Published : 20 Nov 2019 11:57 AM
Last Updated : 20 Nov 2019 11:57 AM

போட்டித் தேர்வுகளில் அசத்தும் திருப்பூர் படை!

பின்னலாடை நிறுவனத்தில் பகுதி நேரமாகப் பணிபுரிந்துகொண்டே படித்தவர், தந்தையுடன் விவசாயம் பார்த்துக்கொண்டும், சுமையுந்து வாகனம் ஓட்டிக்கொண்டும் தேர்வுக்குத் தயாரானவர்கள், மகனைக் கல்லூரிக்கும் கணவரை வேலைக்கும் அனுப்பிவிட்டுப் படிக்கக் கிளம்பிய பெண்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 போட்டித் தேர்வில் வெற்றிபெற்றுள்ள இவர்களுக்குப் பின்பு திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கதை இருக்கிறது.

விளிம்பு நிலையில் வாழ்க்கையை

நகர்த்தும் பலரையும் ஒன்றிணைத்து, அரசு வேலையில் உட்கார வைக்கும் வேலையைச் செய்யும் களமாக இருக்கிறது திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம். தொடக்கத்தில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் இந்த வளாகத்தில்தான் செயல்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆட்சியர் அலுவலகம் மாற்றப்படவும், அதோடு சேர்ந்தேயிருந்த வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அன்றாடம் படிக்கவந்த சிலர், கரம்கோத்து விதைத்த விதைதான் இப்போது பெரும் விருட்சமாக விரிந்திருக்கிறது. விவசாயிகள் நெல்லை இருப்பு வைத்து விற்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை திருப்பூர் மக்களுக்கான போட்டித் தேர்வுக் களமாக மாற்றியிருக்கிறார்கள். சொற்ப மான எண்ணிக்கையில் தொடங்கிய இந்த முயற்சியில், இப்போது 200 பேர் இணைந்திருக்கிறார்கள்.

ஒருங்கிணைத்த வறுமை

சமீபத்தில் நடந்துமுடிந்த குரூப்-4 தேர்வில் 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018-ல் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். பல்வேறு தேர்வுகளுக்காக இங்கே படிக்க அமர்ந்த நான்கு ஆண்டுகளில் 150 பேர் வெற்றிபெற்று, அரசுப் பணிகளில் அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒருங்கிணைத்த ஒரே மையப்புள்ளி, குடும்பத்தின் வறுமைதான். இப்போது திருப்பூரின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் படிப்பவர்கள் திருப்பூர்வாசிகள் மட்டுமல்ல; தர்மபுரி, ஈரோடு, கோவை என வெவ்வேறு ஊர்களிலிருந்து கிளம்பி இங்கே வந்து படிக்கிறார்கள். எல்லோரையும் இந்தக் கூடம் அரவணைத்துக்கொள்கிறது.

“படிச்சிட்டு வீட்டுல சும்மா இருந்தேன். வேலைக்குப் போகணும்னு எனக்கு ஆசை இருந்துச்சு. ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல இப்படி ஒரு விஷயம் நடந்துட்டு இருக்குனு கேள்விப்பட்டுப் படிக்க வந்தேன். இங்க வந்த ஒரே வருஷத்துல குரூப்-4 தேர்வுல பாஸ் ஆகிட்டேன். ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்து படிக்குறதால ரொம்ப சுலபமா புரிஞ்சிக்க முடியுது” என்கிறார் சகீரா பானு.

ஆர்ப்பாட்டமில்லாத புரட்சி

போட்டித் தேர்வுக்கு இவர்கள் தயாராகும் விதமும் மிகவும் அலாதியானது. வாரந்தோறும் பல்வேறு மாதிரித் தேர்வுகளை இதே வளாகத்தில் நடத்துகிறார்கள். மூன்று மணி நேரத் தேர்வை, இரண்டரை மணி நேரத் தேர்வாக நடத்துகிறார்கள். ஏற்கெனவே இங்கு படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள் இவர்களுக்குப் பக்கபலமாக இருந்து கேள்விகளைத் தயாரித்துத் தருகிறார்கள். தேர்வைப் பயமின்றி எதிர்கொள்ள மனதளவில் தயாராகிறார்கள். இந்தத் தேர்வை எழுதப் பலர் வாரந்தோறும் பல்வேறு ஊர்களிலிருந்தும் வருவதுதான் இந்தக் குழுவுக்குக் கிடைத்திருக்கும் வெகுமதி.

“குரூப்-2 பரீட்சைக்குத் தனியார் பயிற்சி மையத்துக்குப்போனா ரூ.30,000 வரை ஆவும். அவ்வளவு பணம் செலவழிக்க என்னால் முடியாது. இங்க படிச்சி ஜெயிக்குறவங்க அப்படியே போய்டாம எங்களுக்கு வந்து கத்துக்கொடுக்குறாங்க. இதெல்லாம் பாக்கும்போது நானும் பெரிய இடத்துக்குப்போனாக்கூட இங்க வந்து சொல்லித்தர்றத விட்றக் கூடாதுன்னு தோணும்” என்றார், இந்து சமய அறநிலையத் துறை தேர்வில் வென்றிருக்கும் பா.தன்ராஜ்.

எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி மிகச் சாதாரணமாக இங்கே ஒரு புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இன்னும் சில வருடங்களில் இந்தக் குழு மிகப் பெரும் ஆலமரமாகக் கிளைபரப்பும் காட்சியைக் கற்பனை செய்துபார்த்து மகிழ்கிறேன். போட்டித் தேர்வுக்குத் தயாராவதையொட்டி மிகப் பெரும் வணிகமே நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கும் சூழலில், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து செய்துகாட்டியிருக்கும் காரியம் ஒரு நல்ல முன்னுதாரணம்!

- இரா.கார்த்திகேயன்,
தொடர்புக்கு: karthikeyan.r@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x