Published : 18 Aug 2015 10:42 AM
Last Updated : 18 Aug 2015 10:42 AM
மதுக் கடைகளால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29,672 கோடி வருவாய் வருகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். மதுவிலக்கு தேவையில்லை என்று சொல்பவர்கள் தங்களது முக்கியமான வாதமாக இந்த வருமானத்தைத்தான் முன்வைக்கிறார்கள். அரசின் நலத்திட்டங்கள் உட்பட, பெரும்பாலான திட்டங்கள் இந்த வருவாயை நம்பியே நடக்கின்றன. மதுவிலக்கைக் கொண்டுவந்தால், இந்த வரி வருவாய் இழப்புக்கு மாற்று வழி என்ன என்பதுதான் அவர்கள் வைக்கும் மிக முக்கியக் கேள்வி.
உண்மைதான். ஆனால், தீர்வே இல்லாத கேள்வி அல்ல இது. மதுவிலக்கு கொண்டுவருவதால் ஏற்படும் வருவாய் இழப்பை செலவுகளைக் குறைப்பது, புதிய வருவாய் இனங்களைப் பெருக்குவது ஆகிய இரு வகைகளில் ஈடுகட்டலாம். அதற்கு முன் அரசின் செலவுகள் எப்படியிருக்கின்றன என்று பார்ப்போம்.
2015-16-ம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டின்படி அரசின் முக்கியமான நான்கு வகைச் செலவுகள் இவை:
* அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.41,215 கோடி, ஓய்வூ தியமாக ரூ.18,667 கோடி என மொத்தம் ரூ.59,882 கோடி ஒதுக்கப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில் 41% இது.
* இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.59,185 கோடி. மொத்த பட்ஜெட்டில் 40% இது.
* கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவசப் பொருட்களை விநியோகிக்க, பராமரிக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.42,441 கோடி. அதாவது, ஆண்டுக்குச் சராசரியாக ரூ.8,488 கோடி. மொத்த பட்ஜெட்டில் 7% இது.
* 2015-16-ம் ஆண்டு கட்டப்படவுள்ள வட்டி ரூ.17,856 கோடி. மொத்த பட்ஜெட்டில் 12% இது.
செலவு என்று பார்த்தால், முதல் வகை செலவான அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம். இவற்றில் கை வைக்க இயலாது. அடுத்ததாக இலவசங்கள், மானியங்கள். இங்கே நமக்கு ஒரு தெளிவு தேவைப்படுகிறது. இவற்றில் எதெல்லாம் சமூகநல நோக்கு கொண்டவை, எவையெல்லாம் ஓட்டு வங்கி நோக்கு கொண்டவை?
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், புத்தகப் பை போன்ற விலையில்லாப் பொருட்கள்; முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உதவிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும். அதேசமயம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு, மடிக்கணினி வழங்குவது ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலான வீடுகளில் இவை எல்லாம் `ஸ்டெப்னி'யாக இருக்கின்றன என்பதுதான் உண்மையான கள நிலவரம்.
கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் மட்டும் மேற்கண்ட திட்டங்களுக்காக ரூ.18,749 கோடி செலவாகி உள்ளது. இதனைத் தவிர்த்தாலே ஆண்டுக்கு சுமார் ரூ. 3,750 கோடியைச் சேமிக்கலாம்.
அடுத்து, இலவசங்களை விநியோகிக்க, பராமரிக்க ஆகும் செலவு. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்குச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.42,441 கோடி. ஆண்டு சராசரி ரூ.8,488 கோடி. அத்தியாவசியமான இலவசங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அநாவசியமான இலவசங்களைத் தவிர்த் தாலே அவற்றை விநியோகிக்க, பராமரிக்க ஆகும் செலவு சுமார் 50% குறையும். அதாவது, ஆண்டுக்கு ரூ.4,244 கோடி ரூபாயை இதன் மூலம் சேமிக்கலாம்.
இன்னும் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனையெத்தனை ஓட்டைகள் இருக்கின்றன தெரியுமா?
அத்தியாவசியமான இலவசங்களை வைத்துக் கொண்டு, அநாவசியமான இலவசங்களைத் தவிர்த்தாலே சுமார் 50% செலவு குறையும்.
தெளிவோம்...
டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT