந்த நன்கொடைப் பத்திரங்களை யார் வாங்கினார்கள், அதை எந்தக் கட்சி காசாக்கியது என்பதை வங்கிகள் நன்கு அறியும். அரசு நினைத்தால் இந்தத் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். தனக்கு நன்கொடை பெறுவதற்கும், மற்ற கட்சிகளுக்கான நன்கொடைகளைத் தடுப்பதற்கும் ஆளுங்கட்சி இதைப் பயன்படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்தில் இதைத் தடுப்பதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல் மோசமானது என்னவென்றால், நன்கொடைக்கான எல்லை அகற்றப்பட்டுவிட்டது. கோட்பாட்டளவில், ஒரு பெருநிறுவனம் நினைத்தால் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களைப் பயன்படுத்தி, அரசாங்கத்தை வாங்கிவிட முடியும். உலகில் வேறு எந்த நாட்டிலும் இது சாத்தியமாகாது. இந்தியாவில் தேர்தல் செலவினத்துக்கு எல்லை வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவது கிடையாது.

நீண்ட கால பாதிப்புகள்

நூற்றுக்கணக்கான கோடிகளை அறிவிக்கப்பட்ட சொத்தாகக் கொண்டிருக்கும் பல கட்சிகள், அந்தத் தொகையெல்லாம் ரூ.100-க்கும் குறைவான நன்கொடைகளைப் பெற்றுச் சேர்த்தது என்று சொல்வது வழக்கம். குடிமைச் சமூகத்திலிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு வருகிறதுதான். ஆனால், அரசியல் கட்சிகள் தங்களுக்கு நன்கொடை வராதபோதுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன எனும்போது, அவற்றின் நம்பகத்தன்மை குறைகிறது.

இதற்கு என்ன தீர்வு என்று பார்ப்பதற்கு முன்பு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் திட்டத்தின் விளைவுகளையும் அவை ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால பாதிப்புகளையும் பார்ப்போம். ஆளுங்கட்சிதான் கிட்டத்தட்ட அனைத்து நன்கொடைகளையும் பெறுகிறது. யாருக்கு யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை அதுவும், அமலாக்கத் துறையும் நன்கு அறியும். ஆனால், பொதுமக்களுக்கு இந்தத் தகவல் தெரியாது. நல்ல ஜனநாயகத்துக்கும் ரகசியத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? உண்மையான ஆபத்து என்னவோ நீண்ட காலம் நீடிக்கக்கூடியது. பெருமளவிலான பணமானது வெளிப்படைத் தன்மையற்ற வகையில் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும்போது, ஜனநாயகம் என்று நாம் எதை அறிந்திருக்கிறோமோ அது உண்மையில் நீடிக்க முடியாது.

தேர்தல் ஆணையம் உட்பட்ட வேறுபட்ட ஆணையங்கள் இந்தப் பிரச்சினைக்கான பொருத்தமான தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால், இன்றுவரை எந்த அரசாங்கமும் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் செலவுக்கான நிதித் திரட்டலுக்கு சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள், சட்டங்கள் இருக்கின்றன என்பதுடன் நமது நடைமுறைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எளிய தீர்வுகள்

இந்த விவகாரத்தில் எளிய தீர்வுகள் பல இருக்கின்றன. முதலாவதாக, எல்லா நன்கொடைகளிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். இரண்டாவதாக, அரசியல் கட்சிகள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் கட்சிகளெல்லாம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தான் இருக்கின்றன என்று மத்திய தகவல் ஆணையம் கூறினாலும் அதை அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை. மிக மோசமாக சமத்துவமின்மை நிலவும் நமது சமூகத்தில் தேர்தல் செலவுக்கான வரன்முறையும் நன்கொடை வரன்முறையும் கடுமையாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் நிதிகள் உரிய முறையில் பரிசோதிக்கப்பட வேண்டும்.

வாக்காளர்களும் மாற்றங்களைக் கோர வேண்டும். வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடக்க வேண்டும். “எங்களுக்கு உங்களைத்தான் பிடிக்கிறதே தவிர, நீங்கள் குவித்திருக்கும் பணத்தை அல்ல. உங்களுக்கு வேண்டுமென்றால், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நன்கொடை தருவோம்” என்பதுதான் வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்குக் கூறும் எளிய செய்தியாக இருக்க முடியும். அதிக அளவில் செலவழிக்கும் வேட்பாளர்களையும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்களையும் வாக்காளர்கள் நிராகரிப்பதன் மூலம், ஜனநாயகத்தை மேலும் அடுத்த கட்டத்துக்கு நாம் உயர்த்திச் செல்ல முடியும். மிக முக்கியமாக, தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்தைத் தூக்கியெறிய வேண்டும். இது குறித்து ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இன்னொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாமல் இந்திய ஜனநாயகம் தப்பிப்பிழைக்கும் என்று நம்புவோமாக!

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x